பிரதமர் அலுவலகம்

சமூக பொருளாதார வளர்ச்சியில் எரிசக்தி முக்கிய பங்கு வகிக்கிறது: பெட்ரோடெக் 2019-ல் பிரதமர்

Posted On: 11 FEB 2019 12:04PM by PIB Chennai

நொய்டாவில் நடைபெற்ற பெட்ரோடெக் 2019 மாநாட்டில் பிரதமர்
திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரை.

வணக்கம்

சில காரணங்களால் இந்நிகழ்ச்சிக்கு நான் தாமதமாக வந்ததை முன்னிட்டு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவின் முன்னோடி ஹைட்ரோ கார்பன் மாநாடான பெட்ரோடெக் 2019, 13-வது தொகுப்புக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

எரிசக்தி துறை மற்றும் வருங்காலத்தின் தொலைநோக்குப் பார்வைக்காக மேதகு டாக்டர் சுல்தான் அல் ஜபரின் பங்களிப்புக்கு நான் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த 25 ஆண்டுகளாக, எரிசக்தித் துறையில் நாம் சந்தித்து வரும் சவால்கள் குறித்து விவாதிக்க பெட்ரோடெக் சிறந்த மேடையாக அமைந்துள்ளது.

நாம் அனைவரும் அவரவர் நாட்டில் அனைவரும் வாங்க கூடிய விலையில் தரமான, தூய்மையான மற்றும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய வகையில் எரிசக்தியை குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்றே கருதுகிறோம்.

இதனை பிரதிபலிக்கும் வகையில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளும், 7,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் இம் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

பல ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள நான், சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எரிசக்தி மிகவும் முக்கியம் என்று நம்புகிறேன். சரியான விலை, நிரந்தரமான எரிசக்தி விநியோகம், பொருளாதாரத்தின் அதிவேக வளர்ச்சிக்கு மிக முக்கியமாகும். பொருளாதார பலன்கள் ஏழை மக்களுக்கு சென்றடைய இது உதவுகிறது.

நாட்டு வளர்ச்சிக்கு எரிசக்தித் துறை மிக அவசியமாகும்.

நண்பர்களே

சர்வதேச எரிசக்தியின் நிகழ்காலம் மற்றும் வருங்காலம் குறித்து விவாதிக்க நாம் இங்கு ஒன்று கூடியுள்ளோம். சர்வதேச எரிசக்தித் துறையில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள் துல்லியமாக தெரிகின்றன.

எரிசக்தி விநியோகம், எரிசக்தி வளங்கள் மற்றும் எரிசக்தி பயன்பாடு, முறைகள் மாறிக் கொண்டே வருகின்றன. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக கூட அமையலாம்.

எரிசக்திப் பயன்பாடு தற்போது மேற்கிலிருந்து கிழக்கை நோக்கி வருகிறது.

ஷேல் புரட்சிக்குப் பிறகு உலகின் மிகப் பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளராக ஐக்கிய அமெரிக்க நாடுகள் மாறியுள்ளது.

சூரிய எரிசக்தி மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட எரிசக்திக்கு மாற்றாக இவை மாறி வருகின்றன.

சர்வதேச எரிசக்தித் துறையில் இயற்கை எரிவாயு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.

மலிவான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடு என அனைத்தும் ஒன்று சேரும் வகையில் இத்துறை மாறி வருகிறது. இது பல்வேறு நிலைத்த வளர்ச்சி இலக்கை வேகமாக அடைய செய்யும்.

பருவநிலை மாற்றத்தை சந்திக்க அனைத்து நாடுகளும் ஒன்று கூடி வருகின்றன. இந்தியா மற்றும் பிரான்ஸ் ஊக்குவிக்கும் சர்வதேச எரிசக்தி கூட்டணியில் பிற நாடுகளின் பங்கேற்பு இதனைக் குறிக்கிறது.

சிறந்த எரிசக்தி இருப்பு காலத்தில் நாம் தடம் பதிக்கிறோம்.

ஆனால் உலகளவில் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மின்சாரம் இன்னும் கிடைக்கவில்லை. மேலும் பல கோடி மக்களுக்கு தூய்மையான சமையல் எரிவாயு வசதியும் இல்லை.

