PIB Headquarters
பெங்களூருவில் 107-வது இந்திய அறிவியல் மாநாடு: ஜனவரி 1-7 வரை அரங்கிலேயே பதிவு செய்யலாம்
Posted On:
30 DEC 2019 11:34AM by PIB Chennai
இந்திய அறிவியல் மாநாட்டு அமைப்பு நடத்தவுள்ள 107-வது இந்திய அறிவியல் மாநாடு 2020 ஜனவரி 3-7 ஆம் தேதி வரை கர்நாடக மாநிலம் பெங்ளூருவில் உள்ள விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், ஜிகேவிகே வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு ஜனவரி 1 முதல் 7 ஆம் தேதி வரை மாநாட்டு அரங்கிலேயே பதிவு செய்து கொள்ளலாம். இந்த மாநாட்டில் நாடு முழுவதும் உள்ள அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், அறிவியல் அறிஞர்கள் மற்றும் அறிவியல் பயிலும் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு எட்டு அமர்வுகளாக 27 சிற்றரங்குகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். மாநாட்டு விவரங்களை 1800 572 2020 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்தும், isc107uasb[at]gmail[dot]com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பியும் தெரிந்து கொள்ளலாம். மாநாட்டு அமைப்பு, “ISC 2020 UASB’’ என்னும் ஆண்ட்ராய்டு செயலியையும் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நிகழ்ச்சிக்கான தேதி, இடம் மற்றும் பிற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இந்தச் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
அறிவியல் தகவல் தொடர்பாளர்கள் சந்திப்பு, குழந்தைகள் அறிவியல் மாநாடு, அறிவியல் கண்காட்சி, பெண்களுக்கான அறிவியல் மாநாடு போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. “கிராமப்புற வளர்ச்சிக்கு அறிவியலும் தொழில்நுட்பமும்” என்பதே இந்நிகழ்வின் மையக் கருத்து. கிராமப்புற உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன், மேம்பட்ட சமூகப் பொருளாதார சமத்துவம் மற்றும் சமூகப் பொருளாதார வளர்ச்சியின் சமநிலை ஆகியவற்றில் உள்ள சவால்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். சமீபத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான தளத்தை, அறிவியலாளர்களுக்கு அமைத்துத் தருவதுதான் இந்த மாநாட்டின் இலக்கு. இதன் வாயிலாக கிராமப்புற மக்களின் சமூக நிலை மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
இந்த மாநாட்டினை பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறார். கர்நாடக மாநில முதல்வர் திரு.எடியூரப்பா, துணை முதல்வர் திரு.லஷ்மண் சங்கப்பா சாவடி ஆகியோரும் துவக்கவிழாவில் கலந்து கொள்கின்றனர்.
*******
லோ-உமா
(Release ID: 1597936)
Visitor Counter : 448