பிரதமர் அலுவலகம்
இமாச்சல பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் பிரதமர் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
07 NOV 2019 3:32PM by PIB Chennai
இமாச்சல பிரதேச ஆளுநர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா அவர்களே, முதலமைச்சர் திரு. ஜெய்ராம் தாக்கூர் அவர்களே, சிக்கிம் முதலமைச்சர் திரு. பிரேம் சிங் தமாங் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் திரு பிரகலாத் பட்டேல், திரு. அனுராக் தாக்கூர், நித்தி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு எமிரேட்டின் தூதர் டாக்டர் அகமது அல்பானா மற்றும் முன்னணி தொழிலதிபர்களே, இதர விருந்தினர்களே, இங்கு குழுமியுள்ள எனதருமை நண்பர்களே!
தரம்சாலாவில் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!!! இது கற்பனையல்ல, ஆனால் நிஜம்! இதற்கு முன் நடந்திராதது இது! வியப்பாக உள்ளது! உங்களுக்கு எனது பாராட்டுக்கள். ‘நாங்களும் ஆயத்தமாகி விட்டோம்’! என்பதை ஒட்டுமொத்த நாட்டிற்கும், ஒட்டுமொத்த உலகிற்கும் இமாச்சலப் பிரதேசம் உணர்த்துவதன் அடையாளமே இது!
ஆமாம், நாங்களும் வந்துவிட்டோம்!!! என்று தற்போது இமாச்சல பிரதேசம் கூறுகிறது. எனவே, இமாச்சல பிரதேச அரசு, ஜெய்ராம் தாக்கூர் மற்றும் அவருடன் இணைந்து இந்த மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து வரும் அனைவருக்கும், மா ஜ்வாலாவின் ஆசிகளுடன் எனது பாராட்டுகளையும் உரிதாக்குகிறேன்.
நண்பர்களே,
சக்தியின் உறைவிடமாகக் கருதப்படும் இந்த இடத்தின் ஒவ்வொரு மூளைமுடுக்கிலும் இன்று நாம் அனைவரும் குழுமியுள்ளோம். கடவுள்கள், அம்மன்கள், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் இந்த இடத்தை புனித பூமியாக மாற்றியிருப்பதுடன், இயற்கை வளங்கள் மிகுந்த பகுதியாகவும் உள்ளது. இந்த சூழலில் முதலீட்டாளர்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
சகோதர சகோதரிகளே,
இதற்குமுன்பு, இதுபோன்ற முதலீட்டாளர்கள் மாநாடுகள் நாட்டின் ஒருசில மாநிலங்களில்தான் நடைபெற்றன. இதுபோன்ற மாநாடுகளுக்கு முன்பாக, அதற்கான நிபந்தனைகளை தொழில்முனைவோர் உற்றுநோக்கி வந்தனர். ஆனால் தற்போது நிலைமை மாறியிருப்பதற்கு ஒரு உதாரணமாகத்தான் இந்த மாநாடு இமாச்சல பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தொழிற்சாலைகள் மற்றும் முதலீடுகளை ஈர்ப்பதில் மாநிலங்களுக்கு இடையே புதிய போட்டி தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
கடந்த பத்து - இருபது ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டிலுள்ள மாநிலங்களில், எந்த மாநிலம் அதிக அறப்பணிகளை மேற்கொள்கிறது. யார் அதிக ஊக்கத்தொகை அல்லது வரிச்சலுகைகள் மற்றும் தடையற்ற மின்சாரம், குறைந்த விலையில் நிலம் கொடுக்கிறார்கள் என்பதில்தான் போட்டி நிலவியது. ஆனால் இதுபோன்ற போட்டி, எதிர்பார்த்த விளைவுகளை கொடுக்கவில்லை என்பது அனுபவத்தின் மூலம் தெரியவந்துள்ளது. முதலீட்டாளர்கள் பலர் மாநிலங்களிடமிருந்து சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகை கேட்டு காத்திருக்கும் அவலத்தைச் சந்திக்க நேர்ந்தது. எனவே, மாநிலங்களில் முதலீடு செய்வதை அவர்கள் தாமதித்து வந்தனர். பத்து முதல் பதினைந்து சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், ஐந்து சதவீத தள்ளுபடிக்காக ஏன் காத்துக் கிடக்க வேண்டும்? என்ற சிந்தனைதான் அவர்களிடம் நிலவியது.