இது போன்ற எரிசக்தி தொடர்பான பிரச்சனைகளை சந்திப்பதில் இந்தியா முன்னணியாக விளங்குகிறது. நமது வெற்றி, உலகில் உள்ள எரிசக்தி இருப்பு பிரச்சனைகளுக்கு மண்டலத்திற்கு ஏற்ற தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.

அனைத்து மக்களுக்கும் தூய்மையான, மலிவான, திடமான மற்றும் சமமான எரிசக்தி கிடைக்க வேண்டும்.

அனைவருக்கும் எரிசக்தி கிடைக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.

தற்போது உலகளவில் இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. வருங்காலங்களிலும் இந்த வளர்ச்சி தொடரும் என்று முன்னணி முகமைகளான ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.

எதையும் சரியாக கணிக்க முடியாத நிலையில் சர்வதேசப் பொருளாதாரம் உள்ளது. ஆனாலும் உலக பொருளாதாரத்தின் நங்கூரமாக இந்தியா வளர்ந்து வருகிறது.

சமீப காலத்தில் உலகின் 6-வது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளது. சமீபத்திய அறிக்கையின்படி 2030-க்குள் உலக அளவில் 2-வது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2040-ல் எரிசக்தியின் தேவை இருமடங்காக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் எரிசக்தி நிறுவனங்களுக்கு இந்தியா சிறந்த சந்தையாக விளங்குகிறது.

எரிசக்தி திட்டமிடுதல் துறையில் நாங்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையில் எடுத்துள்ளோம். டிசம்பர் 2016-ல் நடைபெற்ற பெட்ரோடெக் மாநாட்டில் இந்தியாவின் 4 தூண்கள் குறித்து நான் கூறியிருந்தேன். அவை எரிசக்தி அணுகுமுறை, எரிசக்தி திறன், நிலையான எரிசக்தி மற்றும் எரிசக்தி பாதுகாப்பாகும்.

நண்பர்களே

அனைவருக்கும் எரிசக்தி கிடைக்க வேண்டும் என்பது எனது நோக்கமட்டுமின்றி இந்தியாவின் முன்னுரிமையுமாகும். இதனை அடிப்படையாக கொண்டு நாங்கள் பல்வேறு நலத்திட்டங்களை உருவாக்கி அமலாக்கம் செய்துள்ளோம். இந்த முயற்சியின் விளைவுகள் தற்போது தெளிவாக தெரிகின்றன.

எங்களின் அனைத்து ஊரகப் பகுதிகளுக்கும் மின்சாரம் சென்றடைந்துள்ளது.

சவுபாக்யா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் 100 சதவீதம் மின்மயமாக்குதலே எங்களின் நோக்கமாகும்.

உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், பரிமாற்றம் மற்றும் விநியோகத்தினால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். உதய் திட்டத்தின் கீழ் இதனை நோக்கி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

எளிதாக மின்சாரம் பெறும் உலகத் தர வரிசையில் 2014-ல் 111-வது இடத்தில் இருந்து இந்தியா 2018-ல் 29-வது நிலைக்கு உயர்ந்துள்ளது.

உஜாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் எல்.இ.டி.விளக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால் ஆண்டுக்கு 17,000 கோடி ரூபாய் அல்லது ஏறத்தாழ 2.5 பில்லியன் டாலர்கள் சேமிக்கப்படுகிறது.

தூய்மையான சமையல் எரிவாயு கிடைப்பதன் மூலம் பல்வேறு முக்கிய நன்மைகள் கிடைத்துள்ளன. முக்கியமாக புகை மாசுவிலிருந்து பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப்படுகின்றனர்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் 3 ஆண்டுகளுக்குள் 6.4 கோடி வீடுகளுக்கு எல்பிஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ‘புளுஃப்ளேம் புரட்சி’ நடைபெற்று வருகிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பு 55 சதவீதமாக இருந்த எல்பிஜி இணைப்பு தற்போது 90 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.

