ஜவுளித்துறை அமைச்சகம்

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, ஜெனீவாவில் நடைபெற உள்ள உலக பருத்தி தினக் கொண்டாட்டங்களில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கிறார்

Posted On: 04 OCT 2019 4:07PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை, ஜெனிவாவில் இம்மாதம் 7-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறும் உலக பருத்தி தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறது. உலக வர்த்தக நிறுவனம் பருத்தி தினக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தத் துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி, இந்த நிகழ்ச்சியின் கூட்டத்தில் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் அரசுத்தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள், தனியார்துறை நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.

     பருத்தி நாடுகள் என்றழைக்கப்படும் பெனின், பர்கினோ ஃபாசோ, சாடு, மாலி ஆகிய நான்கு நாடுகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க உலக வர்த்தக அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது.  அக்டோபர் 7-ம் தேதியை உலக பருத்தி தினமாக அங்கீகரிக்க வேண்டும் என்று இந்த நாடுகள் ஐ.நா.விடம் மனு செய்துள்ளன. இயற்கை இழையாக, மக்களுக்கு உற்பத்தி, வர்த்தகம், நுகர்வு ஆகியவற்றில் பெரிதும் பயன்படும் பருத்தியின் பல நன்மைகளைக் கொண்டாடும் வகையில், உலகப் பருத்தித் தினம் அனுசரிக்கப்படும்.

     ஒரு டன் பருத்தி சராசரியாக ஐந்து பேருக்கு ஆண்டு முழுவதும் வேலை அளிக்கக் கூடியது. உலக பாசன நிலப்பரப்பில் 2.1 சதவீதமே பருத்தி பயிரிடப்பட்டாலும் உலக ஜவுளித் தேவையில் 27 சதவீதத்தை அது நிறைவு செய்கிறது.

     உலக பருத்தி தின நிகழ்ச்சியின் போது பங்கேற்பாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்தி குறித்த திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகள் குறித்து விவாதிக்கப்படும். மேலும், புகைப்படப் போட்டி, ஆடை அலங்கார நிகழ்ச்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



(Release ID: 1587248) Visitor Counter : 347


Read this release in: English , Urdu , Hindi