குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

நம்பகத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற போக்கினைத் தடுக்க வேண்டும் என்று ஊடகங்களை குடியரசுத் துணைத்தலைவர் அறிவுறுத்தினார்


செய்திகளும் கருத்துக்களும் கலக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்தார்

கடந்த காலத்தில் இதழியல் என்பது ஒரு இயக்கமாகக் கருதப்பட்டது என்றும் கூறினார்

துக்ளக் இதழின் 50-வது ஆண்டு விழாவில் அவர்
கலந்துகொண்டார்

மறைந்த திரு சோ ராமசாமிக்குப் புகழாரம் சூட்டினார்

प्रविष्टि तिथि: 14 JAN 2020 8:35PM by PIB Chennai

ஊடக உலகினர் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் தங்களின் நம்பகத்தன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆரோக்கியமற்ற போக்கினைத் தடுக்க வேண்டும் என்றும் குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கையு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார்.

 மறைந்த சோ ராமசாமியை நிறுவனராகக் கொண்ட துக்ளக் தமிழ் இதழின் 50-வது ஆண்டு விழாவில், உரையாற்றிய திரு நாயுடு, செய்திகளையும், கருத்துக்களையும் கலக்கும் ஆரோக்கியமற்ற போக்கு குறித்து கவலை தெரிவித்தார்.  நிர்வாகத்தின் எண்ணங்களுக்கு ஏற்றவாறு,  சில பிரச்சினைகளில் ஒருதலைப்பட்சமாக செய்திகள் வெளியிடுவதும்,  அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் அளிப்பதும், இந்நாளின் போக்காக உள்ளது என்று அவர் கூறினார்.

கலப்படமில்லாத வகையில் தகவலை முழுமையாக அளிப்பதற்கு பதிலாக ஊடகத்தின் ஒரு பிரிவினர் பார்வையாளர்கள் எதைப் பார்க்க வேண்டும் அல்லது வாசிப்பவர்கள் எதை வாசிக்க வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்துவிடுகிறார்கள் என்று குடியரசுத் துணைத்தலைவர் தெரிவித்தார்.  இத்தகையப் போக்கு நான்காவது தூணான ஊடகத்திற்கும், தொலைநோக்கில் இந்திய ஜனநாயகத்திற்கும், நல்லதல்ல என்று அவர் எச்சரித்தார்.

பன்முக ஆளுமை கொண்டவர் சோ ராமசாமி என்று கூறிய குடியரசுத் துணைத்தலைவர், இதழியல், திரைப்படம், நாடகம், அரசியல், சட்டம், இலக்கியம் ஆகியவற்றில் அழிக்க முடியாத தடத்தை அவர்  விட்டுச் சென்றுள்ளார் என்றும் கூறினார்.

50-வது ஆண்டினைக் குறிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட துக்ளக் சிறப்பு பதிப்பின் முதல் பிரதியை குடியரசுத் துணைத்தலைவர், பிரபல திரைப்பட நடிகர் திரு ரஜினிகாந்திடம் வழங்கினார்.

துக்ளக் இதழின் முதன்மை ஆசிரியர் திரு எஸ் குருமூர்த்தி, பிரபல நடிகர் திரு ரஜினிகாந்த், மறைந்த சோ ராமசாமியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

குடியரசுத் துணைத்தலைவரின் முழுமையான உரை

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்”

துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி மற்றும் ஒட்டுமொத்த துக்ளக் பத்திரிகையாளர் குழுவினரே, ஊழியர்களே, துக்ளக் இதழின் அன்பார்ந்த வாசகர்களே, சோ ராமசாமி குடும்ப உறுப்பினர்களே, ரஜினிகாந்த் அவர்களே, சகோதரிகளே, சகோதரர்களே,

முதலில் சோ ராமசாமிக்கு எனது மதிப்புமிக்க மரியாதையை செலுத்துவதோடு, அவரது வழியை பின்பற்றி நடக்கும் ஒட்டுமொத்த துக்ளக் குழுவினருக்கும், எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இது என்றென்றும் நினைவில் கொள்ளத்தக்க ஒரு நிகழ்ச்சியாகும்.  எந்தவொரு நிறுவனமும் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்வது என்பது மாபெரும் சாதனையாகும்.  அதுவும் நெறிமுறை சார்ந்த இதழிலியலின் வழிகாட்டியாக திகழும் துக்ளக் போன்ற நிறுவனத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.  

