சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

இசஞ்ஜீவனி ஓபிடி- வீட்டிலிருந்தபடியே பெறும் இலவச தேசிய தொலை மருத்துவ ஆலோசனை சேவை வீடியோ அழைப்பு மூலம் மருத்துவர்களிடம் மக்கள் ஆலோசனை பெற மத்திய அரசின் நடவடிக்கை

Posted On: 29 JUN 2020 6:55PM by PIB Chennai

வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு, மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான இலவச தொலை மருத்துவ ஆலோசனை முறையை இசஞ்ஜீவனி ஓபிடி மூலம் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இயக்கி வருகிறது. www.esanjeevaniopd.in என்ற வலைதளம் வாயிலாக, தேசிய ஆன்லைன் வெளி நோயாளி சேவை செயல்படுத்தப்படுகிறது. இதில், வீட்டில் வசதியாக இருந்தவாறு, மருத்துவர்களிடம் சிகிச்சை பெறமுடியும். இதற்கு, கேமரா-மைக் வசதி கொண்ட மடிக்கணினி அல்லது கணினியுடன், வீடியோ அழைப்பு வசதி கொண்ட டாப்லெட் அல்லது கைபேசி தேவை. ஓடிபி  எனப்படும் ஒரு தடவை கடவுச்சொல் வைத்து வலைதளத்தின் வாயிலாக ஆலோசனை பெறலாம். கூகுள் குரோம் அல்லது மொசில்லா பயர்பாக்ஸ் மென்பொருள் மூலம் வலைதளத்தைத் திறக்கலாம்.

முதலில், இசஞ்ஜீவனி ஓபிடி வலைதளத்தில் பதிவு செய்து, டோக்கன் எண்ணை உருவாக்க வேண்டும். இது தொடர்பான, குறுந்தகவல் வந்ததும், இசஞ்ஜீவனி ஒபிடி வலைதளத்தில் லாக் இன் செய்ய வேண்டும். அது, இயங்கத் தொடங்கும் வரை காத்திருந்து, கால் நவ் பொத்தானை அழுத்த வேண்டும். இறுதியாக, மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். மின்னனு மருந்துச்சீட்டு அளிக்கப்படும். புதிதாக இதைப் பயன்படுத்துபவர்கள் இசஞ்ஜீவனி ஓபிடி வலைதளத்தில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். https://www.esanjeevaniopd.in வலைதளத்துக்கு சென்று, நோயாளியின் பதிவு பொத்தானை அழுத்த வேண்டும். கைபேசி எண்ணை தெரிவித்து, ஒரு தடவை கடவுச்சொல்லுக்கு கிளிக் செய்ய வேண்டும். ஒரு தடவை கடவுச்சொல் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும். இதைப் பயன்படுத்தி, நோயாளி பற்றிய தகவல்களை பூர்த்தி செய்து, டோக்கன் பக்கத்தை உருவாக்க வேண்டும். எக்ஸ்ரே, சோதனைக்கூட ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை ஜேபிஇஜி பிடிஎப் வடிவில் படிவங்களை இணைக்க வேண்டும். பூர்த்தி செய்யும் நடைமுறைகள் முடிந்த பின்னர், நோயாளியின் ஐடி டயலாக் பாக்ஸ் மற்றும் டோக்கன் பொத்தானைப் பெற கிளிக் செய்ய வேண்டும். நோயாளியின் ஐடி, டோக்கன் ஆகியவை குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும். இதேபோல, நோயாளியின் முறை நெருங்கும் போது,  குறுந்தகவல் மூலம் கூறப்படும். இப்போது மீண்டும் நோயாளியின் ஐடியை லாக்கின் செய்த பின்னர், அவர் மெய்நிகர் ஆலோசனை அறையில், வரிசையில் சேர்க்கப்படுவார். கால் நவ் பொத்தான் இயங்கத்தொடங்கியதும், அதை அழுத்தலாம். அந்தப் பொத்தானை அழுத்திய பத்து வினாடிகளில் மருத்துவரின் முகம் திரையில் தோன்றும். ஆலோசனை இவ்வாறு தொடங்கி, முடிவில் மருத்துவர் மின்னணு மருந்துச்சீட்டை தருவார். இதை பதிவிறக்கம் செய்து, அருகில் உள்ள மருந்தகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். தமிழகத்தில், அனைத்து நாட்களிலும், நோயாளிகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆலோசனைகளைப் பெறலாம்.

திருச்சியைச் சேர்ந்த திரு. பாலகோபால், இசஞ்ஜீவனி தேசிய தொலை மருத்துவ முறை,  குறிப்பாக கொவிட்-19 ஊரடங்கு சமயத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்றார். மிகவும் அவசரம் என்றால் தவிர, வெளியில் சென்றால், நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால், மருத்துவமனைகளுக்குச் செல்வது மிகவும் சிரமமான, அதேசமயம் பாதுகாப்பற்ற செயலாகும். ஆகவே, இந்த இசஞ்ஜீவனி ஆன்லைன் தொலை மருத்துவ ஆலோசனை மிகவும் பாதுகாப்பான மற்றும் வாழ்க்கையைக் காப்பாற்றக்கூடியதாகும். மருத்துவர்களிடம் நேரடியாக ஆலோசனை பெற்று, மருந்து எடுத்துக்கொண்டாலோ, சிகிச்சை பெற்றாலோதான் நிவாரணம் கிடைக்கும் என இன்னும் மக்களிடம் அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளதாக திருமதி. கீதா ராணி கூறுகிறார்.  இந்த கொவிட் தொற்று காலத்தில், மருத்துவமனைகளுக்குச் செல்ல முடியாத சூழலில், ஆன்லைன் ஆலோசனை முறையைப் பயன்படுத்த இதுவே சரியான நேரமாகும் என்று அவர் கூறினார். மேலும், மருத்துவர்கள் கொரோனா அறிகுறியுள்ள நோயாளிகளைக் குணப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதால், நேரடியான ஆலோசனை அவசியம் தேவை என்றாலோ அல்லது அறுவை சிகிச்சை அவசியம் என்றாலோ தவிர, ஆன்லைன் மருத்துவ ஆலோசனையைத் தேர்வு செய்வதே புத்திசாலித்தனமாகும்.

 

கொவிட்-19 பொது முடக்கச் சூழலில், இணையதளம் பாதுகாப்பான முறையாக உள்ளது. பொது இடங்களில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்க ஆன்லைன் சேவைகள் பெரிதும் உதவுகின்றன. இணையதள வங்கிச் சேவை, மக்கள் வீட்டிலிருந்தவாறே, பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உதவுகிறது. வீட்டில் பாதுகாப்பாக இருந்தவாறு, அலுவலகக் கூட்டங்களை நடத்த ஜூம், ஸ்கைப், கூகுள் மீட், வாட்ஸ்அப் ஆகியவை உதவுகின்றன. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் கூட்டத்தில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க, காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பலசரக்கு சாமான்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம். வழக்கமான மருத்துவ கவனிப்பு தேவைப்படுபவர்களுக்கு, பெரிய வரப்பிரசாதமாக, மத்திய அரசிடம் இருந்து இந்த இலவச ஆன்லைன் தொலை மருத்துவ ஆலோசனை இப்போது கிடைத்துள்ளது.

இசஞ்ஜீவனிஓபிடி


(Release ID: 1635171) Visitor Counter : 720


Read this release in: English