பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்

என் சி எஸ் டி-யின் 16-வது அமைப்பு தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியை திரு அர்ஜுன் முண்டா தொடங்கிவைத்தார்

Posted On: 19 FEB 2020 2:37PM by PIB Chennai

பழங்குடி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் (என்சிஎஸ்டி) 16-வது அமைப்பு தினத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியை மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா இன்று புதுதில்லியில் தொடங்கிவைத்தார். பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் அவர் முக்கிய உரையாற்றினார். பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சர் திருமதி ரேணுகா சிங் சரூட்டா கவுரவ விருந்தினராகக் கலந்துகொண்டார்.  மேலும், என்சிஎஸ்டி தலைவர் திரு நந்குமார் சாய், ஆணைய உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

     பழங்குடியின மக்களுக்கு சிறப்புமிக்க சேவை புரிந்ததற்கான விருதுகளை திரு அர்ஜுன் முண்டா வழங்கினார். மத்திய பொதுத்துறை நிறுவனமான வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட், நாக்பூர் சார்பில் அதன் தலைவரும், நிர்வாக இயக்குனருமான திரு ராஜீவ் ரஞ்சன் மெஹ்ராவும், தனிநபர் பிரிவில் ராஞ்சியில் உள்ள ஆஷா அமைப்பின் செயலாளர் திரு அஜய்குமார் ஜெய்ஸ்வாலும் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

     இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா, நாட்டில் உள்ள பழங்குடியினரின் நலனுக்காக ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது என்றார்.  நாடு முழுவதும் உள்ள பழங்குடியின நிலம் பற்றிய தகவல் வங்கி இருக்க வேண்டும் என்று தெரிவித்த அமைச்சர், பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் முறையான ஆராய்ச்சிப் பணிகளுக்காக சுயேச்சையான ஆய்வுக்குழுவைக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.  மேலும், இந்த ஆணையம் உரிய தகவல் நிர்வாக முறையைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். என்சிஎஸ்டி-யை வலுப்படுத்த பழங்குடியினர் நல அமைச்சகம் முழு ஒத்துழைப்பையும், ஆதரவையும் அளிக்கும் என்று அவர் உறுதியளித்தார்.

     பழங்குடியினர் நல இணையமைச்சர் திருமதி ரேணுகா சாரூட்டா பேசுகையில், முன்னாள் பிரதமர் திரு அடல் பிகாரி வாஜ்பாய் 1999-ஆம் ஆண்டு பழங்குடியினர் நல அமைச்சகத்தைத் தனியாக உருவாக்கினார் என்றும் அதன் பின்னர் 2004 பிப்ரவரி 19 அன்று பழங்குடியினருக்கான தேசிய ஆணையம் தனியாக அமைக்கப்பட்டது என்றும் கூறினார்.

     பல மாநிலங்கள் பழங்குடியினருக்கான ஆணையங்களைக் கொண்டுள்ளன என்று குறிப்பிட்ட அவர், பல மாநிலங்களில் இத்தகைய ஆணையங்கள் இல்லையென்றும் கூறினார்.  அனைத்து மாநிலங்களும் பழங்குடியினருக்கான ஆணையங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பழங்குடியின மக்கள் சுதந்திரப் போராட்டத்திற்கும், தேச வளர்ச்சிக்கும் பெருமளவு பங்களிப்பு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

     பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக ஆணையம் மேற்கொள்ளும் பல செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து அதன் தலைவர் திரு நந்குமார் சாய் விவரித்தார்.

•••••••



(Release ID: 1603658) Visitor Counter : 573


Read this release in: English , Urdu , Hindi , Bengali