ஆனால், நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில் இந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டதை அறிந்து நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். சலுகை வழங்குவதில் நிலவும் போட்டி மாநிலத்திற்கு அல்லது தொழில்துறையினருக்கு மிகவும் நன்மைப் பயக்கக் கூடியது என்பதை மாநில அரசுகள் தற்போது உணர்ந்துள்ளன.
நண்பர்களே, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் நிலவச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம். அதிகாரிகள் ராஜ்ஜியத்திலிருந்து விடுபடுவதுடன், ஒவ்வொரு கட்டத்திலும் அரசாங்கத்திடமிருந்து உரிமம் பெறும் நிலையை தவிர்ப்பதும் அவசியமாகிறது. இதனால், தற்போது மாநில அரசுகள், இதுபோன்ற சூழலை உருவாக்க போட்டியிடுகின்றன. பல்வேறு நடைமுறைகளை எளிமைப்படுத்தி இருப்பதுடன், சட்டங்களையும் மாற்றியமைத்திருப்பதோடு, தேவையற்ற விதிமுறைகளையும் ஒழித்துக்கட்டியுள்ளன. அனைத்திற்கும் மேலாக மாநிலங்களிடையே இதற்கான போட்டி அதிகரித்து, நம் நாட்டிலுள்ள மிகவும் தகுதிமிக்கத் தொழிற்சாலைகள், உலக அரங்கில் முன்னணி இடத்தில் உள்ளன. அவர்கள் மற்ற தொழிற்சாலைகளுடன் போட்டியிடும் திறனும் அதிகரித்துள்ளது. இது மாநிலங்களுக்கும், அந்த மாநில மக்களுக்கும், நாட்டு மக்களுக்கும் மிகுந்த பயனளிப்பதோடு, இந்தியா வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறிச் செல்லவும் உதவும்.
நண்பர்களே,
தொழிற்சாலைகள், வெளிப்படையானவையாகவும், தூய்மையான நடைமுறைகளைக் கொண்டவையாகவும் இருக்க வேண்டும். தவிர்க்க முடியாத சில விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் அளவுக்கு அதிகமான அரசாங்கத் தலையீடு காரணமாக தொழில் துறையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனை மனதிற்கொண்டு இமாச்சல பிரதேச அரசு பல்வேறு முக்கிய முடிவுகளை மேற்கொண்டிருப்பதுடன், புதிய சலுகைகளை அளித்து சரியான பாதையில் பணியாற்றுவதை அறிந்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஒற்றைச்சாளர ஒப்புதல், நில ஒதுக்கீட்டில் வெளிப்படைத்தன்மை அல்லது துறை சார்ந்த தொழில் கொள்கை போன்றவை ‘உகந்த சூழ்நிலையை’ உருவாக்கி, இந்த இடத்தை தொழில் தொடங்குவதற்கு உகந்த இடமாக மாற்றியுள்ளன.
நண்பர்களே,
இங்கு பெரும் தொழில் அதிபர்களும் வந்திருக்கிறீர்கள். நீங்களும் மற்ற தொழில் அதிபர்களும், உங்களது நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளும் சிறப்பாக செயல்பட்டு, நல்ல விளைவுகளை ஏற்படுத்தினால், ஒட்டுமொத்த நிறுவனத்தின் விளைவும் தானாகவே மேம்படும். எனவே, மாநிலங்களில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டால், அது நாட்டின் முடிவிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். இமாச்சல பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக இந்தியா தற்போது இதுவரை இல்லாத வகையில் தொழில் தொடங்குவதற்கு மிகவும் உகந்த இடமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
தற்போது இந்தியாவின் வளர்ச்சி இயந்திரம் நான்கு சக்கரங்களுடன் புதிய சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டு இயங்குகிறது. ஒரு சக்கரம் எதிர்பார்ப்புகளுடன் கூடிய சமுதாயமாகும். இரண்டாவது சக்கரம் புதிய இந்தியாவை உருவாக்க பல்வேறு ஊக்குவிப்புகளை அளித்து வரும் அரசாங்கமாகும். மூன்றாவது சக்கரம் தொழில்துறை, நான்காவது சக்கரம் பகிர்ந்து கொள்ளக் கூடிய அறிவுத்திறனாகும். இந்த நான்கு சக்கரங்களுடன் தற்போது நாம் விரைவான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.
