ஜவுளித்துறை அமைச்சகம்

ஜவுளித்துறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள்

Posted On: 04 FEB 2021 5:32PM by PIB Chennai

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வ  பதிலளித்த மத்திய ஜவுளி அமைச்சர் திருமதி ஸ்மிரிதி ஜூபின் இரானி, கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.

ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு கொள்கை நடவடிக்கைகளையும், திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் நிதி திட்டம் (ஏ-டுஃப்ஸ்), விசைத்தறி துறையின் வளர்ச்சிக்கான திட்டங்கள் (பவர்-டெக்ஸ்), தொழில்நுட்ப ஜவுளி திட்டம், ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டம் (எஸ் ஐ டி பி), ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா திட்டத்தின் கீழ் ஜவுளி தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதியை அளிப்பதற்கான திட்டம் (சகம்), ஜவுளித்துறையின் திறன் வளர்த்தலுக்கான திட்டம் (சமர்த்), ஜூட், ஐபிடிஎஸ், ஐடபுள்யூடிபி, என் ஈ ஆர் டி பி எஸ், ஆர் ஓ எஸ் சி டி எல், எஸ் பி ஈ எல் எஸ் ஜி யூ போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காகவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மேலும், கொவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட நிலைமையில் இருந்து கைத்தறி நெசவாளர்கள் மீண்டு வருவதற்காக, கீழ்காணும் நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

கண்காட்சிகள், மேளாக்கள் ஆகியவற்றை கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக நடத்த இயலாத காரணத்தால், நெசவாளர்களை சர்வதேச சந்தைகளுடன் காணொலி மூலம் கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு இணைத்து வருகிறது.

2020 ஆகஸ்ட் 7 முதல் 11 வரை இந்திய ஜவுளி கண்காட்சி  நடத்தப்பட்ட நிலையில், சுற்றுலா அமைச்சகத்தால் நடத்தப்பட்ட பாரத் பர்வ் திருவிழாவிலும் கைத்தறி ஏற்றுமதி ஊக்குவிப்பு குழு பங்கேற்றது. உள்ளூர் பொருட்களை மக்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக சமூக வலைதள பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

கைத்தறித் துறையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காதி நூலால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சிகளை நெசவாளர்கள் சேவை மையங்கள் நடத்தின.

சர்வதேச யோகா மற்றும் மகளிர் தின கொண்டாட்டங்களின் போதும், காதி பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு அவற்றின் சிறப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

ஜவுளி ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்காக, சிறப்புத் தொகுப்பு ஒன்றை அரசு அறிவித்தது. மேலும், வரி சலுகைகளையும் 2021 ஜனவரி 1 முதல் அரசு அறிவித்தது. சமீபத்திய பட்ஜெட்டில், மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காக்கள் திட்டத்தை நிதி அமைச்சர் அறிவித்தார்.

2015-16-ஆம் ஆண்டில் $262291.09 மில்லியன் ஆக இருந்த இந்திய ஜவுளி ஏற்றுமதிகளின் மதிப்பு, 2019-20-ஆம் ஆண்டில் $ 313361.04 மில்லியனாக உயர்ந்தது.

------

(Release ID 1695171)



(Release ID: 1695306) Visitor Counter : 151


Read this release in: English , Urdu