PIB Headquarters

பிஎஸ்என்எல் நிறுவனத்தை இந்தியாவின் முதன்மை தொலைத் தொடர்பு நிறுவனமாக மாற்றுவதே அரசின் இலக்கு: ரவிசங்கர் பிரசாத் பேட்டி

Posted On: 09 JAN 2020 6:59PM by PIB Chennai

பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை, இந்தியாவின் முதன்மை தொலைத் தொடர்பு நிறுவனமாக மேம்படுத்துவதே மத்திய அரசின் இலக்கு என, மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை – அந்தமான் & நிகோபர் தீவுகள் இடையே கண்ணாடி இழை கம்பிவடம் (Optical Fibre Cable) பதிக்கும் பணியை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவுப் பகுதியான அந்தமான் & நிகோபரில் அதிவேக இணைய தள இணைப்பு வழங்கும் வகையில், சென்னையில் இருந்து ஆழ்கடல் கம்பிவடம் பதிக்கப்படுகிறது என்றார். ரூ.1,224 கோடி செலவிலான இந்த திட்டத்தின்மூலம், அந்தமான் & நிகோபரில் உள்ள போர்ட் பிளேயர் மற்றும் லிட்டில் அந்தமான், கார் நிகோபர், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.  மொத்தம் 2,250 கிலோமீட்டர் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கேபிள் பதிக்கப்படவிருப்பதாகவும், இந்த பணிகள் வரும் மே மாதத்திற்குள்  நிறைவடையும்  என்றும், அதன் பிறகு, அந்தமானில் தற்போது இருப்பதை விட 100 மடங்கு அளவிற்கு திறன் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். 

மேலும், அந்தமான் நிகோபர் தீவுகளில் சுற்றுலா சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிப்பதன் மூலம், அப்பகுதியின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கும் இத்திட்டம் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.  இதேபோன்று, கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

 

பிஎஸ்என்எல் நிறுவனம்தான், சென்னையில் ஏற்பட்ட பெருமழை –வெள்ளம், கஷ்மீர் பனிப்பொழிவு, நேபாள நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு தடையற்ற தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டார்.  பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றும்  78,000 ஊழியர்கள் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தில் பணியாற்றும் 15,000 ஊழியர்களுக்கு தேவையான நிதிஆதாரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.   பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளின் மொத்த மக்கள் தொகை அளவுக்கு இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். 

 

உலகிலேயே இரண்டாவது அதிகளவு செல்போன் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது என்றும், இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 6.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.  யுபிஐ போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும், இதன்காரணமாக, ஒருலட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு மிச்சமாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

ஆதார், ஜிஎஸ்டிஎண் போன்றவற்றிற்கான செயலிகளை இந்திய விஞ்ஞானிகளே வடிவமைத்ததை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு டிரில்லியன் டாலர் அளவுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.  இந்தியா உலகின் மாபெரும் டிஜிட்டல் சந்தையாக உருவெடுத்துள்ளது என்றும் திரு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

****************


(Release ID: 1598967) Visitor Counter : 285


Read this release in: English