இந்தியாவின் நலனுக்கு உகந்த மற்றும் சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவே ஒவ்வொரு முடிவையும் அரசு தற்போது மேற்கொண்டு வருகிறது. அரசு தற்போது ஏழைகளின் வீடு, சுகாதாரம், திறன் மேம்பாடு மட்டுமின்றி, முதலீடு மற்றும் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறது.
நண்பர்களே,
எங்களது நோக்கம் அனைத்தும் நேர்மையானவையாகவும், உணர்வுபூர்வமானவையாகவும் உள்ளன. எங்களது முடிவுகள் மற்றும் நோக்கங்களில் ஒரு வலிமை உள்ளது. இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், நாங்கள் அதனை செயல்படுத்திக் காட்டியிருக்கிறோம். நாட்டிலுள்ள தொழிற்சாலைகள் திவால் நிலைக்குச் சென்றால், அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறை ஏதுமின்றி இருந்தனர்.
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள திவால் மற்றும் நொடித்துப் போதல் சட்டம், யதார்த்தமான ஒன்று என்பதோடு, முடங்கிப் போயுள்ள அந்தத் தொழிற்சாலையின் பல லட்சம் ரூபாயை மறுபுழக்கத்திற்கு கொண்டுவர உதவுவதாக அமைந்துள்ளது. வங்கி சீர்திருத்தமும் பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்தது. எங்களது அரசுதான் அதனை முழுமையாக நிறைவேற்றும் நோக்கத்தில் விரைவாக சென்று கொண்டிருக்கிறோம். இந்த முடிவுகள் மூலம் நான்கரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள், சொந்த வீடு என்ற பல்லாண்டு கால கனவு நிறைவேறும் நிலையில் உள்ளன. அதேநோக்கத்துடன் பணியாற்றி, இந்த நாட்டை ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்டதாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
அரசு செயல்பாடுகளில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுவதில் அரசு முனைப்புடன் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் முடிவுகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.
வரி நடைமுறைகளை வெளிப்படையானவையாகவும், போட்டித்தன்மை உடையவையாகவும் மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில்தான் பெரு நிறுவனங்களுக்கான வரி விகிதத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பெரிய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது உலகிலேயே மிகக் குறைவான பெரு நிறுவனங்கள் வரி உள்ள நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப் பிறகு புதிதாக தொடங்கப்பட்ட உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்கான வரி 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
மின்னணு வரி மதிப்பீட்டு முறை கடந்த மாதமே நடைமுறைக்கு வந்துள்ளது. வரி செலுத்துவோர் அதிகாரிகளுடன் நேருக்கு நேர் சந்திக்க வேண்டிய தருணங்களும் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தி, வரிவிதிப்பு தொடர்பான நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளப்படுகிறது.
நண்பர்களே,
2014-ல் இந்தியாவின் சுற்றுலாத் துறை மூலம், அந்நியச் செலாவணி வருவாயாக 1,20,000 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஆண்டு இந்த வருவாய் 2,00,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிறைவாக, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நன்றியை உரித்தாக்குவதோடு, இங்கு நான் விருந்தினராக வரவில்லை, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவனாகவே வந்துள்ளேன். நீங்கள் அனைவரும் எனது விருந்தினர்கள் என்பதோடு, இமாச்சல பிரதேசத்தில் உங்களது அதிஷ்டத்தை சோதித்துப் பார்க்க முன்வந்தால், இமாச்சல பிரதேசம் உங்களை வாழ்த்துவதோடு, நீங்களும் பன்மடங்கு வளர்ச்சியடையலாம். இமாச்சல பிரதேசம் வளர்ச்சி அடையும் போது, இந்தியாவும் வளர்ச்சி அடையும். நீங்களும், அனைவரும் வளர்ச்சியடையலாம். அதே நம்பிக்கையுடன் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக மாநில அரசுக்கு எனது பாராட்டுகளையும், நன்றிகளையும் உரித்தாக்குகிறேன்.
நன்றி
உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி.
***
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற இணையதளத்தைக் காணவும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1594003)
வருகையாளர் எண்ணிக்கை : 241