PIB Headquarters

மக்களால் மக்களுக்காக மக்களே செயல்படுத்தும் கடுமையான தனி நபர் விலகலே கொவிட்-19 தொற்றுச் சங்கிலியை தகர்க்கும் ஒரே வழி.

Posted On: 03 MAY 2020 4:56PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பாதுகாப்பான இடைவெளிக்கான விதிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. பொது இடங்களில் பாதுகாப்பான இடைவெளிக்கான விதிமுறைகளை கடைப்பிடிக்க கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்த இந்திய அரசு, மக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொற்றுச் சங்கிலியை தகர்க்க பொது முடக்கத்தை அமல்படுத்தியது.

பொது இடங்களில் ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையே குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளியை உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியது. ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அல்லது பேசினாலோ அதன் மூலம் வாயிலிருந்தோ மூக்கிலிருந்தோ வைரஸ் இருக்கும் சாத்தியக்கூறுகள் உடைய நீர் துளிகள் வெளிப்படுவதாக அது வலியுறுத்திக் கூறியது. ஆகையால், கடைத்தெருக்களில் அல்லது இதர பொது இடங்களில் நாம் தனி நபர் இடைவெளியை அல்லது பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்கவில்லை என்றால் கொவிட்-19 பரவும் வாய்ப்புள்ளது. நம் கைகளில் ஒட்டியிருக்கும் வைரசை சோப்புத் தண்ணீரும், ஆல்கஹால் கலந்த கரைசல்களும் கொல்வதால், அவற்றைப் பயன்படுத்தி கைகளை அடிக்கடி கழுவுமாறும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. வைரஸ் பரவுவதை தடுக்க கண்கள், மூக்கு மற்றும் வாயை த்தொடாமல் இருக்குமாறும் மக்களை அது கேட்டுக் கொள்கிறது. கொவிட்-19 தொற்று சங்கிலியைத் தகர்ப்பதற்கு, தனிமனித சுகாதாரத்துடன் இணைந்த தனி நபர் விலகல் விதிமுறைகளே ஒரே தீர்வாகும். மக்களின் போக்குவரத்தைத் தடுக்க மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

பொது முடக்கம் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியாவில் கொவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மத்தியிலேயே 8.2 லட்சமாக அதிகரித்து இருக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை கூறுகிறது. தனி நபர் இடைவெளி மற்றும் தனிமனித சுகாதாரத்தைப் பற்றிய அரசின் பரந்துவிரிந்த பிரச்சாரத்தால் தான், நாட்டில் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மே 2 அன்று 39,000 ஆக இருந்தது.

பாதுகாப்பான இடைவெளிக்கான விதிமுறைகள் நோயின் பரவலைக் கட்டாயம் கட்டுப்படுத்தும் என்கிறார், திருச்சிராப்பள்ளியை சென்ற ஒவ்வாமை நிபுணரான, மருத்துவர் கமல். விதிகளின் படி, மக்கள் வெளியே வரும்போது கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அவர் கூறுகிறார். தொற்றை கட்டுப்படுத்துவதோடு நோய் மேலும் பரவாமல் இது தடுக்கும்.

