ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே துறை குறித்த முக்கிய அறிவிப்புகள்

Posted On: 03 FEB 2021 7:03PM by PIB Chennai

ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையிலும், எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் இந்திய ரயில்வேயை தயார்படுத்துவதற்காகவும், 2021 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களிலும், 2021-22 நிதியாண்டிலும் தனது பல்வேறு மண்டலங்களில் செயல்படுத்துவதற்கான  56 திட்டங்களை இந்திய ரயில்வே அடையாளம் கண்டுள்ளது.

இதுவரை இல்லாத வகையில், மூலதன செலவினங்களுக்காக ரூ 2,15,058 கோடியை இந்தாண்டு ரயில்வே செலவிடவுள்ளது. நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு, & பொது விநியோகம் அமைச்சர் திரு.பியூஷ் கோயல், கிழக்கு மற்றும் மேற்கு பிரத்தியேக சரக்கு ரயில்பாதைகளின்  இரு பிரிவுகளை பிரதமர் திறந்து வைத்துள்ளதாக தெரிவித்தார்.

ரயில்வே சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கிசான் ரயிலின் மூலம் எடுத்து செல்லப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்கள் மீது 50 சதவீதம் மானியம் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

2017-18-ஆம் ஆண்டு 380 ஜோடி ரயில்களில் இருந்த பேண்ட்ரி கார்/மினி பேண்ட்ரி எனப்படும் உணவு வழங்கும் வசதிகள்,  2019-20-ஆம் ஆண்டில் 419 ஜோடி ரயில்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

ரயில் நிலையங்களை முறையாக பராமரிப்பதற்காகவும், பயணிகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. 2015-16-ஆம் ஆண்டு ரூ 1081.21 கோடியாக இருந்த இதற்கான செலவு, 2020-21-ஆம் ஆண்டில் டிசம்பர் 2020 வரையில் ரூ 1646.94 கோடியாக அதிகரித்துள்ளது. 

ரயில் கழிவுகளின் செயல்திறன் மிக்க மேலாண்மைக்கான நடவடிக்கைகள் குறித்து பதிலளித்த அமைச்சர், குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் கழிவுகள் சேகரிக்கப்படுவதாகவும், அதன் பின்னர் அவை உள்ளாட்சி அமைப்புகளின் கிடங்குகளுக்கு அனுப்பப்படுவதாகவும் கூறினார்.

மலைப் பிரதேசங்களில், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் பல ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2020 ஏப்ரல் 1-ன் படி, ரூ 75,795 கோடி மதிப்பில் 19 திட்டங்கள் 2,008 கி.மீ நீளத்திற்கு வடகிழக்கு பிராந்தியத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

விவசாயிகள் தங்களது பொருட்களை பல்வேறு இடங்களுக்கு எளிதாக எடுத்து செல்வதற்காக தொடங்கப்பட்ட கிசான் ரயில் திட்டத்தின் கீழ், 18 வழித்தடங்களில் கிசான் ரயில்கள் இது வரை இயக்கப்பட்டுள்ளன. 157 ரயில் சேவைகளின் மூலம் சுமார் 50,000 டன் விளைபொருட்கள் இது வரை எடுத்து செல்லப்பட்டுள்ளன.

ரயில்வே வலைப்பின்னல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான நீண்ட கால திட்டமிடலுக்காக தேசிய ரயில் திட்டத்தின் வரைவு இறுதி அறிக்கை ரயில்வே அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது.

விரிவாக்கம், திறன் மேம்பாடு, சரக்கு முனையங்களை அமைத்தல், ரயில் நிலைய மறுசீரமைப்பு மற்றும் பல்வேறு நவீனப்படுத்துதல் நடவடிக்கைகளுக்காக 2030-ஆம் ஆண்டு வரை ரூ 50 லட்சம் கோடி முதலீடு ரயில்வேக்கு தேவைப்படுகிறது. இதற்காக பொது, தனியார் கூட்டுமுறையை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694868

-------

 



(Release ID: 1694993) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Manipuri