இதுபோன்ற ஒரு சாதனையை இயற்றுவது  எளிதானதல்ல,  சிறந்த அறிவாளியான சோ உருவாக்கிய வலுவான அடித்தளத்தால்தான் இந்த சாதனையை அடைய முடிந்துள்ளது. துக்ளக் இதழில் பணியாற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அவரது குழுவினர் இதனை மேலும் செம்மைப்படுத்தி இருப்பதோடு, துக்ளக் இதழைப் படிக்கும் சிந்திக்கக்கூடிய வாசகர்களாலும் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

நான் இங்கு வருவதற்கு முன்பு, வாசகர்களின் கேள்விக்கு ஆசிரியர் மிகவும் பொறுமையுடன் பதிலளித்த, அரிய கருத்துப் பரிமாற்ற நிகழ்ச்சி நடைபெற்றதை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.  துக்ளக் இதழுக்கும், அதன் வாசகர்களுக்கும் இடையேயான பிணைப்பை வலுப்படுத்தும் இதுபோன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கது.  இதுபோன்ற முயற்சி, துக்ளக்கின் பாரம்பரியமாக ஆகியிருப்பதுடன், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி நடத்தப்படுவதாக என்னிடம் தெரிவித்தனர்.  இது துக்ளக்கின் தனி முத்திரையாகும்.

பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு அறிவாளியான சோ ராமசாமி, சனாதன தர்மம் பற்றிய கேள்விக்கே இடமின்றி, பத்திரிகை, திரைப்படம், நாடகம், அரசியல், சட்டம், இலக்கியம் போன்ற துறைகளில் அழியாத தடத்தை விட்டுச் சென்றுள்ளார்.  பாரதத்தின் நாகரீக நன்மதிப்புகள் மற்றும் இந்துமத கோட்பாடுகள் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கை, அவரது தொலைநோக்குப் பார்வைக்கு எப்போதும் வழிகாட்டியது.  துக்ளக் இதழின் 50 ஆவது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில்,  இந்த இதழ் சோ ராமசாமியின் கருத்துக்கு ஒத்த கருத்துடையது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

தேச நலனை எதற்காகவும் விட்டுக் கொடுக்காமல், தீவிரமாகவும், அச்சமற்ற வகையிலும் சோ பின்பற்றிய இதழியல்தான், துக்ளக் இதழுக்கு புகழைத் தேடித்தந்தது.  அவசர நிலை காலத்தில் அவர் காட்டிய எதிர்ப்பும், முகப்புப் பக்கத்தை கறுப்பாக்கி, பழங்கால திரைப்படமான ‘சர்வாதிகாரி’ படம் பற்றிய விமர்சனத்தை நூதன முறையில் வெளியிட்டதும்  என்றென்றும் நமது நினைவில் நிற்கும். 

பத்திரிகை சுதந்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த சோ, பத்திரிகை சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்க்க அவர் ஒருபோதும் தவறியதில்லை.

நாங்கள் இருவரும் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தபோது,  தனிப்பட்ட முறையில் திரு சோ ராமசாமியுடன் நட்பு ரீதியாக மேற்கொண்ட விவாதங்களை நான் நினைவுகூர விரும்புகிறேன்.  ஒவ்வொரு விவாதத்திலும் நகைச்சுவையை புகுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளைக் கண்டு நான் வியந்து போயிருக்கிறேன்.

தலைசிறந்த இலக்கியவாதி என்ற முறையில், ஸ்ரீமத் ராமாயணம், மகாபாரதம், இந்து மத அம்சங்கள் மற்றும் இது போன்றவற்றில் சோவின் பணிகள், இந்து மத தத்துவம், வேதங்கள், இதிகாசங்கள் மற்றும் பிற பாரம்பரியத்தில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைக்கு அழியா சின்னங்களாக திகழும்.  அவரது பிரசித்திப் பெற்ற நாவலான முகமது பின் துக்ளக், பின்னர் நாடகமாகவும், திரைப்படமாகவும் எடுக்கப்பட்டதுடன், உண்மையே உன் விலை என்ன, எங்கே பிரமாணன் என்ற தொலைக்காட்சித் தொடர் போன்ற அவரது  பிற பணிகளும், ஏதாவதொரு காரணம், நம்பிக்கை அல்லது வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவதாக இருக்கும்.  அவரது நாவல்கள் நகைச்சுவை மற்றும் நையாண்டிக்கு பெயர் பெற்றவையாகும். 

