பிரதமர் அலுவலகம்

உத்திரப் பிரதேச மாநிலம் கான்பூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 08 MAR 2019 8:00PM by PIB Chennai

கங்கை அன்னையைப் போற்றுவோம்!

கங்கை அன்னையைப் போற்றுவோம்!

கங்கை அன்னையைப் போற்றுவோம்!

 

நான் பேசத் தொடங்குவதற்கு முன்னால் மூன்று முறை பாரத அன்னையைப் போற்றுவோம் என்று உரக்கக் குரலெழுப்புமாறு உங்களைக் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் இரண்டு கைகளையும் உயர்த்திப் பிடித்தபடி இந்த கோஷத்தை எல்லையில் நின்று கொண்டிருக்கும் நமது படைவீரர்களின் காதுகளில் விழும்படி உரக்க எழுப்புமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மூன்று முறை சொல்லுங்கள்!

வலிமைமிக்க இந்தியாவிற்காக பாரத அன்னையைப் போற்றுவோம்!

வெற்றிக் கொடி நாட்டும் இந்தியாவிற்காக பாரத அன்னையைப் போற்றுவோம்!

வீரமிக்க நம் படைவீரர்களுக்காக பாரத அன்னையைப் போற்றுவோம்!

உத்திரப் பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக் ஜி அவர்களே! மக்களின் பரவலான ஆதரவைப் பெற்ற, உற்சாகமிக்க உத்திரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத், துணைமுதல்வர், எனது நாடாளுமன்ற சகாக்கள், எனது வழிகாட்டியும் மூத்த தலைவருமான மரியாதைக்குரிய டாக்டர் முரளி மனோகர் ஜோஷி ஜி, உத்திரப் பிரதேச மாநில அமைச்சர்களான பாய் சதீஷ் ஜி, சத்யதேவ் ஜி, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவரும் எனது நாடாளுமன்ற சகாவுமான டாக்டர் மகேந்திர பாண்டே ஜி, திரு. தேவேந்திர சிங் ஜி, மேயர் பிரமிளா ஜி, பெரும் எண்ணிக்கையில் இங்கு திரண்டு வந்து தங்கள் வாழ்த்துக்களைப் பொழிந்து கொண்டிருக்கும் கான்பூர் நகரத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்!

நேற்று நாக்பூர் நகரில் மெட்ரோ ரயில் சேவையை நான் தொடங்கி வைத்தேன். இன்று கான்பூர் நகரில் மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி வைக்கிறேன்.

சகோதர, சகோதரிகளே,

அன்னை கங்கையின் கரையில் அமைந்திருக்கும் இந்த கான்பூர் மண்ணுக்கு எனது வணக்கத்தை முதலில் செலுத்த விழைகிறேன். நாட்டின் விடுதலைப் போராட்டத்திலிருந்து தொடங்கி சுதந்திர இந்தியா வரையில் பல்வேறு வீரமறவர்கள், வீர மகன்கள் ஆகியோரின் வாழ்க்கையை வடிவமைத்திட்ட நகரமாக இந்தக் கான்பூர் நகரம் திகழ்கிறது. நானா பேஷ்வா, தாந்தியா தோபே, ராணி லஷ்மி பாய் போன்ற பல சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு உத்வேகம் அளித்த மண் இந்த நாக்பூர். அதைப் போன்றே பண்டிட் தீன் தயாள் உபாத்யாயாஜி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஜி, இன்றைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜி போன்றவர்களின் வாழ்க்கைக்கும் கான்பூர் வழிகாட்டி வந்துள்ளது.

