ஆயுஷ்
ஆயுஷ் மருத்துவ முறையை உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் ஊக்குவிக்கும் முயற்சிகள் தீவிரம்
Posted On:
09 FEB 2021 12:28PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ஆயுர்வேத, யோகா & இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி இணை அமைச்சர் (கூடுதல் பொறுப்பு) திரு கிரண் ரிஜிஜூ கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
ஆயுஷ் மற்றும் நவீன மருத்துவத்திற்கிடையே இணக்கமான சூழலை ஏற்படுத்துதல்: நாட்டின் மருத்துவ தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நவீன மருத்துவமும், ஆயுஷும் ஒன்றிணைந்த அணுகுமுறையுடன் இணைந்து பணியாற்றுவதால் இவை இரண்டுக்கும் இடையே எந்த வெற்றிடமும் இல்லை.
ஆரம்ப சுகாதார மையங்கள், சமூக சுகாதார மையங்கள், மாவட்ட மருத்துவமனைகளில் ஆயுஷ் வசதிகளை ஏற்படுத்தி ஒற்றை சாளர முறையில் நோயாளிகளுக்கு விருப்பமான மருத்துவ முறையை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுஷ் அமைச்சகம், தனது பல்வேறு ஆராய்ச்சி குழுக்களின் வாயிலாக வாழ்க்கைமுறை சார்ந்த நோய்களிலிருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், மற்றும் பக்கவாதம் ஆகியவற்றின் தடுப்பு மற்றும் கண்காணிப்புக்கான தேசிய திட்டத்தை சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதார சேவைகளின் தலைமை இயக்குநகரத்துடன் இணைந்து செயல்படுத்தியது. சித்த மருத்துவத்தையும் நவீன மருத்துவத்தையும் இணைக்கும் வகையில் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம், ராய்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ஆயுஷ் மருத்துவத்தை ஊக்குவித்தல்:
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், சுகாதாரம் மீதான சமூக நுகர்வு குறித்து மேற்கொண்ட ஆய்வின்படி 2017 ஜூலை- 2018 ஜூன் வரையிலான காலத்தில் 95.4% நோய்கள் அலோபதி மருத்துவ முறையிலும், 4.4% நோய்கள் ஆயுஷ் முறையிலும் குணப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் நகர்ப்புறங்களில் வசிக்கும் ஆண்களைவிட ஊரகப் பகுதிகளில் வசிக்கும் ஆண்களும், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் பெண்களைவிட நகரங்களில் வசிக்கும் பெண்களும் ஆயுஷ் மருத்துவத்தில் அதிகமாக சிகிச்சை பெற்றிருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாயிலாக தேசிய ஆயுஷ் இயக்கம் என்ற மத்திய அரசு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமும் அமல்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருந்துகளின் ஊக்குவிப்பு:
ஆயுர்வேதம் உள்ளிட்ட ஆயுஷ் மருத்துவ முறைகளை ஊக்குவிப்பதற்காக தேசிய ஆயுஷ் இயக்கம் செயல்படுத்தப்படுகிறது. இதன்மூலம் ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ முறைகளை மேம்படுத்துவதற்காக
• ஆரம்ப சுகாதார மையங்களில் ஆயுஷ் வசதிகள்
• ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கான பிரத்யேக மாநில அரசு மருத்துவமனைகளை தரம் உயர்த்தல்
• 50 படுக்கைகள் கொண்ட ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவமனையை அமைத்தல்
• மாநில அரசுகளின் இளங்கலை மற்றும் முதுகலை கல்வி நிலையங்களை தரம் உயர்த்தல்
உட்பட ஏராளமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்குள் தேசிய ஆயுஷ் இயக்கத்தின் நிதி உதவியுடன் 12,500 ஆயுஷ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களை இயக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
சர்வதேச அளவில் ஆயுஷ் முறையை ஊக்குவித்தல்:
சர்வதேச அளவில் ஆயுஷ் மருத்துவ முறைக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக பல்வேறு நாடுகளுடன் ஹோமியோபதி மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. நேபாளம், வங்கதேசம், ஹங்கேரி, மலேசியா, மியான்மர், கொலம்பியா உட்பட 25 நாடுகளுடன் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஆயுஷ் கல்வி நிறுவனங்களில் இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவித் தொகையையும் ஆயுஷ் அமைச்சகம் வழங்குகிறது. அமைச்சகத்தின் பல்வேறு முயற்சிகளின் பலனாக நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆயுர்வேத மருத்துவ முறைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதேபோல் யுனானி மருத்துவ முறைக்கு வங்கதேசத்திலும் சித்தாவிற்கு இலங்கையிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
*****************
(Release ID: 1696581)
Visitor Counter : 239