பிரதமர் அலுவலகம்

இந்திய கிரிக்கெட் அணியின் சமீபத்திய வெற்றி, இளைஞர்களுக்கு உத்வேகம் தருவதாக உள்ளது

Posted On: 22 JAN 2021 1:24PM by PIB Chennai

தற்சார்பு இந்தியா என்ற முயற்சியில், இன்றைய இளைஞர்களின் எண்ணங்களுடன் ஒத்துப்போவதாக உள்ளுணர்வு, செயல்பாடு, எதிர்வினையாற்றுதல் ஆகிய அம்சங்கள் உள்ளன என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். அசாமில் தேஸ்பூர் பல்கலைக்கழகத்தின் 18வது பட்டமளிப்பு விழாவில் காணொலி மூலம் அவர் இன்று உரையாற்றினார்.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கோட்பாடுகளை பிரதமர் இந்த உரையில் விவரித்தார். ஆதார வளங்கள், கட்டமைப்பு வசதிகள், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார, ராணுவ பலங்களை அதிகரிப்பதுடன், உள்ளுணர்வு, செயல்பாடு, எதிர்வினையாற்றுதல் ஆகிய அம்சங்கள் இன்றைய இளைஞர்களின் சிந்தனைகளுடன் ஒத்துப்போவதாக உள்ளன என்று பிரதமர் கூறினார்.

இன்றைய இளம் இந்தியாவானது சவால்களை தனித்துவமான வழியில் எதிர்கொள்ளக் கூடியதாக உள்ளது என்றார் அவர். தனது கருத்திற்கு வலுசேர்க்கும் வகையில், ஆஸ்திரேலியாவில் இளம் இந்திய கிரிக்கெட்  அணி நிகழ்த்திய சாதனையை பிரதமர் குறிப்பிட்டார். இந்திய கிரிக்கெட் அணி பல சவால்களை சந்தித்தது. மோசமான தோல்வியை அவர்கள் சந்தித்தபோதிலும், அடுத்த ஆட்டத்தில் அபார வெற்றி பெற்றனர். பலரும் காயமுற்றிருந்த நிலையிலும், மிகுந்த உறுதியுடன் விளையாடினர். சிரமமான சூழ்நிலைகளால் மனம் தளர்ந்து போய்விடாமல், அதை எப்படி சமாளிப்பது என்பதில் புதிய வழிமுறைகள் மூலம் அவர்கள் செயல்பட்டனர். அதிக அனுபவம் இல்லாத வீரர்களாக இருந்தாலும், அவர்களுடைய மன உறுதி அதிகமாக இருந்ததால், தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டனர். தங்களைவிட சிறந்த மற்றும் அழுத்தத்தைத் தாங்கும் வீரர்களைக் கொண்ட அணியை அவர்கள் வெற்றி கண்டுள்ளனர்.

விளையாட்டுத் துறை என்ற வகையில் மட்டும் நமது வீரர்களின் இந்த வெற்றியை முக்கியமானதாகக் கருதக் கூடாது என்று பிரதமர் குறிப்பிட்டார். அந்த வீரர்களின் செயல் திறன்கள் வாழ்வில் எந்த அளவுக்கு முக்கியமான பாடங்களைக் கற்பித்துள்ளன என்று திரு. மோடி பட்டியலிட்டார். முதலாவதாக, நமது திறமையில் நமக்கு நம்பிக்கை வேண்டும்; இரண்டாவதாக, நேர்மறை சிந்தனை இருந்தால், நேர்மறை முடிவு கிடைக்கும். மூன்றாவது மற்றும் மிக முக்கியமானதாக, ஒருவருக்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தால், ஒன்று பாதுகாப்பானதாக, மற்றொன்று சிரமப்பட்டு பெறும் வெற்றியாக இருந்தால், வெற்றிக்கான தேர்வைத்தான் ஒருவர் தேர்வு செய்ய வேண்டும் என்பதாக உள்ளது. எப்போதாவது தோல்வி அடைவதில் தவறு கிடையாது. சவால்களை எதிர்கொள்ள யாரும் தயக்கம் காட்டக் கூடாது. நாம் அச்சமற்றவர்களாக, நேர்மறையான செயல்பாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும். தோல்வி மற்றும் தேவையற்ற அழுத்தத்தின் அச்சங்களில் இருந்து நாம் விடுபட்டால், அச்சமற்றவர்களாக நாம் உருவாவோம். நம்பிக்கையான மற்றும் இலக்குகளை எட்டுவதில் அர்ப்பணிப்புடன் செயல்படக் கூடியதாக இந்தப் புதிய இந்தியா உள்ளது என்பது, கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் வெளிப்பட்டிருப்பதாகச் சொல்ல முடியாது. நீங்கள் எல்லோரும் இதில் அங்கமாக இருக்கிறீர்கள் என்று மாணவர்களிடம் பிரதமர் கூறினார்.

***

 



(Release ID: 1691212) Visitor Counter : 199