நண்பர்களே,

உழைப்பாளர் சக்தி மற்றும் அதன் வலிமையைக் கொண்டு நீங்கள் அனைவரும் இந்த நகரை மிகவும் முக்கியமானதொரு தொழில் நகரமாக உருவாக்கியிருக்கிறீர்கள். கிழக்கு மான்சென்ஸ்டர் என்ற ஓர் அடையாளத்தை கான்பூர் நகருக்கு நீங்கள் தந்திருக்கிறீர்கள். இந்த அடையாளத்திற்கும், கான்பூரின் அன்றாட வாழ்க்கைக்கும், இங்கிருக்கின்ற வர்த்தகத்திற்கும் மேலும் வலிமையைக் கொடுக்கவும் இங்கிருக்கின்ற நிறுவனங்களுக்கு வலுவூட்டவும்தான் உங்களிடையே இருப்பதற்கான வாய்ப்பு எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது. சற்று நேரத்திற்கு முன்பாக கான்பூர் மற்றும் உத்திரப் பிரதேசத்தின் வளர்ச்சி தொடர்பான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் மதிப்புள்ள திட்டங்கள்  இங்கே தொடங்கி வைக்கப்பட்டன; அவற்றுக்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டன. இந்தத் திட்டங்கள் அனைத்துமே போக்குவரத்து, மின்சாரம், புதிய நிறுவனங்கள், கங்கை நதியின் தூய்மை, நகரத்தின் தூய்மை, ஏழைகளுக்கு வீடு வழங்குவது போன்ற பல்வேறு வசதிகளோடு தொடர்புடையனவாகும். மேலும் லக்னோ மற்றும் ஆக்ரா நகரங்களின் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கி வைக்கப்பட்டது. கான்பூர் மெட்ரோவிற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. வளர்ச்சிக்காக இங்கு மேற்கொள்ளப்பட்ட இந்த வேலைகள் அனைத்துமே உத்தரப் பிரதேச மாநில மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரும் மாற்றங்களை கொண்டுவரவிருக்கின்றன.

சகோதர, சகோதரிகளே,

கான்பூர் ஒரு தொழில் நகரமாகும். மின்சார வசதியை சிறப்பாக வழங்குவது அதன் முன்னுரிமையாகும். இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நிலவிய மின்சார வசதியைப் பற்றி உங்கள் அனைவருக்குமே நன்கு தெரியும். இப்போது யோகி ஜி அரசு மின்சாரம் குறித்து மேற்கொண்ட வேலையின் விளைவாக இங்கு இருக்கும் மக்களும் தொழில் முனைவர்களும் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து மீண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகள் மின்சாரத்தை வைத்துக் கொண்டு எத்தகைய அரசியலை செய்தார்கள் என்பதற்கு பாங்கி மின் திட்டமே ஓர் உதாரணமாகும். இந்தத் திட்டத்தின்  முதல் பிரிவு 52 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் தெரியுமா? இந்த விஷயங்களை கான்பூர் நகர மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின்  முதல் பிரிவு எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது? இரண்டாவது பிரிவு 43 ஆண்டுகளுக்கு முன்னால் நிறுவப்பட்டது. இத்தனை நீண்ட கால வேலை செய்த பிறகு அந்த இயந்திரங்களும் கூட தேய்ந்து போய்விட்டன. இதன் விளைவாக அதிலிருந்து உற்பத்தியாகும் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான செலவு ரூ. 10 ஆக இருந்தது. அந்தத் திட்டம் அதிகமான நிலக்கரியையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. இத்தகையதொரு நிலையை மாற்றுவதும் முக்கியமானதாகும்.

நண்பர்களே,

ரூ. 6000 கோடி செலவில் பாங்கி மின் திட்டத்தின் விரிவாக்க வேலைகள் இன்று தொடங்கியுள்ளன. இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பாதி விலைக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பதோடு சுற்றுச் சூழல் மாசுபடுவதையும் பெருமளவிற்குக் குறைக்கும். கான்பூர் நகரத்தின் சகோதர, சகோதரிகளே! நாங்கள் எப்படி வேலை செய்வோம் என்று உங்கள் அனைவருக்குமே தெரியும். இவ்வாறு இன்று அடிக்கல் நாட்டப்பட்ட இத்திட்டம் முறையாகத் தொடங்கப்படுவதையும் நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். அதாவது மூன்றாண்டுகளுக்குள் இந்தத் தொழிற்சாலைக்கான பணிகள் நிறைவு பெறும்போது நாங்கள் அதைத் தொடங்கியும் வைப்போம்.