தூய்மையானப் போக்குவரத்திற்கும் வரவேற்பு அதிகரித்து வருகிறது. ஏப்ரல் 2020-க்குள் நாம் நேரடியாக பிஎஸ்4 ரகத்திலிருந்து பிஎஸ்6 ரகத்திற்கு மாறுகிறோம். இது யுரோ-6 தரத்திற்கு சமமானது.

100 சதவீதம் மின்மயமாக்குதல், அதிகரித்து வரும் எல்பிஜி இணைப்புகள் போன்ற சாதனைகள் மக்களின் பங்களிப்பினால் மட்டுமே சாத்தியமாகும். மக்கள் கூட்டு சக்தியின் மேல் நம்பிக்கை வைத்தால்தான் அனைவருக்கும் எரிசக்தி கிடைக்க வேண்டும் என்ற நியதி காப்பாற்றப்படும். இந்த நம்பிக்கையை நிஜமாக மாற்றுவது மட்டுமே அரசின் செயலாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை பல்வேறு முக்கிய மாற்றங்களை கண்டுள்ளது. இத்துறையில் வெளிப்படைத்தன்மையையும், போட்டியையும் கொண்டு வரும் வகையில் நாங்கள் ஹைட்ரோ கார்பன் ஆய்வு மற்றும் உரிமம் கொள்கையை கொண்டு வந்துள்ளோம்.

ஏலம் விடும் முறை தற்போது வருமான பகிர்தல் முறையாக மாற்றப்பட்டுள்ளது. இது அரசின் தலையீடுகளை குறைத்துள்ளது. வெளிப்படையான உரிமம் கொள்கை மற்றும் தேசிய தரவு காப்பகம், இந்தியாவில் ஆய்வுக்கான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

எரிவாயு விலை சீர்திருத்த முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், வளங்களிலிருந்து எண்ணெய் தயாரிக்கும் இடங்களில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே மேம்படுத்தப்பட்ட எண்ணெய் மீட்பு கொள்கையின் நோக்கமாகும்.

நுகர்வோர் துறையைப் பொறுத்த வரையில் அது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது. சந்தை சார்ந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலையைப் பிரதிபலிக்கிறது. உலகளவில் எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. 2030-க்குள் இது மேலும் 200 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

கடந்த ஆண்டு தேசிய சுற்றுச்சூழலுக்கேற்ற எரிசக்தி கொள்கை கொண்டு வரப்பட்டது. 2-வது மற்றும் 3-வது தலைமுறை சுற்றுச்சூழலுக்கேற்ற எரிவாயுப் பொருட்கள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11 மாநிலங்களில் பன்னிரண்டாவது தலைமுறை சுற்றுச்சூழலுக்கேற்ற எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. எத்தனால் கலப்பு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற டீசல் திட்டம் கார்பன் வெளியீட்டை குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கிறது. ஏற்கனவே நமது சிவில் போக்குவரத்துத் துறையில் சுற்றுச்சூழலுக்கேற்ற விமானப் போக்குவரத்து எரிசக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் தனியார் பங்கேற்பையும் அரசு ஊக்குவித்துள்ளது. அன்னிய நேரடி முதலீட்டின் விருப்பமான இலக்காக இந்தியா மாறி வருகிறது. சவுதி அரேம்கோ, அட்நாக், டோட்டல், எக்ஸ்சாம்-மொபில், பிபி மற்றும் ஷெல் போன்ற நிறுவனங்கள் தங்களின் முதலீடுகளை அதிகரிக்க உள்ளன.

எரிவாயு சார்ந்த பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. 16,000 கிலோ மீட்டருக்கு மேற்பட்ட தூரத்திற்கும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கூடுதலாக 11,000 கிலோ மீட்டருக்கான குழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்தியாவில் 3,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இது தேசிய எரிவாயு கட்டமைப்புடன் வடகிழக்கு இந்தியாவை இணைக்கும்.

ஒரு மாதத்திற்குள் நகர எரிவாயு விநியோகத்திற்கான 10-வது ஏலம் நிறைவு பெறும். இது 400-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சென்றடையும். இதன் மூலம் நமது மக்கள் தொகையின் 70 சதவீதத்திற்கு நகர எரிவாயு விநியோகத் திட்டம் கொண்டு செல்லப்படும்.

