நிதி அமைச்சகம்

உலகத் தொற்றின் பாதிப்பை பிரதிபலிக்கும் வகையில் இந்தியாவின் 2021-22ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தில் தீவிர கவனம்

Posted On: 01 FEB 2021 2:04PM by PIB Chennai

நாட்டின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சுகாதாரமும், ஆரோக்கியமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் கருத்தில் கொண்டு நிதிநிலை அறிக்கையில், இதற்கான ஒதுக்கீடு ரூ.2,23,846 கோடி என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு முந்தைய ஆண்டில் ரூ.94,452 கோடியாக இருந்தது.  அதிகரிப்பு சதவீதம் 137 ஆகும்.

பிரதமர் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம்

     சுகாதாரத்துறையின் நீடித்த முன்னேற்றத்திற்கு விரைவான வளர்ச்சிக் கொண்ட நடைமுறைகள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் தற்சார்பு ஆரோக்கிய இந்தியா திட்டம் என்னும் மத்திய அரசின் புதிய திட்டம் ஆறு ஆண்டுகளுக்கு ரூ.64,180 கோடி என்னும் ஒதுக்கீட்டுடன் தொடங்கப்பட உள்ளது. இது தொடக்க இடைநிலை மற்றும் மேல்நிலை சுகாதார நடைமுறை திறன்களை மேம்படுத்தவும், தற்போதுள்ள தேசிய நிறுவனங்களை  வலுப்படுத்தவும், புது வகை நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் புதிய நிறுவனங்களை உருவாக்கவும் உதவும். தேசிய சுகாதார இயக்கத்தின் கூடுதல் திட்டமாக இது இருக்கும்.

இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  1. 17,788 ஊரக, 11,024 நகர்ப்புற சுகாதார ஆரோக்கிய மையங்களுக்கு ஆதரவளித்தல்.
  2. அனைத்து மாவட்டங்களிலும் ஒருங்கிணைந்த பொது சுகாதார ஆய்வகங்கள்,  11 மாநிலங்களில்  3,382 வட்டார  பொது சுகாதார அலகுகளை உருவாக்குதல்.
  3. 602 மாவட்டங்களில்  தீவிர சிகிச்சை மருத்துவமனை  பிரிவுகள், 12 மத்திய நிறுவனங்களை ஏற்படுத்துதல்.
  4. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தை வலுப்படுத்துதல், அதன் ஐந்து மண்டலக் கிளைகள், 20 பெருநகர சுகாதார கண்காணிப்பு அலகுகளை வலுப்படுத்துதல்.
  5. அனைத்து பொது சுகாதார ஆய்வகங்களையும் இணைக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த சுகாதார தகவல் வலைதளத்தை விரிவாக்குதல்.
  6. 17 புதிய பொது சுகாதார அலகுகளை இயக்குதல்,  தற்போதுள்ள 33 பொது சுகாதார அலகுகளை நுழைவு இடங்களில் வலுப்படுத்துதல். அதாவது 32  விமான நிலையங்கள். 11 துறைமுகங்கள், 7 நில சந்திப்புகள்.
  7. 15 சுகாதார அவசர கால அறுவை சிகிச்சை மையங்கள், இரண்டு நடமாடும் மருத்துவமனைகளை அமைத்தல்.
  8. உலக சுகாதார அமைப்பின், தென்கிழக்காசிய பிராந்தியத்துக்கான  மண்டல ஆராய்ச்சி தளமாக ஒரு தேசிய சுகாதார நிறுவனத்தை அமைத்தல், ஒன்பது உயிரி-பாதுகாப்பு 3-ம் கட்ட ஆய்வகங்கள், நான்கு மண்டல நச்சு நுண்மவியல் தேசிய நிறுவனங்களை அமைத்தல்.

போஷான் 2.0 இயக்கம்

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த அம்சமாக ஊட்டச்சத்து உள்ளது.  இதனை வலுப்படுத்தும் வகையில், ஊட்டச்சத்து திட்டம், போஷான் இயக்கம் இணைக்கப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போஷான்  2.0 இயக்கம் என்ற பெயரில் இது ஒருங்கிணைக்கப்படும்.  112 பின்தங்கிய மாவட்டங்களில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போக்க தீவிர உத்தி கையாளப்படும்.

தடுப்பூசிகள்

   மத்திய நிதிநிலை அறிக்கையில் கொவிட்-19 தடுப்பூசிகள் உருவாக்கம் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. “நமது விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாண்புமிகு பிரதமர் தடுப்பூசி போடும் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவர்களது இடையறாத தீவிர முயற்சிகளுக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.    இந்தியா இரண்டு தடுப்பூசிகளை உருவாக்கியுள்ளது. அவை நம் நாட்டு குடிமக்களைப் பாதுகாப்பதுடன், 100க்கும் மேற்பட்ட  நாடுகளின் மக்களையும் பாதுகாக்கிறது என அவர் தெரிவித்தார்.  விரைவில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் வரவுள்ளதாக அவர் கூறினார்.

     2021-22 நிதிநிலை அறிக்கையில், கொவிட்-19 தடுப்பூசிகளுக்கு ரூ.35,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, தற்போது ஐந்து மாநிலங்களில் போடப்படும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிமோனியாவை கட்டுப்படுத்தக்கூடிய நியூமோகோக்கல் தடுப்பூசி விரைவில் நாடு முழுவதும் போடப்படும். இது ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமான குழந்தை இறப்புகளை தவிர்க்கும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

தேசிய செவிலியர் மற்றும் மகப்பேற்று தாதியர் ஆணைய மசோதா.

   ஒருங்கிணைந்த சுகாதார பணியாளர்களுக்கான தேசிய ஆணைய மசோதா, 56 சுகாதாரம் தொடர்பான தொழில்களில்  வெளிப்படைத்தன்மையை உருவாக்கி முறைப்படுத்தும் நோக்கத்துடன் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. செவிலியர் தொழிலில் வெளிப்படைத் தன்மையையும்,  திறமையையும் கொண்டு வரும் நோக்கில் தேசிய  செவிலியர் மற்றும் மகப்பேற்று தாதியர் மசோதாவை அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

  மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில்    இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693906


(Release ID: 1694075) Visitor Counter : 351


Read this release in: English