சகோதர, சகோதரிகளே,

வணிக நிறுவனங்களுக்கு உதவி செய்வது மட்டுமின்றி ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சாரத்தை பகிர்ந்து கொடுப்பதையும் எமது அரசு வலியுறுத்தி வருகிறது. சவுபாக்யா திட்டத்தின் கீழ் உத்திரப் பிரதேசத்தில் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கான்பூர் நகரைப் பற்றி மட்டுமே சொல்வதெனில், ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு மக்களின் வாழ்க்கையில் நிலவி வந்த இருள் அகற்றப்பட்டுள்ளது. விவசாயிகளும் சாதாரண குடிமக்களும் போதுமான அளவிற்கு மின்சாரம் பெறுவதை உறுதிப்படுத்தவும் அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்கு முன்னால் அரசாங்கம் எவ்வாறு செயல்பட்டு வந்தது என்பதை நினைத்து நான் மிகவும் வியப்படைகிறேன். கான்பூரைப் போன்ற ஒரு தொழில்நகரில் ஒன்றரை லட்சம் குடும்பங்கள் அந்தி சாயும் நேரத்தில் இருளில் மூழ்கிக் கிடந்துள்ளன. ஏழைகளின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அந்த அரசுகளுக்கு இருந்திருந்தால் நீண்ட நாட்களுக்கு முன்பாகவே இந்த இருள் காணாமால் போயிருக்கும்.

நண்பர்களே,

அவர்களுக்கு அத்தகைய எண்ணம் ஏதுமில்லை என்பதற்கு கான்பூர் நகரை உதாரணமாகக் கொண்டே ஓர் உதாரணத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். கங்கையை சுத்தம் செய்வதென்ற பெயரில் எவ்வளவு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் வீணாக்கப்பட்டன என்பதை நீங்களே பார்த்தீர்கள். அந்தப் பணத்தை யார் எடுத்துச் சென்றார்கள்? அது வீணாகப் போனதா? அல்லது வேறு யாருடைய சட்டைப் பையிலாவது போய்ச் சேர்ந்ததா? ஆனால் சகோதர, சகோதரிகளே, அரசின் கருவூலம் காலியாகிப் போன போதிலும் நமது அன்னையான கங்கை நதி தூய்மையாகி விடவில்லை. இது உண்மையா? இல்லையா? ஆனால் 2014-ம் ஆண்டில் மக்கள், குறிப்பாக உத்திரப் பிரதேச மாநில மக்கள் நாட்டிற்கு சேவை செய்ய எங்களுக்கு வாய்ப்பு அளித்தபோது நிலைமைகள் மாறத்தொடங்கின. அதன் பிறகு நிலைமைகள் சீராகத் தொடங்கினகங்கோத்ரியிலிருந்து கங்காசாகர் வரையிலும் முழுமையான அர்ப்பணிப்புடனும், தீவிரத்துடனும், உறுதிப்பாட்டுடனும் அன்னை கங்கை நதியை தூய்மையாக்கும் கடமையில் இரவு பகலாக ஈடுபட்டோம். நமாமி கங்கா இயக்கத்தின் கீழ் நாடு முழுவதிலும் சுமார் 275 திட்டங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன. அவற்றில் 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கங்கை நதிக்கரைகளில் செயல்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

கான்பூரில் கங்கை நதி இருக்கும் நிலையைப் பார்க்கும் மக்கள் இந்த நிலையை மாற்றவே இயலாது என்றுதான் கூறுவது வழக்கம். எனினும் முடியவே முடியாது என்று இருப்பதை ஓரளவிற்கு இயலும் என்பதாக மாற்ற முடியும் என்று எமது அரசு நாட்டிற்கு உறுதி அளித்தது. அதற்கென ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டு அதன்படி நடக்கவும் தொடங்கினோம். வீடுகளில் இருந்தும் தொழிற்சாலைகளில் இருந்தும் வெளியேறி கான்பூரில் உள்ள அன்னை கங்கை நதியில் சென்று கலக்கும் கழிவுகளை மடைமாற்றுவதற்கும், அசுத்தமான நீரை சுத்தப்படுத்தவும் எமது அரசு மிகப்பெரும் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டது. ஆசியாவின் மிகப்பெரிய கழிவுநீர்ப் பாதை அன்னை கங்கை நதியில் நேரடியாகச் சென்று கலப்பது தடுத்து நிறுத்தப்பட்டது. வீடுகளில் இருந்து வெளிப்படும் கழிவுநீரை சுத்தப்படுத்துவது, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, நதிக்கரையோரப் பகுதிகளை அழகுபடுத்துவது ஆகியவை தொடர்பான திட்டங்கள் தொடங்கப்பட்டன; அல்லது அவற்றுக்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டன.

