ரெயில்வே அமைச்சகம்

புதிய ரயில்கள் அறிமுகம்

Posted On: 05 FEB 2021 3:55PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் திரு பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.

பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, 2018-19-ஆம் ஆண்டு 266 ரயில்களும், 2019-20-ஆம் ஆண்டு 153 ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஹுமசஃபர், தேஜாஸ், அந்த்யோத்யா, உத்கிரிஷ்ட் இரட்டை அடுக்கு குளிர்பதன பயணிகள் சேவை (உதய்) உள்ளிட்டவற்றை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

கொவிட்-19 பொதுமுடக்கத்தின் போது, 2020 மார்ச் 25 முதல் 2020 மே 31 வரை 53585 சரக்கு ரயில்களும், 3826 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன. 2020 மார்ச் 25 முதல் 2021 ஜனவரி 27 வரை 318142 சரக்கு ரயில்களும், 8899 பார்சல் ரயில்களும் இயக்கப்பட்டன.

பயணிகளின் பாதுகாப்பையும், வசதியையும் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நவீன வசதிகளுடன் கூடிய 63 ஸ்மார்ட் ரயில் பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,900-க்கும் அதிகமான பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வீடு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 2020 மே1 முதல் 2020 ஆகஸ்ட் 31 வரை 4621 சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கியது. இந்த சேவைக்கு குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, அதுவும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படாமல், மாநில அரசுகள் அல்லது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டது. பயணிகளுக்கு இலவசமாக உணவையும் (1.96 கோடி), தண்ணீரையும் (2.19 கோடி பாட்டில்கள்) ரயில்வே வழங்கியது

கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக தனது அனைத்து பயணிகள் சேவைகளையும் 2020 மார்ச் 23 முதல் ரத்து செய்த ரயில்வே, அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி 2020 மே 1 முதல் படிப்படியாக சேவைகளை திரும்ப வழங்கி வருகிறது.

சென்னை புறநகர் ரயில் சேவைகள் 2020 நவம்பர் 23 முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. இதர மாநகரங்களிலும் ரயில் சேவைகள் படிப்படியாக தொடங்கியுள்ளன.

புதிய தடம், அகலப்பாதைக்கு மாற்றம் மற்றும் இரட்டிப்பு பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் (2015-16 முதல் 2019-20) வரை ரூ 1,53,998 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக ரூ 30,798 என்னும் அளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2009-14 காலகட்டத்தில் ஆண்டு சராசரி ஒதுக்கீடு ரூ 11,527 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்த மேலும் விவரங்களை இந்திய ரயில்வே இணையதளமான www.indianrailways.gov.in-இல் பின்வரும் அடுக்கு முறையை பின்பற்றி தெரிந்து கொள்ளலாம்: Ministry of Railways > Railway Board > About Indian Railways > Railway Board Directorates > Finance (Budget) > Pink Book (Year) > Railway-wise Works, Machinery & Rolling Stock Programme (RSP)

                                                                            ****



(Release ID: 1695649) Visitor Counter : 188


Read this release in: English , Marathi , Bengali , Punjabi