விவசாயத்துறை அமைச்சகம்
பிரதமரின் கிசான் திட்டம் 2020 பிப்ரவரி 24 அன்று ஓராண்டு நிறைவடைகிறது
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்தில், 8 கோடியே 46 லட்சம் பேர் இடம்பெற்றுள்ளனர்
ஒவ்வொரு ஆண்டும் பயனாளிகளுக்கு மூன்று தவணைகளில் ரூ.6,000-ஐ மத்திய அரசு பரிவர்த்தனை செய்கிறது
प्रविष्टि तिथि:
22 FEB 2020 12:37PM by PIB Chennai
பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம் (பிஎம் கிசான்) என்ற பெயரிலான மத்திய அரசின் புதிய திட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் (24.02.2020) ஓராண்டு நிறைவடைகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த செயல்களுக்கும் வீட்டுத் தேவைகளுக்கும் செலவுகளை கவனிக்க நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வருவாய் ஆதரவு அளிப்பதற்காக நாடு முழுவதற்குமான இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதிக வருவாய் உள்ள பிரிவினரை நீக்கி, மற்ற விவசாயிகளுக்கு இந்தத் திட்டத்தின்கீழ், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில், சென்ற ஆண்டு இதே நாளில் (24.02.2019) பிரதமர் திரு.நரேந்திர மோடி முறைப்படி தொடங்கிவைத்தார்.
தொடக்கத்தில் விவசாயத்துக்குத் தகுதியான இரண்டு ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள் அனைவருக்குமானதாக இந்தத் திட்டம் இருந்தது. பின்னர், இதன் தேவையை உணர்ந்து, நிலத்தின் அளவை கணக்கில் கொள்ளாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாய குடும்பங்களும் பயனடையும் வகையில் 01.06.2019 முதல் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடந்த மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய விவசாயிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பட்டயக் கணக்காயர்கள் போன்றோரும் மாத ஓய்வூதியமாக ரூ.10,000 மற்றும் அதற்கு மேலும் ஓய்வூதியம் பெறுகின்ற வசதி படைத்தவர்கள் இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டனர். சமூக அடிப்படையில் நில உரிமைகள் இருப்பதால், வடகிழக்கு மாநிலங்களுக்கும், வன நிலங்களை உடமையாகக் கொண்டிருப்போருக்கும், நில ஆவணங்கள் மேம்படுத்தப்படாமல், நில பரிவர்த்தனைக்குக் கட்டுப்பாடுகள் உள்ள ஜார்கண்ட் மாநிலத்திற்கும் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள மாநில அரசால் நியமிக்கப்பட்டுள்ள வருவாய் அலுவலரை விவசாயிகள் அணுகவேண்டும். இணையதளத்தின் மூலம் விவசாயிகள் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளவும் முடியும். ஃபார்மர்ஸ் கார்னர் என்ற இணையப்பக்கத்தில் தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு, தங்களுக்கான பணப்பரிவர்த்தனை விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும். இந்த இணையப் பக்கத்தில் கிராம வாரியாகப் பயனாளிகளின் விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
விவசாயிகள் கட்டணம் செலுத்தி, இந்தத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ள பொது சேவை மையங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. 2015-16 வேளாண் மக்கள் கணக்கெடுப்பு அடிப்படையில் இந்தத் திட்டத்தில் பயனாளிகளாக 14 கோடி பேர் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதிவுக்காக விண்ணப்பித்த விவசாயிகள் அதன் நிலையை அறிந்து கொள்ள 24 மணிநேர தானியங்கி ஐவிஆர்எஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர, 1800-11-5526 அல்லது 155261 என்ற எண்ணுக்குத் தொலைபேசியில் அழைத்தும் pmkisan-ict[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் மூலமாகவும் விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். உண்மையான பயனாளிகள் பயன்பெறுவதை உறுதி செய்யவும், ஆள் மாறாட்டத்தைத் தவிர்க்கவும், 2019 டிசம்பர் 1-அன்று அல்லது அதற்குப் பிறகான தவணைத் தொகை, பயனாளியின் வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு அடிப்படையில் மட்டுமே செலுத்தப்படும். இதிலிருந்து அசாம், மேகாலயா மாநிலங்களுக்கும், ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கும் 31.03.2020 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ரூ.50,850 கோடி விடுவித்துள்ளது. 20.02.2020 நிலவரப்படி, மொத்தம் 8.46 கோடி விவசாயக் குடும்பங்கள் இதன்மூலம் பயனடைந்துள்ளன. இவற்றில் 35,34,527 குடும்பங்கள் தமிழ்நாட்டையும், 9,736 குடும்பங்கள் புதுச்சேரியையும் சேர்ந்தவையாகும். இந்தத் திட்டத்தை, மத்திய அமைச்சரவை செயலாளரைத் தலைவராகவும், நிதித்துறையின் செலவினச் செயலாளர், வேளாண் துறை செயலாளர், நிலவளம், மின்னணு, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் செயலாளர்கள் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட, தேசிய அளவிலான ஆய்வுக்குழு திட்ட அமலாக்கம் குறித்து தொடர்ச்சியாக கண்காணித்து ஆய்வு செய்கிறது. இதேபோல், மாநில மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்களும், குறைதீர்க்கும் குழுக்களும் செயல்படுகின்றன.
*****
(रिलीज़ आईडी: 1604136)
आगंतुक पटल : 1162