PIB Headquarters
சென்னை விமான நிலையத்தில் ரூ.2.05 கோடி மதிப்புள்ள 4.8 கிலோ தங்கம் சுங்கத்துறையினரால் பறிமுதல் – 4 பேர் கைது
இடுகை இடப்பட்ட நாள்:
02 FEB 2020 7:33PM by PIB Chennai
ஞாயிற்றுக்கிழமை காலை பாங்காக்கிலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் மூலம் வந்த சென்னையைச் சேர்ந்த ரவி (48) என்பவரை சுங்கத்துறையினர் வழிமறித்து சோதனை நடத்தியதில், அவரிடமிருந்து வெளிநாட்டு முத்திரையுடன் கூடிய ஒரு கிலோ எடையுள்ள தங்கக்கட்டி மற்றும் 133 கிராம் எடையுள்ள ஒரு தங்கக்கட்டி, 59 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலி உட்பட மொத்தம் ரூ.50.55 லட்சம் மதிப்புள்ள 1.192 கிலோ எடையுள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக, சனிக்கிழமையன்று சென்னை விமான நிலைய புறப்பாடு பகுதியில் சுங்கத்துறையின் விமானப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, விஜயகுமாரி(29) என்ற பெண் பயணி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுங்கத்துறை சோதனை பகுதியை விட்டு வெளியேற முயன்றதை கண்காணித்து, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் அவரிடம் சோதனை நடத்தியதில், அவரது இடுப்பில் ஆறு பொட்டலங்களாக மறைத்து கடத்தி வந்த, ரூ.1.17 கோடி மதிப்புள்ள 2.8 கிலோ தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டது. ஆயிஷாபானு(32) என்பவரும், அவருடன் வந்த இப்ராஹிம்(25) என்பவரும் இந்தத் தங்கக்கட்டிகளை தம்மிடம் கொடுத்ததாக அவர் கூறியதை அடுத்து, மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை சுங்கத்துறையினர் தேடிவருகின்றனர்.
இதுதவிர, சனிக்கிழமையன்று கொழும்புவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிம் ஷாரூக் (19) என்பவரிடம் நடத்திய சோதனையில், அவர் ரூ.25.16 லட்சம் மதிப்புள்ள 598 கிராம் எடையுள்ள தங்கத்தை பசை வடிவில் கடத்தி வந்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.
மேலும், சனிக்கிழமையன்று கொழும்புவிலிருந்து வந்த சென்னையைச் சேர்ந்த ஷபீர் அலி(19) என்பவரிடமும் ரூ.12.55 லட்சம் மதிப்புள்ள 296 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மொத்தத்தில் ரூ.2.05 கோடி மதிப்புள்ள 4.8 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு, நான்கு பேரை கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
***** 
(வெளியீட்டு அடையாள எண்: 1601661)
வருகையாளர் எண்ணிக்கை : 159