பாதுகாப்பான இடைவெளிக்கான விதிமுறைகள் திருச்சியில் மாவட்ட நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டுள்ளன. விதிமீறல் ஏதாவது இருந்தால் அதைக் கண்டுபிடிக்க ஆட்சியர் திரு. சிவராசு தொடர் ஆய்வுகளை நடத்துகிறார். கூட்டம் கூடுவதைத் தடுப்பதற்காக தற்காலிக சந்தைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படுகின்றன. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மீன் சந்தைகள் மூடப்படுகின்றன. முதலமைச்சரின் உத்தரவுப்படி மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருள்களை மே 4, திங்கட்கிழமையில் இருந்து வழங்குதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக, திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள பொது விநியோகக் கடையின் விற்பனையாளரான திரு. ஆர். சீனிவாசன் கூறுகிறார். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களுக்கு, பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் கூடுதலாக தலா 5 கிலோ அரிசியும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படுகின்றன. அதிகக் கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக, அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ள டோக்கன்களின் படி, ஒரு நாளைக்கு 200 நபர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்கப்படும். ஒரு மீட்டருக்கான தனி நபர் இடைவெளி விதியைக் கடைபிடிக்குமாறு அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மக்கள் வரிசையில் நின்று பாதுகாப்பான இடைவெளி விதிகளைக் கடைப்பிடிக்க ஏதுவாக, நியாயவிலைக் கடைகளுக்கு அருகே சதுரக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. திருச்சி மேற்குத் தொகுதியில், நியாயவிலைக் கடைகளில் பாதுகாப்பான இடைவெளி விதிகளை அமல்படுத்த, ஆட்சியரின் உத்தரவுபடி 92 முதல் பதிலளிக்கும் தன்னார்வலர்கள் (first responder volunteers)  நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை நிர்வகிப்பதற்கும் தனி நபர் இடைவெளியை உறுதி செய்வதற்கும் ஒவ்வொரு கடையிலும் இரண்டு தன்னார்வலர்கள் ஈடுபட்டிருப்பார்கள்.

கரூர் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பாதுகாப்பான இடைவெளியைக் கண்காணிப்பதற்காக, 586 தன்னார்வலர்களை ஆட்சியர் திரு. அன்பழகன் நியமித்துள்ளார். மே மாதத்திற்கான பொருள்களை நாளையிலிருந்து கொடுப்பதற்காக இன்று டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன எனக் கூறுகிறார் கரூர், குளித்தலை, பெரியார் நகர் பொது விநியோகக் கடையின் விற்பனையாளரான திருமதி மகேஸ்வரி. பொதுவிநியோகக் கடைகளில் பாதுகாப்பான இடைவெளிக்கான  விதிகளை, தான் அமல்படுத்தி வருவதாக தன்னார்வலரான திரு. குமார் கூறுகிறார். மக்களுக்கு உணவு மற்றும் இதர அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதற்காகவே கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. இந்தத் தளர்வு தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்வது ஒவ்வொரு குடிமகனின் முக்கியமான கடமையாகும். தனி நபர் இடைவெளியைக் கடுமையாக கடைப்பிடித்தல் தனிநபர் பாதுகாப்பை மட்டுமல்லாமல் குடும்பத்தின் பாதுகாப்பையும் உறுதி செய்யும். ஒவ்வொரு குடும்பமும் பாதுகாப்பாக இருந்தால் ஒட்டு மொத்த நாடே விரைவில் பாதுகாப்பாக மாறி தொற்றுச் சங்கிலியை நிரந்தரமாகத் தகர்க்கும். ஒவ்வொருவரையும் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம்.

<புகைப்பட விளக்கங்கள்>

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரை விவரிக்கும் ஏப்ரல் 11/12 தேதியிட்ட வரைபடம்.

திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள பொது விநியோகக் கடையின் விற்பனையாளரான திரு. ஆர். சீனிவாசன்.

திருச்சியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு முன்பாக வரையப்பட்டுள்ள  சதுர வடிவக் கட்டங்கள்.

டோக்கன்களை வழங்கும் கரூர், குளித்தலை, பெரியார் நகர் பொது விநியோகக் கடையின் விற்பனையாளரான திருமதி மகேஸ்வரி.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரை விவரிக்கும் ஏப்ரல் 11/12 தேதியிட்ட வரைபடம்

திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள பொது விநியோகக் கடையின் விற்பனையாளரான திரு. ஆர். சீனிவாசன்

 

திருச்சியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு முன்பாக வரையப்பட்டுள்ள  சதுர வடிவக் கட்டங்கள்.

 


     டோக்கன்களை வழங்கும் கரூர், குளித்தலை, பெரியார் நகர் பொது விநியோகக் கடையின் விற்பனையாளரான திருமதி மகேஸ்வரி.               

                   

 ***



(Release ID: 1620644) Visitor Counter : 122


Read this release in: English