PIB Headquarters

ஒருங்கிணைந்த வேளாண் நடைமுறை: கால்நடை வளர்ப்பு மூலம் வேளாண் வருவாயை பன்முகமாக்குதல்

Posted On: 16 MAY 2020 3:12PM by PIB Chennai

விவசாயிகளுக்காக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள், நிச்சயமாக அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கக் கூடியவையாக இருக்கும். கோமாரி நோயைக் கட்டுப்படுத்த தேசிய விலங்குகள் நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.13,343 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டம், நிச்சயமாக மாடுகள் வளர்ப்போருக்கு உதவியாக இருக்கும். மாடுகள், ஆடுகள், பன்றிகள் மற்றும் எருமைகளுக்கு 100 சதவீத தடுப்பூசி போடுவதை இத்திட்டம் உறுதி செய்கிறது. பொது முடக்க நிலை காலத்தில் 111 கோடி லிட்டர் பால் கூடுதலாகக் கொள்முதல் செய்து ரூ,4100 கோடி பட்டுவாடா செய்யப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் தெரிவித்தார். பால் கூட்டுறவுகளுக்கு ஆண்டுக்கு 2 சதவீத வட்டி தள்ளுபடி அளிக்கும் ஒரு புதிய திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கான திட்டங்களை அறிவித்தமைக்காக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனுக்கு நன்றி தெரிவிப்பதாக திருச்சி லால்குடியைச் சேர்ந்த திரு பாலமுருகன் கூறினார். வட்டித் தள்ளுபடி சலுகையால் மாடுகள் வளர்க்கும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். போதிய அளவுக்கு பால் உள்ள போதிலும், விற்பனை அதிக அளவில் இல்லை என்று அவர் தெரிவித்தார். ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் செய்வதால், முடக்கநிலை காலத்தில் தங்களுடைய துன்பங்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இயற்கை வள ஆதாரங்கள் மேலாண்மை மற்றும் பன்முக வாழ்வாதாரங்கள் மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒருங்கிணைந்த வேளாண்மை நடைமுறையை அரசு அமலாக்கம் செய்கிறது. முதலில் இத்திட்டம் தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் அமலலாக்கப்பட்டு, பின்னர் ஏறத்தாழ 29 மாவட்டங்களில் அமல் செய்யப்படுகிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த வேளாண்மை நடைமுறையில், விவசாயம், தோட்டக்கலை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளின் கீழ் பல்வேறு திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த வேளாண்மை நடைமுறை முன்னோடித் திட்டமாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியத்தில் அமல் செய்யப்படுவதாக கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த டாக்டர் சுகுமார் தெரிவித்தார். இத்திட்டத்தின் கீழ் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார். அவர்களுக்கு மூன்று பிரிவுகளில் கால்நடை பராமரிப்புத் துறை உதவிகள் அளிக்கிறது. கறவை மாடுகளுக்கு தலா ரூ.15,000 என இரண்டு மாடுகளுக்கு மானியம், 10 பெண் ஆடு அல்லது கிடாவுக்கு ரூ.15000 மானியம், கோழிகள் வளர்ப்புக்கு ரூ.6000 மானியம் என இவை வழங்கப் படுகின்றன. ஒட்டுமொத்தமாக ஒரு பயனாளிக்கு ரூ.51,000 மானியமாக அளிக்கப்படுகிறது.

கால்நடை உதவி மருத்துவரின் உதவியுடன் சந்தையில் இருந்து பயனாளிகள் மாடு, ஆடுகள் வாங்கலாம். அவற்றின் ஆரோக்கியத்தை மருத்துவர் பரிசோதித்து சான்றளிப்பார். பயனாளியின் வீட்டுக்கு அவற்றைக் கொண்டு வந்த பிறகு, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர், வேளாண் துறை உதவி இயக்குநர், தோட்டக்கலைத் துறை அதிகாரி ஆகியோர் ஆய்வு செய்வார்கள். காப்பீடு செய்தல், கோழிகளாக இருந்தால் கூண்டு ஏற்பாடு ஆகியவற்றை பூர்த்தி செய்த பிறகு, அதற்கான மானியம் பயனாளியின் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். வேளாண் துறை மண்ணச்சநல்லூர் உதவி இயக்குநர் திரு தாகூர், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் சுகுமார், வேளாண்மை அதிகாரி உமா மகேஸ்வரி, மண்ணச்சநல்லூர் கால்நடை பராமரிப்பு உதவி மருத்துவர் டாக்டர் திவ்யபாரதி, உதவி வேளாண் அதிகாரி திரு பார்த்திபன் ஆகியோர் மண்ணச்சநல்லூர் ஒன்றியம் உளுந்தன்குடி கிராமத்தில் பல்வேறு பயனாளிகளின் இடங்களில் இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.

தாம் உற்பத்தி செய்லும் பாலை சொசைட்டியில் கொடுத்துவிடுவதாக கரூர் குளித்தலையைச் சேர்ந்த மாடு வளர்க்கும் விவசாயி திரு கோவிந்தன் தெரிவித்தார். முடக்கநிலை காலத்தில் மாட்டுத் தீவனத்தின் விலை உயர்ந்துவிட்டதாகத் தெரிவித்த அவர், அரசாங்கம் பண உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். பால்வளத் துறை மற்றும் கால்நடைத் தீவனத் துறையில் தனியார் முதலீட்டுடன், நிதியமைச்சர் அறிவித்துள்ள ரூ.15,000 கோடி திட்டங்கள், கோவிந்தன் போன்ற விவசாயிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.

விவசாயிகளின் வருமான வாய்ப்புகளை பன்முகத்தன்மையானதாக ஆக்கும் வகையில், வேளாண்மை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைக்கு மத்திய அரசு உத்வேகம் அளித்து வருகிறது.

 

T (4).jpeg

திருச்சி உளுந்தன்குடி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் துறை மண்ணச்சநல்லூர் உதவி இயக்குநர் திரு தாகூர், கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் டாக்டர் சுகுமார், வேளாண்மை அதிகாரி உமா மகேஸ்வரி, உதவி வேளாண் அதிகாரி திரு பார்த்திபன் ஆகியோர்

 

T (3).jpeg

T (2).jpeg

 

T (1).jpeg



(Release ID: 1624386) Visitor Counter : 1446


Read this release in: English