நண்பர்களே,

கங்கையைப் பாதுகாப்போம் என்ற திட்டத்தின் கீழ் தோல் பதனிடும் தொழிலுக்கென எமது அரசு ஒரு சிறப்புத் திட்டம் ஒன்றை வடிவமைத்தது. இந்தத் திட்டத்தின் கீழ்  தோல்பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து உருவாகும் கழிவுநீரை சுத்திகரிக்கும் மிகப் பெரும் ஆலைக்கான அடிக்கல் இன்று நாட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 கோடி லிட்டர் கழிவுநீர் கங்கை நதியில் நாள்தோறும் சென்று கலக்கின்ற செயல்முறை முற்றிலுமாகத் தடுத்து நிறுத்தப்படும்.

நண்பர்களே,                       

இங்கிருக்கின்ற பழைய, செயல்பட்டு வருகின்ற தொழில்களை பாதுகாப்பது மட்டுமின்றி, கான்பூரிலும் உத்திரப் பிரதேச மாநிலம் முழுவதும் புதிய தொழில் நிறுவனங்கள்  வளர்வதற்கும் எமது அரசு ஊக்கமளித்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான தொழில்களுக்கான சிறப்புப் பாதை பெருமளவிற்கு கான்பூர் நகருக்கே பயனளிப்பதாக இருக்கும். இதன் மூலம் கான்பூர் உத்வேகம் பெறும். குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தி நவீன கட்டமைப்பு வசதிகளை வளர்த்தெடுப்பதில் யோகி ஜி அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் இங்கு முதலீடு செய்வதற்கான சூழல் மிகவும் சாதகமானதாக மாறியுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலம் முழுவதிலும் சாலைகள், நெடுஞ்சாலைகள், அதிவேகச் சாலைகள், ரயில் பாதைகள், விமானப் போக்குவரத்து ஆகியவற்றுக்கான வலைப்பின்னல் உருவாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மெட்ரோ ரயில் வசதிகளும் மாநிலத்தின் பல நகரங்களிலும் உருவாக்கப்பட்டு வருகின்றன. கான்பூர் மெட்ரோ திட்டம் உள்ளிட்டு உத்திரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு மெட்ரோ திட்டங்களுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கான்பூர் மெட்ரோ திட்டம் நிறைவடைந்த பிறகு இங்குள்ள போக்குவரத்து அமைப்பு இதுவரை கண்டிராத மாற்றத்தைக் கொண்டிருக்கும்.

தொழில்நுட்பத்தின் உதவியோடு, லக்னோ மெட்ரோ திட்டத்தின்  இரண்டாவது கட்டமும் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லக்னோ நகரில் மொத்தம் 23 கிலோ மீட்டர் நீள மெட்ரோ ரயில் பாதை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. அதைப் போன்றே ஆக்ராவில் மெட்ரோ பாதைக்கான அடிக்கல் நாட்டுவிழாவும் நடைபெற்றுள்ளது. ஆக்ரா நகரில் மெட்ரோ ரயில் சேவை என்பது அங்குள்ள மக்களின் வாழ்க்கையை எளிமையாக்கும் என்பது மட்டுமின்றி சுற்றுலாத் துறைக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும்.

நண்பர்களே,

கான்பூர் நகருக்குத் தேவையான ஒவ்வொரு வசதியையும் செய்து தரவே எமது அரசு மிகுந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கான்பூர் நகரைச் சேர்ந்த பல ஏழைக் குடும்பங்களுக்கு அவர்களுக்கே சொந்தமான வீடுகள் இன்று வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் சுமார் ஒன்றரை கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதே காலப்பகுதியில் இதற்கு முன்பிருந்த அரசு வெறும் 25 லட்சம் வீடுகளை மட்டுமே கட்டியிருந்தது. அதே நேரத்தில் எமது அரசு ஒன்றரை கோடி வீடுகளை கட்டி முடித்துள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்திலும் கூட யோகி ஜியின் அரசு ஆட்சிக்கு வந்தபிறகு இந்த வீடு கட்டும் பணி மிக வேகமாக நடைபெறத் தொடங்கியது. இல்லையெனில் இதற்கு முன்பிருந்த அரசுக்கு நாங்கள் தொடர்ந்து நினைவூட்டல் கடிதங்கள் எழுதிக் கொண்டிருந்தோம். அப்போது உத்திரப் பிரதேச மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்தவர்கள் ஏழைகளைப் பற்றிக் கவலைப்படாதவர்களாகவே இருந்தனர்.

