தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு நீர்மூழ்கி கேபிள் தொடர்பை ஆகஸ்ட் 10-ஆம் தேதி திங்கட்கிழமை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.


அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அதிவேக அகன்ற அலைவரிசைத் தொடர்பு.
சென்னை-போர்ட் பிளேர் மற்றும் போர்ட் பிளேர் – 7 தீவுகளுக்கு சுமார் 2300 கி.மீ தூரத்துக்கு கடலுக்கடியில் இணைப்புத்தடம்.

மின்னணு நிர்வாகம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பத்துக்கு பெரிய ஊக்கம்.

Posted On: 07 AUG 2020 7:29PM by PIB Chennai

சென்னையையும், போர்ட்பிளேரையும் இணைக்கும் நீர்மூழ்கி கண்ணாடி இழை நார் கேபிள் திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2020 ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்இந்தக் கேபிள் போர்ட் பிளேரையும், சுவராஜ் தீவு, லிட்டில் அந்தமான், கார் நிக்கோபார், கமோர்ட்டா, கிரேட் நிக்கோபார், லாங் தீவு, ரங்கத் ஆகிய தீவுகளையும் இணைக்கிறது. இந்த இணைப்பு விரைவான, நம்பத்தகுந்த மொபைல், லேண்ட் லேன் தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவின் இதர பகுதிகளைப் போல ,அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கும் வழங்கும். இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் போர்ட் பிளேரில் 2018 டிசம்பர் 30-ஆம்தேதி பிரதமரால் நாட்டப்பட்டது.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பின்னர், இந்த இணைப்பு வினாடிக்கு 2 x 200 ஜிகாபைட் அலைவரிசையை சென்னைக்கும், போர்ட் பிளேருக்கும் இடையே வழங்கும். இதே போல 2 x 100 ஜிகாபைட் அலைவரிசையை போர்ட் பிளேருக்கும் இதரத் தீவுகளுக்கும் இடையே வழங்கும். நம்பத்தகுந்த, வலுவான, அதிவிரைவு தொலைத் தொடர்பு மற்றும் அகன்ற அலைவரிசை வசதிகள் இந்தத் தீவுகளில் கிடைப்பது நுகர்வோர் கருத்தில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். மூலோபாய, நிர்வாகக் காரணங்களுக்கும் இது பொருந்தும். செயற்கைக்கோள் மூலம் வழங்கப்படும் 4ஜி மொபைல் சேவையும் பெரும் முன்னேற்றம் காணும்.

தொலைத்தொடர்பு, அகன்ற அலைவரிசை இணைப்பானது தீவுகளில் சுற்றுலா, வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு ஊக்கமளிப்பதுடன், பொருளாதாரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை அளிக்கும். இந்தச் சிறந்த இணைப்பானது, தொலைமருத்துவம், தொலை தூரக்கல்வி போன்ற மின்னணு நிர்வாகச் சேவை விநியோகத்தை ஊக்குவிக்கும். மின்னணு நிர்வாக வாய்ப்புகளில் இருந்து , சிறு வணிக நிறுவனங்கள் பயன் பெறும். கல்வி நிறுவனங்கள் அகன்ற அலைவரிசை வசதியை, மின்னணு கற்றல், அறிவுப்பகிர்வு ஆகியவற்றுக்குப் பயன்படுத்த முடியும். வணிக நடைமுறை அவுட்சோர்சிங் சேவைகள் மற்றும் நடுத்தர, பெரிய நிறுவனங்களும், இந்தச் சிறந்த தொடர்பு வசதியைப் பயன்படுத்தி வருவாய் ஈட்டும்.

மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்தின், தொலைத் தொடர்பு துறையின் கீழ் இயங்கும் யுனிவர்சல் சர்வீஸ்  அப்ளிகேசன் பண்ட் மூலம் மத்திய அரசு இந்தத் திட்டத்துக்கு நிதி வழங்குகிறது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) இத்திட்டத்தை செயல்படுத்துகிறதுஇத்திட்டத்திற்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை டெலிகம்யூனிகேசன்ஸ் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் ( டிசிஐஎல்) வழங்குகிறது. சுமார் 2300 கி.மீ தூரத்துக்கு , ரூ.1224 கோடி செலவில் கடலுக்கடியில் நீர்மூழ்கி கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டம் குறித்த காலத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

*******



(Release ID: 1644268) Visitor Counter : 125