தொழிற்சாலை 4.0 யுகத்திற்கு தயாராகி வருகிறோம். இது புதிய தொழில்நுட்பம் மற்றும் முறைகளுடன் இயங்கி வரும் நமது தொழிற்சாலைகளை மாற்றியமைக்கும். நமது நிறுவனங்களில் திறன் அதிகரிப்பு, பாதுகாப்பு மற்றும் குறைந்த கட்டணம் ஆகியவற்றை கொண்டு வரும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைக் கையாண்டு வருகின்றன. இது நுகர்வோர் சந்தை, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தித் துறை, சொத்து பராமரிப்பு மற்றும் தொலைத் தூர கண்காணிப்பு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சமீப காலமாக சர்வதேச எரிசக்தி முகமை மற்றும் ஓ.பி.இ.சி. போன்ற அமைப்புகளுடனான நமது உறவை வலுப்படுத்தி வருகிறோம். 2016 முதல் 2018 வரை சர்வதேச எரிசக்திக் கூட்டணியில்  நாம் தலைமை வகித்தோம். இரு நாட்டு முதலீடுகள் மூலம் நமது பாரம்பரிய விற்பனையாளர் நுகர்வோர் முறையை உத்திசார் முறையாக மாற்றியுள்ளோம். நேபாளம், வங்காள தேசம், இலங்கை, பூட்டான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுடன் எரிசக்தி தொடர்பான வர்த்தகத்தை வலுப்படுத்தியதன் மூலம் நாங்கள் அன்னிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கொள்கையையும் கடைபிடித்துள்ளோம்.

எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் உள்ள சர்வதேச தலைமை செயல் அதிகாரிகளுடன் நான் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். உலகத் தலைவர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளுடன் நான் பேசுகையில், எண்ணெய் மற்றும் எரிவாயு என்பது வர்த்தக பொருள் மட்டுமல்ல, அதுவொரு தேவையும் கூட என்று நான் எப்பொழுதும் குறிப்பிட்டுள்ளேன். சாதாரண மனிதனின் சமையல் அறைக்கோ அல்லது விமானத்திற்கோ எரிசக்தி என்பது அவசியமான ஒன்றாகும்.

நீண்டகாலமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், சரிந்தும் வருவதை உலகம் கவனித்து வருகிறது. உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் பயன்பெறும் வகையில் பொறுப்பாக நாம் விலையை நிர்ணயிக்க வேண்டும். எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் நாம் வெளிப்படைத்தன்மையையும் சாதகமான சூழலையும் ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் மனித நேயத்தோடு எரிசக்திக்கான தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

பருவநிலை மாற்றம் என்ற மேலும் ஒரு முக்கியமான பிரச்சனையை சந்திக்க உலகம் ஒன்றாகக் கூட வேண்டும். பாரீசில் நடைபெற்ற சிஓபி 21 மாநாட்டில் நாம் வகுத்த இலக்குகளை நாம் சேர்ந்து சாதிப்போம். தான் அளித்த உறுதிமொழிகளை சந்திக்கும் வகையில் இந்தியா  அர்ப்பணிப்புடன் வேகமாக செயல்பட்டு வருகிறது. எங்களின் இலக்கை அடையும் வழியில் நாங்கள் உள்ளோம்.

எரிசக்தித் துறையின் வருங்காலம் குறித்து யோசிக்கும் சிறந்த தளத்தை பெட்ரோடெக் வழங்கி உள்ளது. இந்தத் துறையில் உள்ள சர்வதேச மாற்றங்கள், கொள்கைகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள், சந்தையின் ஸ்திரத்தன்மை மற்றும் வருங்கால முதலீட்டை பிரதிபலிக்கும் மேடையாக இந்த மாநாடு அமைந்துள்ளது.

இந்த மாநாடு உங்கள் அனைவருக்கும் வெற்றிகரமாக அமையட்டும் என்று நான் வாழ்த்துகிறேன்.

நன்றி



(Release ID: 1563904) Visitor Counter : 1059