PIB Headquarters

கொவிட்-19 தொற்றை முறியடிக்க பிரதமர் கேர்ஸ் நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும் பொதுமக்கள்

Posted On: 06 MAY 2020 3:57PM by PIB Chennai

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், அரசின் எந்தத் திட்டத்தையும் வெற்றிகரமாகச் செயல்படுத்த மக்களின் பங்கேற்பு மிகவும் அவசியமாகும். கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பேரிடரை இந்தியா சந்தித்து வரும் நிலையில், இது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியாத சூழலில், நிதித்தேவை மிகவும் அதிகரித்துள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள நிலை போன்ற எந்தவித நெருக்கடியையும் சமாளிப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்திய அரசு இதற்கென பிரத்யேக நிதி தேவை என உணர்ந்துள்ளது. இதற்காக, பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசர கால நிவாரண நிதி ( பிரதமர் கேர்ஸ் நிதி) என்ற பெயரில் 2020 மார்ச் 28-ஆம் தேதி இந்த நிதி உருவாக்கப்பட்டது.

இந்த நிதி முற்றிலும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் தன்னார்வப் பங்களிப்பைக் கொண்டதாகும். இதற்கு பட்ஜெட் ஒதுக்கீடு எதுவும் கிடையாது. பிரதமர் கேர்ஸ் நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் 1961-ஆம் ஆண்டின் வருமானவரி சட்டத்தின் படி, 100 சதவீதம் 80ஜி பயன்களைப் பெறுவதற்குத் தகுதி பெறும். மேலும் இந்த நிதிக்கு வழங்கப்படும் நன்கொடைகள் 2013 நிறுவனங்கள் சட்டத்தின் படியான பெருவணிக நிறுவன சமூகப் பொறுப்புடைமை செலவாகக் கருதப்பட்டு விலக்கு பெற தகுதியுடையவை ஆகும்.

பிரதமர் கேர்ஸ் நிதி பிசிஆர்ஏ-வின் கீழும் விலக்கு பெறுகிறது. வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கு தனிக் கணக்கு திறக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்கு ரூ. 10 என்ற மிகக் குறைந்த பங்களிப்பும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலையில், தானாக முன்வந்து நன்கொடை வழங்கும் பொதுமக்களின் எழுச்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். பிரதமர் கேர்ஸ் நிதிக்கு ரூ.501 வழங்கியவருக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ள பிரதமர், வழங்கும் தொகையில் பெரிதோ, சிறிதோ இல்லை என்றும், ஒவ்வொரு நன்கொடையும் பெரிதே என்றும் அது கொவிட்-19ஐ முறியடிக்க மேற்கொள்ளப்படும் கூட்டு உறுதியைப் பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார். பெரிய தொகையோ அல்லது  குறைந்த தொகையோ, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் இந்த நிதிக்குப் பங்களிக்க முன்வந்துள்ளனர்.

கோவை கள விளம்பரப் பிரிவினர் இடையே பேசிய கோவை சௌரிபாளையம் திண்பண்டக் கடை உரிமையாளர் இந்துமதி, கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதற்கு பிரதமர் கேர்ஸ் நிதிக்குத் தான் வழங்கிய நன்கொடை உதவட்டும் என்று கூறினார்.

பெருந்தொற்றுக்கு முடிவு கட்டுவதற்கான தீர்வுக்கு மிகவும் தேவை என்பதால், பிரதமர் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை வழங்கியதில் மகிழ்ச்சி என கோவையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் பிரபாகர் கூறினார். இந்த உன்னதமான நோக்கத்துக்கு பங்களிக்க மக்கள் முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கோவை தீத்திப்பாளையத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி யுவந்திகா, நாடு சிக்கலான நிலையை எதிர்கொண்டிருக்கும் சமயத்தில், தனது செலவுக்கு வழங்கப்பட்ட முழுத்தொகையையும் பிரதமர் நிதிக்கு அளித்ததாகக் கூறியதுடன், மற்றவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நிது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தற்போதைய பொது சுகாதார அவசர நிலையில், சுகாதார நலவாழ்வு அல்லது மருந்து வசதிகளை மேம்படுத்துதல், இதர தேவையான உள்கட்டமைப்பு, தடுப்பு மருந்து உருவாக்கத்துக்கான ஆராய்ச்சிக்கு நிதியுதவி அல்லது மக்களுக்கு எந்த விதத்திலும் உதவுவது உள்ளிட்ட நிவாரணம் மற்றும் உதவி நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதி நிச்சயம் பயன்படும். சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரின் பரவலான ஆதரவுடன், நாடு அதன் குடிமக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, இந்தப் பேரிடரிலிருந்து விரைவில் விடுபடும். 

நன்கொடை வழங்கியவரைப் பாராட்டும்  மாண்புமிகு பிரதமர்

..திண்பண்ட கடை உரிமையாளர் இந்துமதி, தனது நன்கொடை தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உதவும் என்கிறார்

மென்பொருள் பொறியாளர் பிரபாகர், தனது நன்கொடை பேரிடரை முறியடிக்க உதவும் என்றார்

சிக்கலான நேரத்தில் நாட்டுக்கு உதவுவது தனது  கடமை என்று 9 வயது சிறுமி யுவந்திகா கூறுகிறார்



(Release ID: 1621344) Visitor Counter : 164


Read this release in: English