நண்பர்களே,

இந்தக் குடும்பங்களுக்கு வீடுகளை நான் வழங்கும் இத்தருணத்தில் கான்பூர் நகரத்திலிருந்து இன்று வரை தங்களுக்கான வீடுகளை இன்னமும் பெறாத ஏழைக் குடும்பங்களுக்கு எனது உறுதிமொழியை நான் மீண்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 2014-ம் ஆண்டில் நாங்கள் அரசு அமைத்தபிறகு இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளை இந்தியா கொண்டாடவிருக்கின்ற 2022-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் நிரந்தர வீடு இல்லாத எந்தவொரு குடும்பமும் இருக்காது என்று நாங்கள் கூறினோம். இன்று மிகுந்த பொறுப்புணர்வுடன் நான் எனது ஏழை சகோதரர்களுக்கும், சகோதரிகளுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மிகுந்த வேகத்துடன் வேலை செய்ததன் மூலம் அவர்களது 25 லட்சம் வீடுகளை ஒப்பிடும்போது, நாங்கள் ஒன்றரை கோடி வீடுகளைக் கட்டி முடித்துள்ளோம்இன்னமும் வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இனிவரும் காலத்திலும் கட்டப்படும். இன்னமும் வீடு கிடைக்காதவர்கள் தங்களது வீடுகளை நாளை பெறுவார்கள்; நாளையும் வீடு பெறாதவர்கள் 15 நாட்களுக்குப் பிறகோ அல்லது ஒரு மாதத்திற்குப் பிறகோ பெறுவார்கள்; எப்படியிருந்தாலும் 2022-ம் ஆண்டுக்கு முன்பாக நிச்சயமாக அவர்கள் வீடு பெற்றிருப்பார்கள். மோடி இருக்கும் வரை இது சாத்தியம் என்று நம்புங்கள். ஒவ்வொருக்கும் அவர்களுக்கான வீடுகள் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த அரசுகள் காணாமல் போய் விட்டன. இப்போது செயலை மட்டுமே நம்பும் அரசுதான் உங்களுக்கு முன்னால் வேலை செய்து கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

இன்று நான் கான்பூர் புனித மண்ணில் நின்று கொண்டிருக்கிறேன். இந்த நாட்டைப் பாதுகாப்பானதாக ஆக்க அளப்பரிய தியாகங்கள் செய்த மாபெரும் வீரர்களைப் போற்றவேண்டியது மிகவும் அவசியம்வளர்ச்சிப் பாதையை நோக்கி நம் நாடு சென்று கொண்டிருக்கிறது. கான்பூர் மண்ணில் இருந்து புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த ஷ்யாம் பாபுவையும், பட்காம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சகோதரர் தீபக் பாண்டேவையும் நான் வணங்குகிறேன்.

நான்தியாகிகள்என்று சொல்லும்போது  ‘அமரர் ஆகிவிட்டார்கள்!’ என்று இரண்டு முறை நீங்கள் அனைவரும் உரக்கக் கூறுங்கள்.

தியாகிகள்’ - ‘அமரர் ஆகிவிட்டார்கள்!’

தியாகிகள்’ - ‘அமரர் ஆகிவிட்டார்கள்!’

தியாகிகள்’ - ‘அமரர் ஆகிவிட்டார்கள்!’

நண்பர்களே,

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? நமது துணிவுமிக்க வீரர்கள் காட்டிய வீரத்தைக் கண்டு நீங்கள் அனைவரும் பெருமையோடு இருந்தீர்கள். இந்தியாவிற்கும் கூட வலிமையுண்டு என்று நீங்கள் உணர்ந்தீர்கள் அல்லவா? நமது ராணுவப் படைகள் தாங்கள் செய்ய நினைத்ததை நிறைவேற்றும் திறன் படைத்தவை. நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தீர்கள் அல்லவா? உங்கள் பெருமிதம் அதிகரித்தது அல்லவா? உங்களுக்கு பொறாமையாகவும் கூட இருந்தது அல்லவா? ஆனாலும் சகோதர, சகோதரிகளே, துரதிர்ஷ்டவசமாக, நமது நாட்டிற்குள்ளும் கூட நமது ராணுவப் படைகளின் வீரத்தை அவமரியாதை செய்ய முயற்சிக்கும் மக்கள் இருக்கின்றனர். இவர்கள் தங்களின் செயலை எண்ணி அவமானப்படவேண்டாமா? ஆனால் அவர்கள் அவமானப்படவில்லை. பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடிய மொழியில் பேசிய அந்த இந்தியர்களை நாம் மன்னிக்க வேண்டுமா என்ன? அவ்வாறு மன்னிக்கத்தான் முடியுமா? நமது ராணுவத்துக்குச் செய்த அவமரியாதை அல்லவா அது? நமது படைவீரர்களின் துணிவுக்குச் செய்த அவமரியாதை அல்லவா அது?