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரால் வெகுவாக ஈர்க்கப்பட்டவர் அவர்.  அவசர நிலை காலத்தில், “கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும்” என்று பீமனுக்கு அர்ஜூனன் ஆறுதல் கூறும், பாரதியாரின் பாஞ்சாலி சபத காட்சி துக்ளக்கில் பிரசுரிக்கப்பட்டதாக என்னிடம் தெரிவித்தனர்.  நாடகத்தில் சோவின் திறமைமிக்க இயக்கமும், கருத்துக்களை எடுத்துக்கூறும் விதமும் அவரது எழுத்தாற்றலுக்கு சாகா வரம் பெற்றவை என்றும் என்னிடம் தெரிவித்தனர்.  என்று தணியும்

இந்த சுதந்திர தாகம், முகமது பின் துக்ளக் போன்ற நாடகங்கள், தற்கால அரசியலுக்கும் பொருந்துவதாக உள்ளன.  அவரது நாடகங்கள், அவரது வாழ்நாளில் இருந்ததை விட, தற்போது அதிகளவில் விரும்பி பார்க்கப்படுவதாகவும், நேயர்கள் அவற்றை முழுமையாக பார்த்து மகிழ்வதாகவும் தெரிவித்தனர்.

சோவின் புத்திக்கூர்மையும், உடனடியாக நகைச்சுவையை வெளிப்படுத்துவது மற்றும் மேடைக்கு ஏற்ற கருத்தை தெரிவிப்பது போன்றவை அவரை ஒரு தலைசிறந்த நாடகக் கலைஞராக திகழச் செய்ததுடன்,  பிரபல காமெடி நடிகராகவும் ஆக்கியது.  திரைப்படங்கள் மீது அவர் கொண்டிருந்த காதல், அவரது துக்ளக் இதழைப் போன்று பல தலைமுறைகளைக் கடந்து நிற்கும். அனைத்து வயதுடைய அவரது ரசிகர்கள் தூய்மையான உடனடி நகைச்சுவை உணர்வை நேசித்தனர். 

துக்ளக் பத்திரிகை மூலம் இதழியலுக்கு சோ ஆற்றிய பங்களிப்பு, அவரது பொது வாழ்வு மகுடத்தில் ஒரு வைரக்கல்லாக திகழும்.   சோவின் இதழியல் நடை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதோடு, அவரது மனஉறுதி, தைரியம், புத்திக்கூர்மை, நையாண்டி மற்றும் அறிவார்ந்த எழுத்துக்கள்  மற்றும் விமர்சனங்கள் அனைவரையும் உலுக்குவதாக இருக்கும்.  1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துக்ளக் இதழ், அவரது நையாண்டி அரசியல் நாடகமான ‘முகமது பின் துக்ளக்’ மீதான ஈர்ப்பின் காரணமாக உருவாக்கப்பட்டதால், அதற்கு துக்ளக் என பெயரிடப்பட்டது.

சோ பின்பற்றிய இதழியல் முறையை அவரது நெருங்கிய நட்பு வட்டாரத்தினரிடமும் என்னால் காண முடிகிறது.  ஊடகங்கள், விளம்பர வருவாயை  நம்பி இருந்த வேளையில், துக்ளக் இதழ் வாசகர்களின் சந்தா மூலம் கிடைக்கும் வருவாயை மட்டும் நம்பியிருப்பதை சோ உறுதி செய்தார்.  தற்போதும் கூட, துக்ளக் இதழ் 48 பக்கங்கள் கொண்டதாக வெளியாகிறது என்பதை நான் அறிவேன்.  துக்ளக் வாசகர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். 

சோவின் நையாண்டி மற்றும் பத்திரிகை தரம், அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தியது.  தலைவர்கள் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடும் அறிஞர்களுடன் நெருங்கிய நட்பு இருந்தாலும்,  சோ தொடர்ந்து ஒரு அறிவாளியாகவே திகழ்ந்ததுடன், நேரம் வரும்போது அவர் யாரையும் விட்டு வைத்ததும் இல்லை.

துக்ளக் இதழ் 50 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது, இதுபோன்ற ஒரு சாதனை எந்தவொரு நிறுவனத்தையும் எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பத்திரிகை துறையில் அவர் காட்டிய வழியை தொடர்ந்து பின்பற்றுவதே அவருக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

துக்ளக் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துவதுடன், குருமூர்த்தியை தலைமை ஆசிரியராக கொண்ட ஒட்டுமொத்த துக்ளக் குழுவினரும், இதழியல் நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அன்பார்ந்த சகோதரிகளே, சகோதரர்களே,

இந்தியாவின் சுதந்திர போராட்டத்திலும், சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில் ஜனநாயக அடித்தளத்தை வலுப்படுத்துவதிலும், பத்திரிகைகள் முக்கிய பங்கு வகித்தன. கடந்த பல ஆண்டுகளாக ஊடகங்களின் எல்லை, மின்னணு ஊடகங்களுக்கு ஏற்ப மாற்றம் அடைந்திருப்பதுடன், அண்மைக்காலமாக சமூக ஊடகங்களுக்கு ஏற்பவும் மாறியுள்ளது.

