சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ஆம் தேதி அனுசரிப்பு


இந்தியாவில் இதுவரை 54.75 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது

Posted On: 02 DEC 2020 6:24PM by PIB Chennai

ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்படி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 1992-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதும், அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை அனுசரிப்பதன் முக்கிய நோக்கமாகும். இந்த வருடத்திற்கான கருப்பொருள் உத்வேகத்துடன் மீண்டு வருதல்: மாற்றுத் திறனாளிகளை உள்ளடக்கிய, நிலைத்த கொவிட்-19க்குப் பிந்தைய காலத்தை நோக்கி முன்னேறுவதுஎன்பதாகும்.

இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஸ்வவ்லம்பம் என்னும் திட்டத்தின் கீழ் பிரத்தியேக அடையாள அட்டையையும் சான்றிதழையும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கிவருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முகமைகளின் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் தகவல்களும் அவர்கள் சார்பாக இணையதளத்தில் புதுப்பிக்கப்படுகின்றன‌.  இதற்காக அவர்கள் பிரத்தியேக மாற்றுத்திறனாளிகள் அடையாள இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளுக்கு இணையதளம் வாயிலாக அவர்கள் விண்ணப்பிக்கலாம். சான்றிதழ்கள்/ அடையாள அட்டைகளை புதுப்பிப்பதற்கும், ஏதேனும் காரணத்தால் அடையாள அட்டை தொலைந்து விட்டால் புதிய அட்டையைக் கோரியும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதுடன் அவற்றை அச்சிட்டும் கொள்ளலாம். இந்தியாவில் இதுவரை சுமார் 54.75 லட்சம் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2.50 லட்சம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 38 மாநிலங்களில் இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன.

திருச்சிராப்பள்ளியில் மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவியாக ரூபாய் 25 ஆயிரமும், 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படுகிறது. மேலும் சமூக நலத் துறையின் மூலம் பட்டம் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரமும், 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படுகிறது.  திருமணமான ஒரு வருடத்திற்குள் இந்த திட்டத்தில் சேர்வதற்குப் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு சிவராசு தெரிவித்தார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை, திருமண பத்திரிக்கை, பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம், குடும்ப அட்டையின் நகல், கிராம நிர்வாக அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட முதல் திருமணத்திற்கான சான்றிதழ் ஆகியவையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

**********************


(Release ID: 1677778)
Read this release in: English