உள்துறை அமைச்சகம்

காவல் துறை நவீனமயமாக்கத்துக்கான நிதி ஒதுக்கீடு: மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தகவல்

Posted On: 10 FEB 2021 3:51PM by PIB Chennai

மத்திய ஆயுதப்படைகள், மாநில காவல்துறைகள் நவீனமயமாக்கம் குறித்து மத்திய உள்துறை இணையமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது :

* காவல் துறைகள் நவீனமயமாக்கம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். காவல்துறை மற்றும் பொது ஒழுங்கு ஆகியவை இந்திய அரசியல் சாசனத்தின் 7வது பிரிவின் படி மாநிலங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். ஆனாலும், காவல்துறையை நவீனமயமாக்க மாநிலங்களுக்கு மத்திய நிதியுதவி அளிக்கப்படுகிறது.

இமயமலைப் பகுதி மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு  90:10 என்ற விகிதத்தில்  மத்திய நிதி வழங்கப்படுகிறது. 90 சதவீதத்தை மத்திய அரசு வழங்கும். 10 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் ஏற்கும். இதர மாநிலங்களுக்கு 60:40 என்ற விகிதத்தில் நிதி வழங்கப்படுகிறது

* காவல்துறை நவீனமயமாக்க திட்டம் அமலாக்கத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க உயர்நிலை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

* எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, தேசிய பாதுகாப்புப் படை  போன்ற மத்திய ஆயுத படைகளின் நவீனமயமாக்கத்துக்கு  கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரூ.1053 கோடி செலவிடப்பட்டுள்ளது.

* மாநிலங்களின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கு கடந்த 2019-20 ஆம் ஆண்டில், ரூ.781.12 கோடி வழங்கப்பட்டது.

* 2020-21ஆம் நிதியாண்டில் மாநிலங்களின் காவல்துறை நவீனமயமாக்கத்துக்கான பட்ஜெட் மதிப்பீடு ரூ.770.76 கோடியாக இருந்தது. ஆனால் மாற்றியமைக்கப்பட்ட பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் 4.15 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை செலவிடப்படாமல் உள்ளதால், புதிதாக நிதி வழங்க முடியவில்லை.

* எல்லை பாதுகாப்புப்படை நவீன மயமாக்கத்துக்கு கடந்த 2018 ஆம்  ஆண்டில் ரூ.282.47 கோடி செலவு செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்கள், குண்டு துளைக்காத உடைகள் எல்லை பாதுகாப்புப் படையினருக்கு வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

* பணிச் சூழல் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளாகி மத்திய ஆயுதப்படை அதிகாரிகள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் குறித்து, காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கடந்த 2004 ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதே போன்ற ஆய்வை அகமதாபாத் ஐஐஎம் கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்டது.

தற்கொலைக்கான காரணங்கள் ஆராயப்பட்டு பணிச் சூழலை மேம்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

* மத்திய ஆயுதபடையினரின் விடுமுறை மற்றும் பணி மாற்றத்தில் வெளிப்படையான நடைமுறை கொண்டு வரப்பட்டது. காயமடைந்து மருத்துவமனையில் இருந்தால், அது பணியில் இருப்பதாக கணக்கில் கொள்ளப்பட்டது.

* மத்திய ஆயுதப்படையினரின் குறைகளை கேட்க, அதிகாரிகள் தொடர்ந்து கூட்டங்கள் நடத்துகின்றனர்.

* ஆயுதப்படையினருக்கு பணி நேரம் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்டு, போதிய ஓய்வு கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இது போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு மத்திய உள்துறை இணையமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

------


(Release ID: 1696816) Visitor Counter : 234


Read this release in: English , Urdu , Manipuri