நிதி அமைச்சகம்

மின்சார வாகனங்களின் மொத்த விலையைக் குறைக்க உரிய கொள்கை தேவை

“மின்சார வாகனங்களின் சந்தையை அதிகரிக்க வேகமாக மின்னூட்டும் வசதிகளை உருவாக்க வேண்டும்”

Posted On: 04 JUL 2019 12:05PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2018-19ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அந்த ஆய்வறிக்கையில், “மின்சார வாகனங்களுக்கு இந்தியாவில் நிறைய வரவேற்பு இருக்கிறது. அது சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது மட்டுமல்ல. மின்சார வாகனங்களின் உற்பத்தியில் இந்தியா ஒரு முக்கிய மையமாக வளர்ச்சி பெறும் என்பதுடன், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வளர்ச்சிக்கான வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என்பதும் காரணமாகும்” என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

“(வாகன உற்பத்தியில் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ள) டெட்டராய்டு நகரைப் போல் இந்தியாவின் ஒரு நகரம் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் என்று எண்ணுவது நடக்கக் கூடாதது அல்ல” என்று கூறிய பொருளாதார ஆய்வறிக்கை,  “அதற்கு மின்சார வாகனங்களின் விலையைக் குறைத்து,  எரிபொருள் வாகனங்களுக்கு மாற்று வாகனங்களாக நுகர்வோரைக் கவரும் வகையில் தயாரிப்பதற்கு ஏற்ப உரிய கொள்கை நடவடிக்கைகள் தேவை” என்றும் யோசனை கூறியுள்ளது.

சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறையை (2018) சுட்டிக் காட்டிய பொருளாதார ஆய்வறிக்கை “இந்தியாவில் தொழில்நிறுவனங்களில் கரியமில வாயுவை (CO2) வெளியிடுவதில் போக்குவரத்து துறை இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிலும் 90 சதவீதம் கார்பன்-டை-ஆக்ஸைடு (CO2) கழிவு சாலைப் போக்குவரத்து வாகனங்களின் மூலம் வெளியேற்றப்படுகிறது. வாகனப் போக்குவரத்துக்கு பெட்ரோலிய உற்பத்தியைச் சார்ந்தே இருக்க வேண்டிய சூழலில் மாற்று எரிசக்தி குறித்து பரிசீலிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

உலக அளவில் மின்சார வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்த பொருளாதார ஆய்வறிக்கை, “சீனாவில் மொத்த வாகனங்களில் 2 சதவீதம் மின்சார வாகனங்கள், நார்வேயில் 39 சதவீத வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குகின்றன. ஆனால், இந்தியாவில் மொத்த வாகனங்களில் 0.06 சதவீதம் மட்டுமே மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள் ஆகும். மின்சார வாகனங்களில் மின்சார இரு சக்கர வாகனங்கள் மிகப் பெரும் பங்கு வகிக்கின்றன. 2018ம் ஆண்டு மொத்தம் 54,800 மின்சார இரு சக்கர வாகனங்கள் விற்கப்பட்டன என்று நிதி ஆயோக் கூறுகிறது. அண்மைக் காலமாக மின்சாரத்தால் இயங்கும் இரு சக்கர வாகனங்கள், பேருந்துகளுக்கு மெல்ல வரவேற்பு அதிகரித்து வருகிறது“ என்றும் பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

“போதிய மின்னூட்டும் வசதி கிடைப்பது அதிகரிப்பதால், மின்சார  வாகனங்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. எனவே, அவ்வாறு வாகனங்களுக்கு மின்னூட்டம் செய்வதற்கான நிலையங்களும் சாலைகளில் அமைக்கப்பட வேண்டியது முக்கியமாகும். மின்சார வாகனங்களின் உற்பத்தி, சந்தையை அதிகரிக்க விரைந்து மின்னூட்டும் வசதிகள் அமைக்க வேண்டும்.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் உள்ள தடைகளைப் பற்றி சுட்டிக் காட்டிய பொருளாதார ஆய்வறிக்கை, “மின்சார வாகனங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்குப் போதுமான மின்னூட்டு வசதிகள் இல்லாமை மிகப் பெரிய தடையாக இருக்கிறது. அடுத்து, மின்சாரத்தை வாகனத்துக்குச் செலுத்துவதற்கும் நேரம் அதிகமாகிறது. பெட்ரோலிய வாகனங்கள் மிகக் குறைந்த நேரத்தில் தேவையான எரிபொருளைச் செலுத்த முடிகிறது. எனவே, தரமான மின்னூட்டு வசதிகளை வகுத்து, அதற்கான கட்டுமான வசதிகளை உருவாக்க முதலீடு செய்வதற்கு உரிய கொள்கை வகுக்கப்பட வேண்டும். அது மட்டுமின்றி, மின்சார வாகனங்களுக்கு பொது மின்னூட்டி நிலையங்கள்  குறித்து மக்களுக்கு உரிய வகையில் தகவல் தெரிவிக்கவும் வேண்டும். ஆன்லைன் வழி வரைபடங்கள் இதர குறியீடுகள் ஆகியவற்றையும் ஏற்படுத்துவதும் மிக முக்கியமானது. இத்தகைய நடவடிக்கைகள் மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவதை எளிதாக்கும்.

எந்த மின்சார வாகனத்துக்கும் பாட்டரி இதயத்தைப் போல அமைந்துள்ளது. எனவே, அந்தத் தொழில்நுட்பத்துக்கு ஏற்ற பாட்டரிகளை உருவாக்கும். அதிக வெப்பத்திலும் இயங்கக் கூடிய வகையில் உரிய பாட்டரி தொழில்நுட்பங்களை  மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என 2018ம் ஆண்டுக்கான நிதி ஆயோக் அறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை குறித்து நிதி ஆயோக் சில மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. அதன்படி இந்தியாவில் 2030ம் ஆண்டில் தனியார் கார்கள் 30 சதவீதம், வர்த்தகப் பயன்பாட்டுக் கார்கள் 70 சதவீதம், பேருந்துகள் 40 சதவீதம், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் 80 சதவீதம் என்ற அளவில் விற்பனையை எட்டினால், 84.60 கோடி டன் அளவுக்கு கார்பன்- டை- ஆக்ஸைடு  கழிவை வெளியேற்றுவதைக் குறைக்கலாம். 47.40 கோடி டன் பெட்ரோலிய எரிபொருளை மிச்சப்படுத்தலாம். இவற்றுடன், உரிய கொள்கைகள் ஆதரவாக அமைந்தால் மின்சார வாகனங்களின் உற்பத்தி மையத்தை மேம்படுத்தவும் வாய்ப்புள்ளது“

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

****

 



(Release ID: 1577216) Visitor Counter : 454


Read this release in: English , Marathi