பிரதமர் அலுவலகம்

ஆக்ராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் சுருக்கம்

Posted On: 09 JAN 2019 8:50PM by PIB Chennai

பாரத் மாதாகி ஜெ!

பாரத் மாதாகி ஜெ!

பாரத் மாதாகி ஜெ!

இந்தப் புத்தாண்டில் உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் முதலாவது நிகழ்வு இதுவாகும். உத்தரப்பிரதேசத்தில் மக்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு (2019) நல்வாழ்த்துக்கள். புதிய இந்தியாவை உருவாக்கும் உங்கள் அனைவரையும் நான் வணங்குகிறேன்.

நண்பர்களே,

ஆக்ராவில் உங்கள் முன்னால் நான் வந்திருப்பது எனது அதிர்ஷ்டமாகும். உங்களிடம் நான் ஆதரவு கோரும் போதெல்லாம் ஒட்டு மொத்த உத்தரப்பிரதேசமும், ஒட்டு மொத்த தேசமும் என் மீது வாழ்த்துக்களைப் பொழிகின்றன. உங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ஓய்வின்றி நான் முயற்சி செய்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்கள் எனக்கு இருப்பதால் நேர்மையான பாதையில் நான் தொடர்ந்து நடைபோடுகிறேன். உங்களுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு அர்ப்பணிப்போடு சேவை செய்கிறேன்.

      உங்களின் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பால் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற இயக்கம் மேலும் ஒரு மைல் கல்லைத் தாண்டுகிறது. ஆக்ராவில் சற்று நேரத்திற்கு முன் ரூ.3,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்திருப்பது இந்த திசையில் செயல்படுத்தப்பட்டுள்ள முக்கியமான செயலாகும்.

இந்தத்  திட்டங்கள் முதன்மையாக்க் குடிநீர், கல்வி, சுகாதாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு, போக்குவரத்து ஆகியவற்றோடு தொடர்புடையவை. அதாவது ஆக்ராவைப் பொலிவுறு நகரமாக மாற்றுவதோடு தொடர்புடையவை. இந்தத் திட்டங்கள் தொடங்கப்படுவதற்கு எனது சகோதர, சகோதரிகள் ஆகிய உங்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இவற்றுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் அளித்த ஜப்பானுக்கும் எனது அடிமனதிலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதர சகோதரிகளே,

உங்களின் நீண்ட கால கோரிக்கை இன்று நிறைவேறியிருக்கிறது. ஆக்ராவிலிருந்து மதுரா வரை தண்ணீர் தட்டுப்பாடு ஒரு பிரச்சனையாக இருக்கிறது. நிலத்தடி நீர் பெரும்பாலும் உவர்ப்பாக இருப்பதால் குடிப்பதற்குப் பயன்படுத்த இயலவில்லை. உயிர் வாழ்வதை சாத்தியமாக்கும் யமுனா தாயும் மிகவும் மாசுபடுத்தப்பட்டதால் அங்குள்ள தண்ணீரும் குடிநீருக்குப் பயன்படவில்லை. இதன் காரணமாக ஆக்ராவின் தாகத்தைத் தீர்க்க கங்கை கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது. ஆக்ராவில் குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய ரூ.3,000 கோடி மதிப்புள்ள கங்கா நீர் திட்டம் இன்று உங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தப் பகுதி முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான குடும்பங்களுக்குத் தூய்மையான குடிநீர் கிடைக்கும். கங்கை நதி தூய்மைத் திட்டத்தின் கீழ் யமுனா நதியைத் தூய்மைப்படுத்துவது மத்திய அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது என்ற தகவலை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

நண்பர்களே

      “உத்தரவு மற்றும் கட்டுப்பாட்டு மையம்” என்ற புதிய பணி ரூ.300 கோடி செலவில் ஆக்ராவில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைக்கப்பட்டுள்ள 1200-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் ஆக்ரா முழுவதையும் கண்காணிக்க உதவும்.

சகோதர சகோதரிகளே

இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்களுக்கு மீண்டும் நான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய வாழ்த்துக்களைப் பொழிய இவ்வளவு பெரும் திரளாக வந்திருப்பதற்கு நான் பெருமிதம் கொள்கிறேன். என்னோடு சேர்ந்து நீங்களும் முழக்கமிடுங்கள்.

பாரத் மாதாகி ஜெ!

பாரத் மாதாகி ஜெ!

பாரத் மாதாகி ஜெ!

மகர சங்கராந்தி விழாவுக்கு முன்கூட்டியே எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

***



(Release ID: 1575104) Visitor Counter : 170


Read this release in: Assamese , English , Marathi