நிதி அமைச்சகம்
கடனுக்கு ஈடான சொத்துக்களை வங்கிகள் இணையதளம் வாயிலாக ஏலம் விடும் முறையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
Posted On:
28 DEC 2019 2:34PM by PIB Chennai
மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று புதுதில்லியில் வங்கி சார்ந்த பல்வேறு விஷயங்கள் பற்றி பொதுத்துறை வங்கிகளின் தலைவர்கள், இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி, முன்னணியில் உள்ள தனியார் துறை வங்கிகளின் பிரதிநிதிகள் ஆகியோருடன் விவாதித்தார். நிதிதுறை செயலாளர், வருவாய்த்துறை செயலாளர், பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளர், சிபிஐ இயக்குநர், இந்திய ரிசர்வ் வங்கியின் பிரதிநிதி என்.பி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதையும், குறைந்த அளவில் ரொக்கம் உள்ள பொருளாதாரத்தை நோக்கி செல்வதையும், வலுப்படுத்த ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் அதிகமாக வரவு செலவு செய்யும் வணிக நிறுவனங்கள், குறைந்த செலவு பிடிக்கும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதிகளை வாடிக்கையாளர்களுக்குத் தரவேண்டும் என்று நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2019-20 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையில் தெரிவித்தார். மேலும், வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களிடம் வணிகக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்காக இன்றைய கீழ்க்காணும் கூட்டத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
- கட்டணம் ஏதுமின்றி டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த ரூபே, யுபிஐ ஆகியவை குறித்த அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிடும்.
- ஆண்டுக்கு ரூ.50 கோடியும், அதற்குக் கூடுதலாகவும் வரவு செலவு செய்யும் அனைத்து நிறுவனங்களும், ரூபே அட்டை அல்லது யுபிஐ க்யூஆர் கோட் முறையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்துவதை கட்டாயமாக்கும் வகையில் வருவாய்த்துறை வசதி செய்து தரவேண்டும்.
- ரூபே அட்டை, யுபிஐ ஆகியவற்றைப் பிரபலப்படுத்த அனைத்து வங்கிகளும், பிரச்சாரத்தைத் தொடங்கும்.
வங்கிகளை வலுவுள்ளதாக்க அரசு மேற்கொண்ட விரிவான சீர்திருத்தங்கள் காரணமாக 2018 மார்ச் மாதத்தில் ரூ.8.96 லட்சம் கோடியாக இருந்த வாராக்கடன், 2019 செப்டெம்பரில் ரூ.7.27 கோடியாகக் குறைந்துள்ளது. மேலும், வங்கிகள் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளன. 2019-20 நிதியாண்டின் முதல் அரையாண்டில் 13 வங்கிகள் லாபம் ஈட்டியுள்ளன.
எஸ்ஸார் தீர்வு முடிவின்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் திரும்பப் பெறப்பட்ட ரூ.4.5 லட்சம் கோடியோடு, ரூ.38,896 கோடியும், வங்கிக் கணக்குகளில் சேர்ந்துள்ளது.
கடந்த 3 நிதி ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் கடனுக்கு ஈடாக ரூ.2.3 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை இணைத்துக் கொண்டுள்ளன. இவற்றை வெளிப்படைத் தன்மையோடு, இணையதளம் மூலம் ஏலம் விடுவதற்கான முறையை நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தொடங்கி வைத்தார். சொத்துக்கள் பற்றிய புகைப்படங்கள், வீடியோ படங்கள் ஆகியவற்றை இந்த இணையதளம் கொண்டிருப்பதோடு இதே போன்ற சொத்துக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியையும், அனைத்து பொதுத்துறை வங்கிகளும் ஒற்றைச் சாளர முறையில் தகவல்களைப் பெறும் வசதியையும் கொண்டுள்ளது. 27.12.2019 நிலவரப்படி இந்த இணையதளத்தில் பொதுத்துறை வங்கிகளால் 35,000 சொத்துக்கள் பற்றிய விவரங்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
வங்கிகளை வலுப்படுத்த அண்மையில் மத்திய அரசால் ரூ.60,314 கோடி வழங்கப்பட்டது. இத்துடன் தற்போது அறிவிக்கப்பட்ட ரூ.8,855 கோடி விரைவில் விடுவிக்கப்படும்.
--------------
(Release ID: 1597870)
(Release ID: 1597879)
Visitor Counter : 288