சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

பிரதமர் குசும் திட்டம் சூரிய சக்திப் பம்புகளை அமைப்பதற்கு 70 சதவிகித அரசு மானியம் வழங்கப்படுகிறது

Posted On: 17 JUL 2020 5:07PM by PIB Chennai

சூரியசக்திப் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, புதிய, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித் துறைக்கான மத்திய அமைச்சகம் பிரதமர் குசும் (பிரதான் மந்திரி கிசான் ர்ஜா சுரக்ஷா ஏவம் உதான் மகாப்யான்) திட்டத்தை சென்ற ஆண்டு துவக்கியது. 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 34 ஆயிரத்து 422 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசு நிதி ஆதரவுடன், 25 ஆயிரத்து 750 மெகாவாட் திறன் கொண்ட சூரியசக்தி மற்றும் இதர புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்திறனைக் கூடுதலாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் மூன்று பாகங்களைக் கொண்டது. முதல் பாகம் : 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட கிரிட் இணைப்பு கொண்ட, நிலத்தில் பதியப்பட்ட, புதுப்பிக்கக்கூடிய, மையப்படுத்தப்படாத மின் லைகளை அமைத்தல் - ஒவ்வொரு ஆலையும் 2 மெகாவாட் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது பாகம்:  ஒவ்வொன்றும் 7.5 குதிரைத் திறன் கொண்ட, சூரிய சக்தியால் இயங்கக்கூடிய, தனித்தியங்கும் 17.50 லட்சம் விவசாயப் பம்புகள் அமைத்தல். மூன்றாவது பாகம்: ஒவ்வொன்றும் தனித்து 7.5 குதிரைத் திறன் கொண்ட, கிரிட் தொடர்பு கொண்ட 10 லட்சம் விவசாயப் பம்புகளை சூரிய சக்தியால் இயங்கச்செய்வது.

இரண்டாம் பாகத் திட்டப்படி தனிப்பட்ட விவசாயிகளுக்கு 7.5 குதிரைத்திறன் கொண்ட சூரியசக்தியால் இயங்கும் விவசாயப் பம்புகளை அமைக்க ஆதரவளிக்கப்படும். 20 லட்சம் விவசாயிகளுக்கு, சூரியசக்தி பம்புகளைப் பெறுவதற்காக மானியம் வழங்கப்படும். கிரிட் தொடர்பு கொண்ட பம்பு செட்டுகளை சூரியசக்தியால் இயங்குபவையாக மாற்றுவதற்கு 15 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் குசும் திட்டத்தின் கீழ் உதவியளிக்கப்படும். விவசாயிகள் தங்களின் தரிசு நிலங்களில் சூரியசக்தியின் மூலம் மின்உற்பத்தி செய்யும் திறன் பெற்று, அதை மின்சார கிரிட் மூலம் விற்பனை செய்யமுடியும்.

 

தமிழ்நாட்டில் பிரதமர் குசும் திட்டம், வேளாண் பொறியியல் துறை மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 17,500 சூரியசக்திப் பம்புகள் நிறுவப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் மத்தியஅரசு 30 சதவிகிதம் மானியம் வழங்குகிறது. தமிழக அரசு 40 சதவிகித மானியம் வழங்குகிறது. இந்தத் திட்டத்திற்கு ஆகும் செலவில் 30 சதவீதத்தை மட்டுமே விவசாயி ஏற்றுக் கொள்ளவேண்டும். ஓராண்டு காலத்திற்கு மதிப்பு கொண்ட 5 குதிரைத்திறன் முதல் 10 குதிரைத்திறன் வரை கொண்ட சூரிய சக்தியால் இயங்கக்கூடிய கிரிட் சாராத தனித்த 17500  பம்பு செட்டுகள் நிறுவுவதற்காக, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டது. மையப்படுத்தப்பட்ட ஒப்பந்தப்புள்ளியின் மூலமாக மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி அமைச்சகம் விலைகளையும், நிறுவனங்களையும், ஏற்கனவே இறுதிப்படுத்திவிட்டது. விவசாயிகளுக்கு 70 சதவிகித மானியத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 2019-20ஆம் ஆண்டில் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய 4,000 பம்பு செட்டுகளை நிறுவுவதற்காக 107.31 கோடி ரூபாய் மானிய உதவி வழங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2020-21 ஆம் ஆண்டில் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய 13,500 பம்பு செட்டுகளை அமைக்க மானிய உதவியாக 365.54 கோடி ரூபாய் வழங்கப்படும்

 

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும், திருச்சிராப்பள்ளி விவசாயிகள் திருச்சி, முசிறி, லால்குடி ஆகிய இடங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவிச் செயலாளர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண் துறை அதிகாரிகள் கூறினார்கள். அந்தாநல்லூர் மணிகண்டம், திருவெறும்பூர், மணப்பாறை, வையம்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள், திருச்சி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். சூரியசக்தியால் இயங்கக்கூடிய 5 குதிரைத்திறன் கொண்ட ஏ சி சப்மர்ஜெட் மோட்டார் பம்ப் ஒன்றின் மொத்த விலை 2.38 லட்சம் ரூபாய். இதற்காக இதில் 30 சதவிகிதம் - அதாவது 71 ஆயிரத்து 384 ரூபாய் மட்டுமே விவசாயி செலுத்தினால் போதுமானது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இயற்கைன்னைக்கும், விவசாயிகளுக்கும் காலங்காலமாக முடிவுறாத பந்தம் தொடர்ந்து வருகிறது. மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையிலான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சூரியசக்தி என்பது எப்போதுமே இருக்கக்கூடிய ஒரு சக்தி என்பதால், அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இயற்கைன்னைக்கு சேதம் எதுவும் விளைவிக்காமல், தொடர்ந்து வளர்ச்சி பெறவேண்டும் என்ற ஐக்கிய நாடுகளின் இலக்கின்படி செயல்பட இது பெரிதும் உதவுகிறது.

சூரியசக்தி பேனல்கள்

பிரதமர் குசும் திட்டம்


(Release ID: 1639415) Visitor Counter : 727


Read this release in: English