ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

உத்தேச மொத்த மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனப் பூங்கா பற்றிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய மருந்து துறை அதிகாரிகளுடன் திரு. கவுடா ஆலோசனை

Posted On: 24 JUN 2020 6:10PM by PIB Chennai

நாட்டில் அமைக்க உத்தேசித்துள்ள மூன்று மொத்த மருந்து பூங்காக்கள், நான்கு மருத்துவ சாதனப் பூங்காக்கள் பற்றிய பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக மருந்து துறை அதிகாரிகள் கொண்ட கூட்டத்தை மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு. டி.வி. சதானந்த கவுடா இன்று நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் இணையமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா, மருந்து துறை செயலர் திரு. பி.டி.வகேலா, இணைச் செயலர் திரு. நவ்தீப் ரின்வா, இணை மருந்து கட்டுப்பாட்டாளர் டாக்டர்.எஸ். ஈஸ்வர ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரு. கவுடா, திரு. மாண்டவியா ஆகியோர் பூங்காக்கள் அமையவுள்ள இடங்கள், திறன் அடிப்படையிலான ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகள் தேர்வுக்கான விதிமுறைகள் பற்றி யோசனை தெரிவித்தனர். இந்தப் பூங்காக்களை முறையாக உருவாக்குவதை உறுதி செய்ய சில சிறப்பு வாய்ந்த நன்கு வரையறுக்கப்பட்ட அளவுகோல்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு இருக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்தத் திட்டங்கள் உள்நாட்டு மொத்த மருந்துகள் , மருத்துவ சாதனங்கள் உற்பத்தியில் போட்டியை அதிகரிக்கும் என திரு. கவுடா மேலும் தெரிவித்தார். நவீன பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து வசதிகள் ஆகிய வடிவில் தொகுப்புகளில் கிடைக்கும் பயன்களின் விளைவாக போட்டி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உத்தேச பூங்காக்கள் உருவாகும்போது, இறக்குமதியைச் சார்ந்துள்ள நிலை வெகுவாகக் குறைவதுடன், உலக மருந்து ஏற்றுமதியில் இந்தியாவை முக்கிய நாடாக உருவாக்க பெரிதும் உதவும். தனிநபர் வருமானம் உயர்ந்து வரும் நிலையில், வாழ்வியல் ரீதியிலான நோய்களும் அதிகரித்து வருகின்றன. இதனால், மருந்துகள் மற்றும் ஸ்டென்டுகள் போன்ற சாதனங்களுக்கான செலவுகள் வருங்காலத்தில் அதிகரிக்கும். ஒவ்வொரு குடிமகனுக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்கை செயல்படுத்த மருந்துகளை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் தயாரிப்பது அவசியமாகும். எனவே, இந்தத் திட்டங்கள் இக்காலத்துக்கு அவசியத் தேவையாகும்.



(Release ID: 1634033) Visitor Counter : 160