குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
நடமாடும் தேனீ வளர்ப்பகத்தை திரு நிதின் கட்கரி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Posted On:
13 FEB 2020 2:31PM by PIB Chennai
தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாகவும், தேனீக்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் கதர் கிராமத் தொழில் வாரியத்தால் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘நடமாடும் தேனீ வளர்ப்பகத்தை’ கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைவர் திரு வி கே சக்சேனா முன்னிலையில், மத்திய குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று (13.02.2020) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு நிதின் கட்கரி, “தேனீ வளர்ப்பு பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும், அதில் உள்ள பல்வேறு சிரமங்களை தேனீ வளர்ப்போரால்தான் புரிந்து கொள்ள முடியும் என்றார். நடமாடும் தேனீ வளர்ப்பகம், இடப்பெயர்ச்சியை எளிதாக்குவதோடு, பராமரிப்பு மற்றும் தேனீக்களுக்கு உணவு அளிப்பதையும் எளிதாக்கும் என்றார். அத்துடன் கடும் கோடை காலத்திலும், தேனீக்கள் உயிர் பிழைப்பதற்கு இந்த நடமாடும் தேனீ வளர்ப்பகம் உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப, 2017 ஆம் ஆண்டு தேனீ இயக்கத்தை தொடங்கிய கதர் கிராமத் தொழில் வாரியம், தேனீ வளர்ப்புப் பயிற்சி, தேனீ வளர்ப்புப் பெட்டிகளை விநியோகிப்பதுடன் கிராமப்புற மற்றும் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தேனீ வளர்ப்பு மூலம் கூடுதல் வருவாய் கிடைக்கவும் வழி வகை செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தேனீ வளர்ப்பை குறைவான தொழிலாளர்களுடன், எளிதாக மேற்கொள்வதற்கான பல்வேறு புதிய வழிமுறைகளை கதர் கிராமத் தொழில் வாரியம் அவ்வப்போது உருவாக்கி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
*************
(Release ID: 1603114)