கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
இந்தியா, வங்கதேசம் இடையே உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வணிகத்துக்கான உடன்படிக்கையின் இரண்டாம் பிற்சேர்க்கை, 2020
Posted On:
20 MAY 2020 3:53PM by PIB Chennai
வங்கதேச மக்கள் குடியரசுக்கும், இந்தியக் குடியரசுக்கும் இடையே இரு நாடுகளின் நீர்வழிகளின் மூலமாகப் பயணத்துக்கும், வணிகத்துக்கும் நீண்ட நெடிய உடன்படிக்கை இருக்கிறது. முதல் முறையாக 1972இல் (வங்க தேசம் சுதந்திரம் அடைந்தவுடன்) கையெழுத்திடப்பட்ட இந்த உடன்படிக்கை, இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் வரலாறு மற்றும் தோழமையின் பிரதிபலிப்பு ஆகும். பல்வேறு பங்குதாரர்களுக்கு நீண்ட கால உத்தரவாதம் அளிக்கும் விதமாக, மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தானாக புதுப்பித்துக் கொள்ளும் வகையில் கடைசியாக 2015ஆம் ஆண்டு இந்த உடன்படிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு புதுப்பிக்கப்பட்டது.
ஆலோசனைகளின் மூலம் இந்த உடன்படிக்கையை இன்னும் செயல்திறன் மிக்கதாக ஆக்க, உடன்படிக்கை நிலைக்குழு மற்றும் கப்பல் துறை செயலாளர் அளவிலான பேச்சுவார்த்தைகளே இந்த இரு நட்பு நாடுகளுக்கிடையேயான நிறுவன ஏற்பாடுகளாகும். இந்தியாவுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே அக்டோபர், 2018இல் புது தில்லியிலும், டிசம்பர், 2019இல் டாக்காவிலும் இது தொடர்பாக நடைபெற்றக் கூட்டங்களில், உடன்படிக்கை வழிகள், புது வழிகளைச் சேர்த்தல் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக வசதிக்காக புதிய கப்பல் நிறுத்தங்களை அறிவித்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உடன்படிக்கையின் இரண்டாம் பிற்சேர்க்கை இன்று கையெழுத்திடப்பட்டதன் மூலமாக இந்த முடிவுகளுக்குச் செயல்வடிவம் அளிக்கப்பட்டது.
இந்திய வங்கதேச உடன்படிக்கை வழிகள் எட்டிலிருந்து பத்தாக அதிகப்படுத்தப்படுவதோடு, ஏற்கனவே இருக்கும் வழிகளோடு புதிய வழிகளும் சேர்க்கப்படுகின்றன.
மேம்படுத்தப்பட்ட நம்பகத்தன்மையோடும், குறைந்த செலவிலும் இரு நாடுகளுக்கிடையேயான வணிகத்தை மேலும் சுலபமானதாக ஆக்குவதற்கு உடன்படிக்கையில் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள் வழி வகுக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் சார்பில் வங்கதேசத்துக்கான மேன்மைமிகு இந்தியத் தூதராலும், வங்கதேச மக்கள் குடியரசின் சார்பில் செயலாளராலும் (கப்பல் துறை) உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வணிகத்துக்கான உடன்படிக்கையின் இரண்டாம் பிற்சேர்க்கை டாக்காவில் 20 மே, 2020 அன்று கையெழுத்திடப்பட்டது.
***
(Release ID: 1625660)
Visitor Counter : 346