சகோதர, சகோதரிகளே,

இவ்வாறு வேண்டுமென்றே செய்கின்ற சிலர் இருக்கிறார்கள். விடுதலைப் போராட்டக் காலத்தில் மிக முக்கியமான பங்காற்றிய கான்பூரில் இருந்து, கான்பூர் மண்ணில் இருந்து அவர்களுக்கு எதிராக இந்த கடுமையான புகாரை நான் முன்வைக்கிறேன். ஒரு சில அரசியல் லாபங்களைப் பெறுவதற்காக இவர்கள் பயன்படுத்துகின்ற வார்த்தைஜாலங்கள், அரசுக்கு எதிராக அவர்கள் பயன்படுத்துகின்ற மிக மோசமான மொழியிலான புகார்கள் இவை எல்லாமே நமது எதிரிக்கு மேலும் வலுவூட்டுவதாகவே இருக்கின்றன. அரசியல் லாபத்திற்கான மோடிக்கு எதிராக அரசியல் எதிரிகள் பயன்படுத்துகின்ற வாதங்களை, பயங்கரவாதிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். நண்பர்களே, தேர்தல் என்பது வரும்; போகும். ஆனால் நமது நாட்டின் எதிரிகள் அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாதவாறு பார்த்துக் கொள்வது ஒவ்வொரு இந்தியனின் கடமை ஆகும். இல்லையா? ஒவ்வொரு கட்சி, ஒவ்வொரு அரசியல் தலைவரின் கடமையும் இதுவல்லவா?

சகோதர, சகோதரிகளே,

இன்று சர்வதேச நாடுகள் பாகிஸ்தானின் மீது நெருக்கடி கொடுத்து வரும் நேரத்தில் பயங்கரவாதத்தை வளர்த்தெடுப்பதில் பாகிஸ்தான் கையும் களவுமாகப் பிடிபட்டுள்ள இந்த நேரத்தில், அது அவமானப்பட்டு நிற்கும் நேரத்தில், அத்தகையதொரு சூழ்நிலையில் நமது மக்களின் இதுபோன்ற வார்த்தை ஜாலங்கள் பாகிஸ்தானுக்குத்தான் உதவி செய்வதாக இருக்கின்றன. இது போன்ற ஒரு காரியத்தைச் செய்வது சரிதானா? இது போன்ற நபர்களின் அறிக்கைகளை பாகிஸ்தான் உலகம் முழுவதும் பரப்பி, உலகத்தவரை திசைதிருப்புகிறது என்பதை மறந்துவிட வேண்டாம். இத்தகையதொரு பாவத்தைத்தான் இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கான்பூரின் மண்ணில் இருந்து இந்த நாட்டு மக்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எல்லை தாண்டிய பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றன் பின் ஒன்றாக எமது அரசு எடுத்து வரும் முடிவுகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இதன் விளைவாக, பயங்கரவாதிகள் தமது முடிவுக்காலத்தை எதிர்நோக்கி வருகிறார்கள்; அவர்களின் நடுக்கமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தகைய நடுக்கத்தின் விளைவாக, நேற்றும் கூட ஜம்முவில் மோசமான ஒரு தாக்குதலை நிகழ்த்த அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். எனினும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கையின் விளைவாக, அவர்களின் கூட்டாளிகளும், ஆதரவாளர்களும் இப்போது பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். இத்தகையதொரு சூழ்நிலையில், நமது நாட்டு மக்கள் அனைவரும், இந்தியர் என்ற முறையில், தொடர்ந்து விழிப்புடன் இருந்து நமது நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமையை முன்பை விட அதிகமான அளவில் நிறைவேற்ற வேண்டும்

நண்பர்களே,

நாட்டின் ஒற்றுமையைப் பாதுகாப்பதுதான் மிகவும் முக்கியமானதாகும். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில்  நாம் வெல்ல வேண்டுமா இல்லையா? பயங்கரவாதத்தை  ஆணிவேரோடு பிடுங்கி எறிய வேண்டுமா இல்லையா? யார் இதை முடிவுக்குக் கொண்டு வர முடியும்? யாரால் பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிக்க முடியும்?

