புவி அறிவியல் அமைச்சகம்
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு
காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவம்பர் 25-ம் தேதி மாலை கரையை கடக்கும்
மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும்
தமிழகம், புதுவையில் ஒரு சில இடங்களில் தீவிர கனமழைக்கு வாய்ப்பு
மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என எச்சரிக்கை
Posted On:
23 NOV 2020 4:17PM by PIB Chennai
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்பு உள்ளது எனவும், இது மாமல்லபுரம்-காரைக்கால் இடையே நவம்பர் 25-ம் தேதி மாலை கரையை கடக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் கூறியுள்ளது.
தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில் வடமேற்கு நோக்கி மணிக்கு 11 கி.மீ வேகத்தில் நகர்ந்து, புதுச்சேரிக்கு கிழக்கு - தென்கிழக்கே 520 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கே 560 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளது.
இது தமிழக மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதியில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரத்துக்கு நடுவே தீவிர புயலாக நவம்பர் 25-ம் தேதி மதியம் கரையை கடக்கும் எனத் தெரிகிறது. அப்போது மணிக்கு 100 கி.மீ முதல் 120 கி.மீ வேகம் வரை காற்று வீசும்.
எச்சரிக்கை:
1) கன மழை எச்சரிக்கை
இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும். ஒரு சில இடங்களில் (புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரும்பலூர் மாவட்டங்களில் 24-ம் தேதியும், கடலூர், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு முதல் அரியலூர் வரை, பெரம்பலூர் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் 25ம் தேதியும் தீவிர கனமழை பெய்யும்.
ஆந்திரப் பிரதேசத்தின் தெற்கு கடலோர பகுதி, ராயலசீமா ஆகிய பகுதிகளில் 25-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையும், தெலங்கானாவில் 26-ம் தேதி முதல் 27-ம் தேதி வரையும் இடியுடன் கூடிய மழை பெய்யும். ஆந்திரப் பிரதேசத்தில் நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் 25-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையும், தெலங்கானாவில் 26-ம் தேதி வரையும் தீவிர கனமழைக்கு வாய்ப்புள்ளது.
2) காற்று எச்சரிக்கை
தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியில் 23-ம் தேதி மணிக்கு 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும். 24-ம் தேதி காலையிலிருந்து மணிக்கு 65 கி.மீ முதல் 75 கி.மீ வரை படிப்படியாக அதிகரிக்கும். இது மேலும் தீவிரமடைந்து நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 100-110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
3) மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு, அதையொட்டியுள்ள மத்திய மேற்கு, தென் கிழக்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா, தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு நவம்பர் 23-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
4) எதிர்பார்க்கப்படும் பாதிப்பு மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கை:
* குடிசை வீடுகள் பலத்த சேதமடையும், இரும்புத் தகடுகள் பறக்கலாம்.
* மின் மற்றும் தொலை தொடர்பு வயர்கள் பாதிப்படையலாம்.
* பாதுகாப்பற்ற வீடுகள் சேதமடையும். சாலைகள் சேதமடையும். சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்.
* மரங்கள் முறியலாம், வேரோடு சாயலாம். வாழை, பப்பாளி, தோட்டக்கலை பயிர்களுக்கு பலத்த சேதம் ஏற்படும்.
* கடலோர மாவட்டங்களில் பயிர்கள் சேதமடையும்.
* நீர் தேங்கங்களின் கரைகள், உப்பளங்கள் சேதமடையும்.
5) மீனவர்களுக்கான எச்சரிக்கை:
* மீன்பிடி நடவடிக்கைகள் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும்.
* கடலோர பகுதிகளில் குடிசைகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்ப வேண்டும்.
* பாதிக்கப்படும் பகுதிகளில் மக்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும்.
* படகுகளில் பயனம் செய்வது பாதுகாப்பற்றது.
வடக்கு சோமாலியா பகுதியில் உருவான ‘கதி’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. இது மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும் எனத் தெரிகிறது. அதனால் மீனவர்கள் ஈடன் வளைகுடா மற்றும் தென்மேற்கு கடல் பகுதிக்கு நவம்பர் 23-ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675093
-----
(Release ID: 1675127)
Visitor Counter : 149