மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு) மசோதா 2019''-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 12 JUN 2019 7:50PM by PIB Chennai

பல்கலைக்கழகம் / கல்லூரி 200 புள்ளி ரோஸ்டர் அடிப்படையில் ஒரு பிரிவாகக் கருதப்படும்

ஆசிரியர் பணியில் தற்போதுள்ள 7000 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும்

புதிய மசோதா நாடாளுமன்றத்தின் வரவிருக்கும் கூட்டத் தொடரில் அறிமுகம் செய்யப்படும்

கல்வித் துறை சீர்திருத்தங்களுக்கு பெரிய உந்துதல் தரும் முயற்சியாகவும், பங்கேற்புடன் கூடியதாக ஆக்கும் வகையிலும், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் விருப்பங்களை மனதில் கொண்டும், பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், மத்தியக் கல்வி நிலையங்கள் (ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு) மசோதா 2019''-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பட்டியலின, பழங்குடியின, சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அரசியல் சட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் அமைச்சரவையின் முடிவு அமைந்துள்ளது. பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதையும் இது உறுதி செய்கிறது.

தாக்கம்

இந்த முடிவு பின்வரும் தாக்கங்களை ஏற்படுத்தும்:

  • ஆசிரியர் பணியிடத்தில் தற்போதுள்ள 7000 காலியிடங்கள் நேரடி நியமனம் மூலம், 200 புள்ளி ரோஸ்டர் அடிப்படையில் நிரப்புவதற்கு வழிவகுக்கப்படும். அரசியல் சட்டப் பிரிவுகள் 14, 16 மற்றும் 21ல் அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் அமல் செய்யப்படுவது உறுதி செய்யப்படும்.
  • ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்தில்  ஆதி திராவிடர்/ பழங்குடியினர் / சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு முழு பிரதிநிதித்துவம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் இருந்து தகுதியான திறமையான நபர்களைத் தேர்வு செய்வதன் மூலம் உயர்கல்வி நிலையங்களில் கற்பித்தல் தரம் மேம்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

விளைவுகள்:

இந்த மசோதா ``மத்திய கல்வி நிலையங்கள் (ஆசிரியர் பணியில் இடஒதுக்கீடு) அவசரச் சட்டம் 2019'' - க்கு மாற்றாக அமையும்.

அமலாக்கம்:

பல்கலைக்கழகம் / கல்லூரியை ஒரு பிரிவாகக் கருதி, 200 புள்ளி ரோஸ்டர் அடிப்படையில் முந்தைய இடஒதுக்கீட்டு நடைமுறையை மீண்டும் கொண்டு வர பரிசீலனை செய்யப்படும். `துறை / சப்ஜெக்ட்' என்பது இனிமேல் ஒரு பிரிவாகக் கருதப்படாது.

ஆசிரியர் பணிக்கு நேரடி நியமனத்தில் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டுப் பிரிவாக பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்கள் தான் இருக்கும். துறைகள் இனி பிரிவாகக் கருதப்படாது.

பட்டியலின, பழங்குடியின, சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கிய மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலும், அரசியல் சட்டத்தில் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும் அமைச்சரவையின் முடிவு அமைந்துள்ளது. பொருளாதார ரீதியில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதையும் இது உறுதி செய்கிறது.

*****

 



(Release ID: 1574275) Visitor Counter : 381


Read this release in: English , Kannada