PIB Headquarters

தவறாமல் யோகா செய்தால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.


பல்வேறு ஆசனங்களை சமூக ஊடகத்தில் பகிர்ந்து , யோகா பயிற்சி மேற்கொள்ள பிரதமர் வலியுறுத்தல்.

Posted On: 03 JUN 2020 3:24PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் சிறந்த வழி, நிரூபிக்கப்பட்ட விதிமுறைகளின்படி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது தான். அண்மையில், மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, யோகா மக்களின் வாழ்க்கையுடன் பிரிக்க முடியாததாக மாறியுள்ளது என்றும், சுகாதார விழிப்புணர்வும் அதிகரித்துள்ளது என்றும் கூறினார். ஊரடங்கின் போது, மக்கள் ஆன்லைன் வகுப்புகள் அல்லது ஆன்லைன் வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் யோகா பயிற்சிகளைச் செய்து வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். ஒட்டுமொத்த உடல் நலத்தை அதிகரிக்க, வாரத்துக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ யோகா நித்ரா செய்யவேண்டியதன்  முக்கியத்துவத்தை முன்னதாக டுவிட்டர் மூலம் பிரதமர் தெரிவித்திருந்தார். அது மேலும் மனதை லேசாக்குவதுடன், அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கிறது. சூரிய வணக்கம் உள்பட பல்வேறு யோகாசனங்களின் அனிமேசன் வீடியோ படங்களை வெளியிட்டதுடன், அவர் யோக நித்ரா குறித்த வீடியோவையும் பகிர்ந்து கொண்டார். மரத்தின் தோற்றம் போன்ற விருக்சாசனா மூளைத் தசைகளுக்கு வலிமையைத் தருவதுடன், கால் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.

 

திருச்சி ஶ்ரீரங்கத்தின் விவேகானந்தா யோகா மையத்தின் யோகா மாஸ்டர் டாக்டர். சந்தானகிருஷ்ணன், பஸ்திரிகா பிராணாயாமம் என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மிக முக்கியமான பயிற்சியாகும் என்று கூறினார். ஆழந்த மூச்சுப்பயிற்சி நுரையீரல்களில் உள்ள நச்சுப்பொருள்கள் மற்றும் அசுத்தங்களை அகற்ற உதவும். வஜ்ராசனா அல்லது சுகாசனாவுடன் பஸ்திரிகா பிராணாயாமம் செய்யலாம். மூச்சை ஆழ்ந்து உள்ளிழுத்தல், அதனைக் கட்டாயமாக வெளிக்கொணர்தல் மூலம் நுரையீரல்களின் அனைத்து அசுத்தங்களையும் வெளியேற்ற முடியும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க , யோகாவின் முக்கியத்துவத்தை நமது பிரதமர் வலியுறுத்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். நுரையீரல்கள் சிறப்பாக இயங்க, பஸ்திரிகா பிராணாயாமத்தை தினசரி 20 முறை செய்யலாம் என அவர் கூறினார். மற்றொரு யோகா மாஸ்டரான டாக்டர் ஶ்ரீதர், ஹங்கினி யோகா முத்ரா செய்யுமாறு மாணவர்களைக் கேட்டுக்கொண்டார். மாணவர்களின் நினைவாற்றலை இந்த யோகா முத்ரா அதிகரிக்க உதவும் என்று அவர் தெரிவித்தார். படிப்பதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பு இந்த முத்திரையை சிறுவர்கள் செய்யவேண்டும் என்று அவர் கூறினார். ஊரடங்கின் போது காலை நடைப்பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளதால், உங்கள் உடலைத் தகுதியுடன் வைத்திருக்க உட்கடாசனா மிகச்சிறந்த வழி என்று அவர் கூறினார்.  

 

திருச்சியைச் சேர்ந்த இல்லத்தரசி திருமதி பிரமிளா, ஊரடங்கின் போது மனதை லேசாக வைத்திருக்க யோகா மிகவும் உதவுகிறது என்று கூறினார். நமது தடையற்ற சுவாசத்துக்கு , மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியம் என பிரதமர் சுட்டிக்காட்டியதை அவர் நினைவு கூர்ந்தார். கொவிட்-19 நமது சுவாச உறுப்புகளைப் பாதிக்கும் என்று கருதப்படுவதால், தொற்றுக்கு எதிராகப் போராட யோகா சிறந்த வழிமுறையாக உள்ளது. கபால்பதி, அனுலோம் விலோம் பிராணாயாமம், பஸ்திரிகா, ஷீடாலி, பிரமரி யோகாசனங்கள் உடல் நலத்துக்கு மிகவும் பயன் விளைக்கும் சில ஆசனங்களாகும்.

ஷீஷுவாசனா மார்பை சுத்தப்படுத்துவதுடன், மனதுக்கு நிம்மதியை அளிக்கும். சேது பந்தாசனா ரத்த ஓட்டத்தை சீராக்கும், புஜங்காசனா, மத்யாசனா, தனுராசனா ஆகியவை உடலை வலுப்படுத்தக்கூடியவை. ஆனால், இந்த ஆசனங்களை யோகா மாஸ்டரின் முறையான வழிகாட்டுதலின் மூலம் செய்ய வேண்டும்.

ஜூன் 21-ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக உலகம் முழுவதும் ஐநா சபை கொண்டாடுகிறது. நமது பிரதமர் திரு. நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கிணங்க, இந்த தினம் அறிவிக்கப்பட்டது. கோடைக் காலத்தில் நீண்ட நாளாக அது கருதப்படுவதால், அன்றையதினம் யோகா தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்ற ஐநா சபை 2015-ஆம் ஆண்டு முதல், ஜூன் 21-ஆம் தேதியை யோகா தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகிறது. கொடிய உயிர்கொல்லித் தொற்றுக்கு எதிராக உலகமே போரில் ஈடுபட்டுள்ள நிலையில், நோயைக் குணப்படுத்துவதாகவும், எதிர்ப்பு சக்தியை ஊக்குவிப்பதாகவும் செயல்படும் யோகா நமது பாரம்பரியத்தின் கொடையாகும். அது தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது.

ஶ்ரீரங்கம் யோகா மையத்தில் டாக்டர் சந்தானகிருஷ்ணன், டாக்டர் ஶ்ரீதர் உட்கடாசனா

பிரதமரின் யோகப் பயிற்சி பற்றிய அனிமேசன் படங்கள்



(Release ID: 1629102) Visitor Counter : 516


Read this release in: English