மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

திறமையான மாணவர்களுக்கான ‘பிரதமரின் புதுமை கற்றல் திட்டம்-துருவ்’-ஐ மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 10 OCT 2019 4:11PM by PIB Chennai

அபாரத் திறமை கொண்ட மாணவர்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடிய பிரத்யேக முன்முயற்சியான, பிரதமரின் புதுமைக் கற்றல் திட்டம் – துருவ்-ஐ, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்’, பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோவின் தலைமையகத்தில் இன்று (10.10.2019) தொடங்கி வைத்தார். தலைசிறந்த படிப்பாற்றல் கொண்ட மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவித்து, அவர்களது திறமையை வெளிக்கொணர்வதுடன், மாணவர்களின் திறன் மற்றும் அறிவாற்றலை மேம்படுத்தும் நோக்கிலும் துருவ் என்ற இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அறிவியல், கலை, எழுத்தாற்றல் உட்பட மாணவர்களுக்கு விருப்பம் உள்ள குறிப்பிட்ட துறைகளில் அவர்கள் சாதனை படைக்க இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.  இதன்மூலம் திறமைமிக்க மாணவர்கள் தங்களது முழுத் திறமையையும் உணர்ந்து கொள்வதோடு, சமுதாயத்திற்கு பெரும் பயனளிக்கும் விதமாக உரிய பங்களிப்பை வழங்கவும் இது வழிவகுக்கும்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், இந்த திட்டம் பிரதமரின் தொலைநோக்குச் சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார். அறிவார்ந்த மாணவர்கள் மத்தியில் இதனைத் தொடங்கி வைப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், இந்த திட்டம் மாணவர்களுக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்றார். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் துருவ் திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது, ஒரே பாரதம் வலிமையான பாரதம் என்ற உணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்தார். நாட்டில் உள்ள 33 கோடி மாணவர்களின் முகவரியாக இந்தப் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் திகழ்வார்கள் என்றும் அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால் குறிப்பிட்டார்.

விண்வெளித் துறை செயலாளரும், இஸ்ரோ தலைவருமான திரு. கே.சிவன், விங் கமாண்டர் (ஒய்வு) ராகேஷ் சர்மா, அடல் புதுமை இயக்கத்தின் புதுமை இயக்குநர் திரு. ஆர்.ரமணன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 60 திறமையான மாணவர்களுடன் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களும் துருவ் திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்றனர். பின்னர் இந்த மாணவர்கள், மத்திய அமைச்சர் திரு. ரமேஷ் போக்ரியால், திரு. சிவன் மற்றும் திரு. ராகேஷ் சர்மாவுடன் கலந்துரையாடி, அவர்களது அனுபவம் மற்றும் வாழ்க்கையின் வெற்றி ரகசியங்களை அறிந்து கொண்டனர்.

 

*****


(Release ID: 1587743) Visitor Counter : 290