|
குடியரசுத் தலைவர் செயலகம்
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரு.ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUL 2019 1:52PM by PIB Chennai
- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு பட்டமளிப்பு விழாவில் உங்களிடையே இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று சட்டம் மற்றும் நீதித்துறையில் சிறப்பான சேவை புரிந்ததற்காக நீதிபதி சதாசிவம், நீதிபதி பாப்டே மற்றும் நீதிபதி தகில்ரமானி ஆகிய நீதிபதிகளுக்கு எல்எல்டி பட்டம் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகம் ஒன்று 3 நீதிபதிகளுக்கு ஒரே நேரத்தில் எல்எல்டி பட்டம் வழங்குவது இதுவே முதல் முறை என்று அறிகிறேன்.
- இந்த 3 நீதிபதிகளும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கின்றனர். இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம், உச்சநீதிமன்றம், பஞ்சாப், அரியானா மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி உள்ளார். நீதிபதி பாப்டே 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக இவர் மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார். 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட நீதிபதி தகில்ரமானி, 2001 ஆம் ஆண்டு முதல் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும், அந்த நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார். சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது பெண் தலைமை நீதிபதியான இவர், கோடிக்கணக்கான இந்தியர்கள், குறிப்பாக நம் மகள்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார். எல்எல்டி பட்டம் வழங்கப்பட்டுள்ள இந்த 3 நீதிபதிகளுக்கும் வாழ்த்து தெரிவிப்பதோடு சட்டத் துறையில் இவர்களது பங்களிப்பை அங்கீரிக்கும் வகையிலான பல்கலைக்கழகத்தின் முடிவைப் பாராட்டுகிறேன்.
- சட்டத் துறையில் அறிவாற்றலை மேம்படுத்தவும், சட்டக் கல்வி மற்றும் சமூக நீதியை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்நாடு அரசு இந்தப் பல்கலைக்கழகத்தை 1997 ஆம் ஆண்டு நிறுவியது. இந்தப் பல்கலைக்கழகத்தை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.கே.ஆர்.நாராயணன் தொடங்கி வைத்தார். 20 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு புதுப்பொலிவு சேர்த்துள்ளது.
- இந்தப் பல்கலைக்கழகத்திலும், தமிழகமெங்கும் உள்ள இதன் சார்புடைய கல்லூரிகளிலும் தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என்று அறிகிறேன். இந்தப் பல்கலைக்கழகம் பி.காம்.எல்எல்பி, பி.சி.ஏ.எல்எல்பி போன்ற கலப்பு பட்டப்படிப்புகளையும் வழங்குகின்றது என்று அறிகிறேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சியில் தனது நற்பெயரை உறுதிப்படுத்தியுள்ளது என்பதோடு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதற்கான நோக்கங்களையும் சிறந்த முறையில் நிறைவேற்றியுள்ளது. நமது அரசியல் சட்டத்தின் தலைமை சிற்பியான பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பெயரைக் கொண்டுள்ள இந்தப் பல்கலைக்கழகத்திடமிருந்து இதை விட வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.
- சட்ட மாணவன் மற்றும் வழக்கறிஞர் என்கின்ற முறையில் நாட்டின் வளர்ச்சியில் சட்டக் கல்வியின் முக்கியத்துவம் முக்கியமாக சட்டப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு பற்றி நான் வலியுறுத்த விரும்புகிறேன். சட்டத்தின் ஆட்சியால் நிர்வகிக்கப்படும் சமூகம் மற்றும் நாடு என்கின்ற முறையில் நாம் சட்டத்திற்கு பின்னால் இருக்கும் உணர்வு மற்றும் நோக்கத்தை வலியுறுத்தித்தான் ஆக வேண்டும்.
- நமது நாடு, சமூகம், பொருளாதாரம் மாற்றமடைவது போல், சட்டத் தொழிலும் மாற்றம் காண்கிறது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகள் சட்ட செயல்பாட்டின் முக்கியக்கூறு என்றாலும், ஒரு சட்ட பட்டதாரிக்கு, முந்தைய தலைமுறைகளில் கிடைக்காத பல புதிய வழித்தடங்கள் இன்று எளிமையாக கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
- பல வருடங்களாக சட்டம் பற்றிய நமது புரிதலும், அதற்கான செயல்பாடும் விரிவடைந்திருப்பதோடு மேலும் அதிநவீனமாகி உள்ளன. தனி உரிமை மற்றும் தனிநபர் தேர்வின் நுணுக்கங்கள்; உரிமைகள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய கோட்பாடுகள் குறித்த ஆழமான கேள்விகள், புதுமைக்கான தன்னாட்சி, பொது நன்மைக்கான கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு இடையே மகிழ்ச்சியான சம நிலையைக் காண்பதற்கான தேடல் முக்கியமாக உயிரி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகிய துறைகள் இதற்கான எடுத்துக்காட்டுகளாகும்.
