புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
தொழில் துறை சங்கங்கள், மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் பிரதிநிதிகளுடன் மத்திய மின்துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங், ‘சுயசார்பு இந்தியா இயக்கம்’, ‘’மேக் இன் இந்தியா’ ஆகியவற்றை வெற்றிகரமாக செயல்படுத்தும் வழிவகைகள் குறித்து ஆலோசனை.
Posted On:
23 JUN 2020 8:31PM by PIB Chennai
மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், மின்சார உற்பத்தி மற்றும் அதைக் கொண்டு செல்லும் துறை நிறுவன உரிமையாளர்களுடன் மத்திய மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு (தனிப்பொறுப்பு) அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் இன்று காணொளிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். உற்பத்தி மற்றும் சேவைகளை இந்தியாவிலேயே மேற்கொள்ளும் வகையில், ‘சுயசார்பு இந்தியா’ இயக்கத்தை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மத்திய மின்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.
நமது அனைத்து தொலைத்தொடர்பு, உற்பத்தி, தரவு மேலாண்மை மற்றும் அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் மின் விநியோகத்தை நம்பியிருப்பதால், மின்சாரம் மிகவும் முக்கியமான துறையாக உள்ளது என்று கூறிய திரு. சிங், இதற்கு ஏற்படும் தீங்கு மொத்த நடைமுறையையே வீழ்த்திவிடும் என்று கூறினார். எனவே, ‘சுயசார்பு இந்தியா’ இயக்கத்தில் மின்சாரத்துறை மிகவும் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இதற்கிணங்க அனைத்து தொழில்துறையினரும் பின்வரும் உறுதியை ஏற்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்;
-
- போதுமான உள்நாட்டு திறன் கொண்ட எந்தக் கருவியையோ, பொருள்களையோ இறக்குமதி செய்வதில்லை.
- உள்நாட்டில் கிடைக்காத பொருள்கள், சேவைகளை, இறக்குமதி தவிர்க்க முடியாத நிலையில், 2-3 ஆண்டுகள் என்ற குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இறக்குமதி செய்யலாம். அதற்குள், தற்போதுள்ள கொள்கை, வரி ஊக்குவிப்பு, ஸ்டார்ட் அப்ஸ், விற்பனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆதரவு ஆகியவற்றின் மூலம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்குள் உள்நாட்டிலேயே அவற்றைத் தயாரிக்க முடியும். அதுவரை, இறக்குமதி செய்யப்படும் பொருள்களை இந்தியத் தரத்துக்கு ஏற்றதாக உள்ளனவா என்று இந்திய பரிசோதனைக் கூடங்களில் சோதிப்பதுடன், ஏதேனும் தீங்கிற்கு இடமுள்ளதா எனவும் கண்டறிய வேண்டும்.
- இறக்குமதி செய்தாக வேண்டிய கருவிகள், பொருள்களை மின்துறை அமைச்சகம், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆகியவற்றிடமிருந்து முன்கூட்டியே அனுமதி பெற்ற பின்னரே இறக்குமதி செய்ய வேண்டும்.
தற்போதைய திட்டங்கள், எளிதான கடன் வசதி போன்ற தொழில்துறையினரின் ஆலோசனைகள் கவனமாக ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர், பங்கேற்ற பிரதிநிதிகளிடம் உறுதி அளித்தார். அவர்களது பிரச்சினைகள் குறித்து கவனத்தில் கொள்ளுமாறு மின்துறை செயலர், புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைச் செயலர் ஆகியோருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
****
(Release ID: 1633881)
Visitor Counter : 247