பாதுகாப்பு அமைச்சகம்
ஏரோ-இந்தியா தொடக்க விழா மற்றும் பாதுகாப்பு துறையின் முக்கிய அறிவிப்புகள்
Posted On:
03 FEB 2021 7:18PM by PIB Chennai
பெங்களூருவில் நடைபெற்றும் ஏரோ-இந்தியா 2021 நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆவணங்கள் மற்றும் செயல்முறைகளை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.
நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தளங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விவரப்குறிப்பை அவர் வெளியிட்டார்.
ஏரோ-இந்தியா 2021-ன் தொடக்க விழாவில், திரு ராஜ்நாத் சிங் முன்னிலையில், 83 தேஜாஸ் இலகு போர் விமானங்களுக்கான ரூ 48,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டுக்கு வழங்கப்பட்டது. தேஜாஸ் விமானங்களை வாங்குவதற்கான ஒப்புதலை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு சென்ற மாதம் ஒப்புதல் அளித்தது.
ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ஏரோ-இந்தியா 2021 வண்ணமயமாக இன்று தொடங்கிய நிலையில், இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்பு திறன்களை ஏரோ-இந்தியா படம்பிடித்து காட்டுவதாக அமைச்சர் கூறினார்.
55 நாடுகளில் இருந்து பிரமுகர்கள் மற்றும் 540-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்குபெறும் இந்த கண்காட்சியின் முதல் நாளான இன்று, கண்கவர் விமான சாகசங்கள் செய்து காண்பிக்கப்பட்டன. இவை பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின.
இதற்கிடையே, நாடாளுமன்றத்தின் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வ பதிலளித்த பாதுகாப்பு இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக் கீழ்கண்ட தகவல்களை அளித்தார்.
பழைய போர் விமானங்களை படையிலிருந்து வெளியேற்றுவதன் மூலமாக ஏற்படும் பற்றாக்குறையை போக்குவதற்காக, தேவையான அளவு போர் விமானங்களை அரசு அவ்வப்போது வாங்கி வருகிறது. அந்த வகையில், 83 தேஜாஸ் விமானங்கள் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்டால் தயாரிக்கப்பட்டு, இந்திய விமானப் படையில் இணைக்கப்படும்.
பல்வேறு கொள்கை நடவடிக்கைகளின் மூலம் பாதுகாப்பு துறையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், ரூ 1,69,750 கோடி மதிப்பிலான 123 பாதுகாப்புத் திட்டங்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளில் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி துறையில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தொழில் உரிமத்தின் நீட்டிப்பிற்கான விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கான செயல்முறையை ஒழுங்குபடுத்துவதற்காக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
உரிமம் பெறுவதற்காக ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தற்காக https://services.dipp.gov.in. என்னும் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு ராணுவ தளவாடங்கள் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் விதமாக, 101 தளவாடங்கள்/தளங்களின் இறக்குமதி மீது தற்காலிக தடையை அரசு விதித்துள்ளது.
பிரதமரின் உதவித்தொகை திட்டத்தின் கிழ், பாதுகாப்புப்படை வீரர்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. உதவித்தொகை உயர்த்தப்பட்டு, 2019-20 கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு மாதம் ரூ 2,500-ம், மாணவிகளுக்கு மாதம் ரூ 3000-ம் வழங்கப்படுகிறது. முன்னர் இது முறையே ரூ 2000 மற்றும் ரூ 2250 ஆக இருந்தது. 2750 பெண்களுக்கு மற்றும் 2750 ஆண்களுக்கு இது வழங்கப்படுகிறது.
மேலும், முன்னாள் படை வீரர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2015-ஆம் ஆண்டிலிருந்து 2,21,180 முன்னாள் படை வீரர்கள், உயிரிழந்த வீரர்களின் மனைவிகள் மற்றும் ஊனமுற்ற முன்னாள் படை வீரர்கள் பலனடைந்துள்ளனர்.
நமது எல்லைப்புறங்களில் உருவாகி வரும் ஆபத்துகள் குறித்து அறிந்து வைத்துள்ள இந்திய ராணுவம், அவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இது குறித்து, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவோடு ஆலோசனை நடத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா, வங்க தேசம், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, பிரான்சு, இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், ஓமன், கத்தார், ரஷ்யா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து, அமெரிக்கா, வியட்நாம் உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1694884
-----
(Release ID: 1694984)
Visitor Counter : 156