நிதி அமைச்சகம்
மேம்பாட்டு நிதி நிறுவனங்கள் மூலமாக தேவையான நிதி பெறுவது மற்றும் கட்டமைப்புகள் குறித்து பரிந்துரை செய்ய நிபுணர் குழு அமைக்கப்படும்
Posted On:
05 JUL 2019 1:41PM by PIB Chennai
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டுத் திட்டங்களில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்ய உத்தேசித்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது. மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தபோது, இதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டார். நீண்டகால நிதி குறித்த இப்போதைய நிலைமை பற்றி ஆராயவும், மேம்பாட்டு நிதி நிறுவனங்களில் நமது கடந்த கால அனுபவங்களை ஆய்வு செய்யவும், அந்த நிறுவனங்கள் மூலம் முதலீடுகளைப் பெறுவதற்குத் தேவைப்படும் கட்டமைப்புகள் பற்றி பரிந்துரைக்கவும் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வீட்டுவசதித் துறையில் சிறப்பான, சுமுகமான ஒழுங்குமுறை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வீட்டுவசதித் துறையின் ஒழுங்குமுறை நிர்வாகப் பொறுப்பை என்.எச்.பி.-யிடம் இருந்து ரிசர்வ் வங்கிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
என்.பி.எஸ். டிரஸ்ட் அமைப்பை PFRDA-ல் இருந்து, உரிய அமைப்பு ரீதியிலான கட்டமைப்புகளுடன் தனியாகப் பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். நிகர சொந்த நிதி தேவை அளவை ரூ.5,000 கோடியில் இருந்து ரூ. 1,000 கோடியாகக் குறைக்கவும் உத்தேசிக்கப் பட்டுள்ளது.
நிதி நிலைமை வலுவாக இருக்கும் என்.பி.எப்.சி. நிறுவனங்களில் இருந்து அதிக மதிப்புள்ள தொகுப்பு சொத்துகளை வாங்குவதற்கு, நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு, பொதுத் துறை வங்கிகளுக்கு பகுதியளவுக்கு கடன் உத்தரவாதத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஒரு முறை மட்டுமே ஆறு மாத காலத்துக்கு, 10 சதவீதம் வரையிலான முதலாவது இழப்புக்கு இது வழங்கப்படும்.
********
(Release ID: 1577505)