கடந்த காலத்தில் இதழியல் என்பது ஒரு இயக்கமாக கருதப்பட்டதோடு, காலஞ்சென்ற சோ போன்ற தலைசிறந்த பத்திரிகையாளர்கள் பலர் அச்சம் இன்றியும் விருப்பு வெறுப்பின்றியும் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.   அவர்கள் எந்தவித நெருக்கடி அல்லது வசீகரத்திற்கும் ஒருபோதும் அடிபணியாமல் இருந்ததோடு, ஒருமைப்பாடு மற்றும்  மாண்புகளை சமரசம் செய்து கொண்டதும் இல்லை.  இதழியலின் முக்கிய கொள்கைகளை எப்போதும் பின்பற்றி வந்த அவர்கள், துல்லியமான மற்றும் பாரபட்சமின்மையை பின்பற்றுவதிலும், உயர்தரத்தை பேணிக்காத்து வந்தனர். 

தற்போது நாம் காண்பது, இவை அனைத்திற்கும் வெகு தொலைவில் உள்ளது.  ஊடகங்கள் நடுநிலையுடன் செயல்படுவதில்லை.  தற்போதைய காலக்கட்டத்தில், ஒரு செய்தித்தாளை படித்தாலோ அல்லது ஒரு தொலைக்காட்சியை பார்த்தாலோ,  தற்போதைய நிகழ்வுகள் அல்லது  எந்தவொரு திடீர் சம்பவங்கள் குறித்த தெளிவான தகவலையும் அறிந்து கொள்ள முடியாது. 

செய்திகளுடன், கருத்துக்களை திணிக்கும் ஆரோக்கியமற்ற போக்கும், ஒழுங்கற்ற அம்சங்களும், நிர்வாகத்தின் போக்கிற்கு ஏற்ப வரம்பற்ற வகையில் செய்திகளை வெளியிடுவதும்தான் தற்கால விதிமுறைகளாகிவிட்டன.  கலப்படமற்ற முறையில் முழுமையான தகவலை தருவதற்கு பதிலாக, நேயர்கள் எதை விரும்பிப் பார்ப்பார்கள் அல்லது ஒரு வாசகர் எதை விரும்பிப் படிப்பார் என்பதை, ஊடகத்தின் ஒரு பிரிவினர் அவர்களே முடிவு செய்கின்றனர்.  நான்காவது தூணாக கருதப்படும் ஊடகங்களுக்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் இது ஆரோக்கியமான போக்காக இருக்காது. 

சமீபத்தில், ஒன்றிரண்டு பல்கலைக் கழக வளாகங்களில் சில இடையூறுகள் ஏற்பட்டது.  அதுபோன்ற சூழலில், எந்தவொரு பக்கமும் சாயாமல் அல்லது தகவலை திரித்துக் கூறாமல், தெளிவான நிலைமையை தெரிவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. 

ஒட்டுமொத்த ஊடக உலகினரும் தீவிர ஆத்ம பரிசோதனை செய்து கொள்வதுடன், நம்பகத்தன்மையை பாதிக்கக்கூடிய, ஆரோக்கியமற்ற போக்கை தடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டதாக நான் கருதுகிறேன். 

ஒவ்வொரு ஆண்டும் துக்ளக் ஆண்டு விழா நடைபெறுவதற்கு முன்பாக சுப்பிரமணிய பாரதியின் பகவத் கீதை குறித்த சோ-வின் கருத்துக்கள், நாடகமாக அரங்கேற்றப்படுவதை நான் அறிந்து கொண்டேன்.  பக்தி மற்றும் தேசியத்தின் மறுபதிப்பாக திகழ்ந்தவர் பாரதியார் என்பதால், எட்டையபுரத்தைச் சேர்ந்த அந்த மகாகவியால் ஈர்க்கப்பட்டவர் சோ என்பதில் எந்த வியப்பும் இல்லை. 

பாரத மாதாவின் ஒற்றுமை உணர்வை வலியுறுத்தும் “என் தாய்” என்ற சுப்பிரமணிய பாரதியாரின் பாடலை எடுத்துக்கூறி, எனது உரையை நிறைவு செய்ய விரும்புகிறேன்:

“முப்பது கோடி முகமுடையாள் உயிர், மொய்ம்புற ஒன்றுடையாள் இவள்

செப்பு மொழி பதினெட்டு உடையாள், எனிற் சிந்தனை ஒன்றுடையாள்”

மிகச்சிறந்த இந்த பாடல், வேற்றுமையில் ஒற்றுமையின் சாராம்சத்தை வெளிப்படுத்துவது, தலைசிறந்த நம் பாரத நாட்டின் அடிமட்ட உணர்வையும் பிரதிபலிக்கிறது.

நன்றி, ஜெய்ஹிந்த்.

****************** 


(रिलीज़ आईडी: 1599403) आगंतुक पटल : 379
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी