நிதி அமைச்சகம்

சிறு நிறுவனங்கள் பெருநிறுவனங்களாக வளர ஊக்குவித்தல்: சிறு குறு நடுத்தர தொழில்களின் வளர்ச்சிக்கு ஏற்ப கொள்கைகளை மாற்றி அமைத்தல்

Posted On: 04 JUL 2019 12:13PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரத் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக கொள்கைகளை சீரமைப்பது பற்றிக் குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், இந்த நிறுவனங்கள் அதன் முதலாளிகளுக்கு நல்ல லாபத்தைத் தருவதுடன் வேலைவாய்ப்புகள் உருவாக்குவதிலும், பொருளாதாரத்தில் உற்பத்தியைப் பெருக்குவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளில் இருந்து அவற்றை விடுவிப்பதன்  மூலம் அவை வளருவதற்கு ஏற்ற வகையில் நமது கொள்கைகள் அமைய வேண்டும்.

இருந்தபோதிலும், வளர்வதற்கான வாய்ப்புள்ள நிறுவனங்களுக்கு ஏற்றதாக இல்லாமல், ஒருபோதும் வளராமல் இருக்கும் சிறிய நிறுவனங்களுக்கு ஆதரவான கொள்கைகள் காரணமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கும் நிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. அந்த நிறுவனங்கள் பெரிய வளர்ச்சி காணக் கூடிய வாய்ப்பில் இருந்தாலும், ஊக்கத் திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக குறு, சிறு தொழில் பிரிவில் நீடிக்கின்றன. 100 தொழிலாளர்களுக்கும் குறைவானவர்கள் உள்ள சிறிய நிறுவனங்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகின்றபோதிலும் - உற்பத்தித் துறையில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தப் பிரிவில் உள்ளன - வேலைவாய்ப்பு வழங்குவதில் அவற்றின் பங்கு வெறும் 14 சதவீதமாக மட்டுமே உள்ளன. அவற்றின் உற்பத்தி அளவு வெறும் 8 சதவீதமாக மட்டுமே உள்ளது. இதற்கு மாறாக, பெரிய நிறுவனங்கள் (100 தொழிலாளர்களுக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் நிறுவனங்கள்) இதுபோன்ற வேலைவாய்ப்பில் முக்கால்வாசி இடத்தை எடுத்துக் கொள்கிறது. எண்ணிக்கையில் இவை 15 சதவீதமாக மட்டுமே இருந்தாலும், உற்பத்தியில் சுமார் 90 சதவீத பங்கைப் பெற்றுள்ளன.

நிறுவனங்களின் வயது மற்றும் வளைந்து கொடுக்காத தொழிலாளர் வரன்முறைகள் என்ற அடிப்படைகள் இல்லாமல் அளவின் அடிப்படையில் ஊக்கத் திட்டங்கள் அளிக்கப் படுகின்றன. இதனால் நிறுவனங்களின் அளவு வரையறுக்கப்படுகிறது. அதுதான் இந்த நிலையை உருவாக்குகிறது. குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை இதில் இருந்து விடுவிக்கவும், அவை வளர உதவி செய்யவும், பத்து ஆண்டுகளுக்கும் குறைவான நிறுவனங்களுக்கு தேவையான பின்னணிகள் இருந்தால், எல்லா அளவிலான நிறுவனங்களுக்கும் ஊக்கத் திட்டங்களை அளிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

*****


(Release ID: 1577249)
Read this release in: English , Marathi