PIB Headquarters

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகம்

Posted On: 05 MAY 2020 1:46PM by PIB Chennai

கொரரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது ஊரடங்கு தொடர்வதால், மத்திய அரசின் பல்வேறு கட்டுமான நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் பல இடங்களில் தவித்து வருகின்றனர்.

 

அவர்களது சிரமத்தைக் குறைக்கும் வகையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான மத்திய துணைத் தலைமை தொழிலாளர் நல ஆணையர் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை  எடுத்துள்ளார். தமிழகத்தில், சென்னை முதல் கன்னியாகுமரி வரை, 59 பணியிடங்களில் வேலை பார்த்து வந்த மொத்தம் 20,054 தொழிலாளர்கள் கண்டறியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

அத்தகைய தொழிலாளர்களுக்கு மத்திய அரசின் உத்தரவின்படி, நிவாரண உதவிகளை வழங்குவது  பற்றி, தமிழக அரசுடன் மத்திய துணைத் தலைமை தொழிலாளர் ஆணையர் தீவிரமாக கோரினார்.

அக் கோரிக்கை ஏற்கப்பட்டு அதன்படி, தமிழக அரசால் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் இந்தத் தொழிலாளர்களுக்கு, 341 டன் நிவாரணப் பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தப் பொருட்களின் மதிப்பு ரூ.1,27,59,358/- ஆகும்.

மே 4-ம்தேதி, சென்னையில், இந்த நிவாரணப் பொருட்கள் மத்திய தொழிலாளர் துணைத் தலைமை ஆணையர் திரு. வீ .முத்து மாணிக்கத்தால் விநியோகிக்கப்பட்டது. ஒவ்வொரு தொழிலாளிக்கும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் ஆகியவற்றைக் கொண்ட தனி தொகுப்பு வழங்கப்பட்டது. உணவு பொருள்களை பெற்றுக்கொண்ட தொழிலாளர்கள் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு தங்கள் மன மார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

மண்டல தொழிலாளர் நல ஆணையர்கள் திரு. சிவராஜன், திரு. அண்ணாதுரை, உதவி தொழிலாளர் நல ஆணையர் திரு. பிரவீன் பாண்டி மோகன்தாஸ், அமலாக்க அதிகாரி திரு. சங்கர ராவ் மற்றும் முதன்மை வேலை அளிக்கும் நிறுவன அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், கட்டுமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஏற்கனவே ஏப்ரல் 5ம் தேதி 84,14,406/- மதிப்புள்ள 224 டன் நிவாரணப் பொருட்கள் மேற்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.

நாட்டிலேயே, தமிழகத்தில் மட்டுமே மத்திய தொகுப்பில் வரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இது போன்ற உணவுப் பொருட்கள் மத்திய தொழிலாளர் ஆணையரால் வழங்கப்படுகிறது என சென்னை, மத்திய தொழிலாளர் ஆணையர் திரு. வீ.முத்து மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.



(Release ID: 1621157) Visitor Counter : 153


Read this release in: English