சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

சென்னை விமான நிலையத்தில் தங்கக் கடத்தல் முறியடிப்பு, ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட ஐந்து பேர் கைது

Posted On: 13 NOV 2020 6:40PM by PIB Chennai

சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு ஒப்பந்த தொழிலாளர்களின் உதவியோடு நடைபெறவிருந்த தங்கக் கடத்தல் முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்த ஊழியர்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

துபாயில் இருந்து வந்த 68497 விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலை அடுத்து, சுங்க அதிகாரிகள் கண்காணிப்பை பலப்படுத்தினர். அப்போது, ஒரு பராமரிப்பு தொழிலாளர் கழிவறைக்குள் சென்று அங்கிருந்த ஒரு குப்பைத் தொட்டியில் இருந்து இரண்டு கருப்பு பொட்டலங்களை எடுப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அந்தப் பொட்டலங்களில் இருந்து 1.81 கிலோ எடையுடைய ரூ 93.2 லட்சம் மதிப்புடைய தங்கப் பசை பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் சர்வீஸ் மாஸ்டர் கிளீன் லிமிடெட் என்னும் நிறுவனத்தை சேர்ந்தவரான அந்த பணியாளரின் பெயர் ஞானசேகர் (31) என்பதாகும்.

இந்த பொட்டலங்களை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்பட்ட பயணியான திருச்சியை சேர்ந்த ஷேக் உஸ்மான், 35, வெளியே செல்லும் வழியில் இடைமறிக்கப்பட்டார். அவரை அழைத்துச் செல்ல விமான நிலையத்திற்கு வந்திருந்த சையது இப்ராஹீம் ஷா (21) என்பவரும் பிடிபட்டார். ஞானசேகரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் பேரில் அவரை இவ்வாறு செய்ய சொன்ன அவரது சக பணியாளரான சங்கர் என்பவரும் இவர்களுக்கு மூளையாக செயல்பட்ட மாஸ்டர் கிளீன் லிமிடெட் நிறுவனத்தின் கண்காணிப்பாளர் குமார் என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

மற்றுமொரு தங்க கடத்தல் சம்பவத்தில், அபுதாபியில் இருந்து சென்னை வந்த எமிரேட்ஸ் விமானம் ஈ ஓய் 268-ஐ சோதனையிட்ட போது இரண்டு கழிவறைகளில் இருந்து, மூன்று பொட்டலங்களில் ரூ 2.63 கோடி மதிப்புடைய 5.1 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் ரூ 3.6 கோடி மதிப்புடைய 6.9 கிலோ தங்கம் சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. ஐவர் கைது செய்யப்பட்டனர். 

இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது என்று செய்தி குறிப்பு ஒன்றில் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

**********************

 




(Release ID: 1672716) Visitor Counter : 68


Read this release in: English