- எனினும், இவை எல்லாவற்றிலும் முக்கியமாக சாமானிய குடிமக்களுக்கான சட்ட உள்கட்டமைப்பு மற்றும் நீதிக்கான அணுகுமுறை ஆகியவற்றில் நாம் போதுமான கவனம் செலுத்துகிறோமா? சட்ட எழுத்தறிவை மேம்படுத்துவது மற்றும் சட்ட விதிகளை எளிமையாக்குவது ஆகியவற்றுக்கான தேவை உள்ளது. நீதியை மக்களிடம் கொண்டு செல்வது மட்டும் முக்கியமல்ல, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய மொழியிலும் அது இருக்க வேண்டும். தீர்ப்புக்களின் சான்றிதழ் பெற்ற நகல்களை உள்ளூர் அல்லது பிராந்திய மொழிகளில் உயர்நீதிமன்றங்கள் வெளியிடுவதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம். 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கொச்சியில் நடைபெற்ற கேரள உயர்நீதிமன்றத்தின் வைர விழா நிறைவு நிகழ்ச்சியின் போது நான் இந்த ஆலோசனையை முன்வைத்தேன். சில நாட்களுக்குப் பிறகு நான் சத்தீஸ்கர் சென்றிருந்தபோது, அன்று சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் உள்ள திரு.டி.பி.ராதாகிருஷ்ணனோடு நான் இது குறித்து விவாதித்தேன். சில நாட்களிலேயே சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் இந்த ஆலோசனையை செயல்படுத்தியது. அது முதல் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின் இந்தி மொழிபெயர்ப்பு வழக்கு சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கிறது. இந்த ஆலோசனையை மற்ற உயர்நீதிமன்றங்களும் செயல்படுத்துகின்றன என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். சான்றளிக்கப்பட்ட நகல்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மலையாளத்திலும். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழிலும் பெறச் செய்யலாம்.
- நீதியை விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கச் செய்வதிலும் வழக்கறிஞர் சமூகத்திற்கு பெரும் பொறுப்பு உள்ளது. வழக்கறிஞர் என்பவர் நீதிமன்றத்தில் உள்ள சட்ட அதிகாரி ஆவார். இவர் தனது வாடிக்கையாளருக்குப் பொறுப்புடையவர் என்பதோடு நீதியை வழங்குவதில் நீதிமன்றங்களுக்கு உதவுவதையும் கடமையாக்க் கொண்டவர் ஆவார். நமது சட்ட முறை அதிக செலவினம் கொண்டது, தாமதப்படுகிறது என்று சொல்லப்படுகிறது. வாய்தா எனும் கருவி அவசர கால நடவடிக்கைக்கு பதிலாக, வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்து வதற்கு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதனால் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நீதி பெறுவதற்கு அதிகம் செலவிட வேண்டியுள்ளது. செல்வந்தர் ஒருவரும், ஏழை ஒருவரும் ஒரே மாதிரியாக சட்டத்தை அணுக முடியவில்லை என்றால் அது நமது குடியரசு முறையை பரிசிப்பதாக ஆகிவிடும். சட்டத் தொழில் துறை இந்நிலைக்கு ஒட்டு மொத்தமாக தீர்வு காண வேண்டும்.
- சட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் – அவர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற அதிகாரிகள், சட்ட ஆசிரியர்கள் என்று யாராக இருந்தாலும் – சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வது அவர்களது முக்கியப் பொறுப்பாகும். இவர்களது பணி விரிவானது, மிகுந்த தொலைவிற்கு செல்லக் கூடியது. நியாயமான சமூகத்தை உருவாக்குவதற்கான முக்கிய கூறுகளில் இவர்கள் ஒன்றாக இருக்கின்றனர். பொது நெறிமுறைகளின் உயரிய தரத்தைப் பராமரிப்பதற்கு, சட்ட தொழிலில் உள்ளவர்கள் தங்களது பொறுப்பைத் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தச் சமூகம் இவர்களிடமிருந்து சிறந்ததைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை.
- முடிவில் இன்று எல்எல்டி பட்டம் பெற்ற 3 நீதிபதிகளுக்கும் நான் மீண்டும் வாழ்த்து தெரிவிக்கிறேன். இந்தப் பல்கலைக்கழகம், அதில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறப்பு பெற வேண்டுமென்று வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
ஜெய்ஹிந்த்
******
(வெளியீட்டு அடையாள எண்: 1578656)
|