சகோதர, சகோதரிகளே,

மோடி அல்ல; 125 கோடி இந்தியர்களால்தான் இதைச் செய்ய முடியும்! எனவே ஒற்றுமை, சகோதரத்துவம், நன்னம்பிக்கை ஆகியவை நம் நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலை நமக்குத் தேவை. முடிவுகளை மட்டும்தான் மோடியால் எடுக்க முடியும். அந்த வலிமையோடு நாம் பயங்கரவாதத்தை நசுக்கி எறிவோம். மோடியின் மகத்தான வலிமை என்பது நாட்டின் ஒற்றுமையும், இங்கு நிலவுகின்ற சகோதரத்துவமும் நன்னம்பிக்கையும்தான். இதற்கு உங்கள் அனைவரது ஆதரவும் எனக்குத் தேவை. உங்கள் ஆதரவைத் தருவீர்கள் அல்லவா? இந்தப் போராட்ட்த்தில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். இன்று நான் யோகி ஜியின் அரசைப் பாராட்டுகிறேன். நேற்று லக்னோ நகரில் ஒரு சில பைத்தியக்காரர்கள் நமது காஷ்மீர் சகோதரர்களுக்கு எதிராக தவறாக நடந்து கொண்டதைப் பார்த்தோம். இந்த விஷயம் குறித்து உத்திரப் பிரதேச மாநில அரசு விசாரணை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்காக யோகி ஜியின் அரசைப் பாராட்டுகிறேன்.

இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்ற மாநிலங்களையும் நான் கேட்டுக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு நாம் முடிவு கட்ட வேண்டும். ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தைக் கொண்டு முன்னே சென்று பயங்கரவாதத்தை  ஆணிவேரோடு நாம் அகற்ற வேண்டியது அவசியம்.

நண்பர்களே,

ஊழலையும், வாரிசு அரசியலையும் நீடித்து நிற்கச் செய்வதற்காகவே ஒரு சிலர் மாபெரும் கூட்டணி அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றனர். வாக்குகளைத் தேடி வரும்போதுதான் அவர்கள் துணிவுமிக்க நமது படைவீரர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், தொழில் துறை, கங்கை நதி ஆகியவை பற்றிய நினைப்பு அவர்களுக்கு வருகிறது. பயங்கரவாதம், ஊழல், வறுமை ஆகியவற்றுக்கு எதிராக தீர்மானகரமான போராட்டத்தை நடத்தி வரும் மோடியை இந்த மாபெரும் கூட்டணி என்ற விளையாட்டில் ஈடுபட்டு வருவோரால் தாங்க முடியவில்லை.

அவர்களின் பிரச்சனைதான் என்ன? இந்த மாபெரும் கூட்டணியைச் சேர்ந்தவர்களுக்கு யாருடன் தான் பிரச்சனை? வாருங்கள். மாபெரும் கூட்டணியை உருவாக்குவோம். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் உள்ளவர்களை, சிறைக்குச் செல்லவிருப்பவர்களை, பிணையில் வந்து வெளியில் இருப்பவர்களை சேர்த்துக் கொள்வோம். இப்படித்தான் அவர்கள் மாபெரும் கூட்டணியை அமைத்து மோடியின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் நான் சொல்வது என்ன? வாருங்கள் பயங்கர வாதத்திற்கு முடிவு கட்டுவோம் என்று சொல்கிறேன். ஆனால் அவர்கள் சொல்கிறார்கள். மோடிக்கு முடிவு கட்டுவோம் என்று. நாம் சொல்கிறோம் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம் என்று.

நண்பர்களே,

நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் - உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளவர்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்நாட்டின் ஒற்றுமைக்காகவும், வளர்ச்சிக்காகவும் நிற்கிறார்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். இங்கு தொடங்கப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நான் பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதற்காக பெரும் எண்ணிக்கையில் இங்கு கூடியுள்ள உங்களுக்கு எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் மக்கள் கடல்தான் எனக்குத் தெரிகிறது. என்னோடு சேர்ந்து உரக்கக் குரலெழுப்புங்கள்-

பாரத மாதாவிற்கு வெற்றி!

பாரத மாதாவிற்கு வெற்றி!

பாரத மாதாவிற்கு வெற்றி!

அனைவருக்கும் மிக்க நன்றி!



(Release ID: 1574778) Visitor Counter : 204


Read this release in: Assamese , English , Hindi