உள்துறை அமைச்சகம்
2018 ஆம் ஆண்டு சாதனைகள்: உள்துறை அமைச்சகம்
Posted On:
14 DEC 2018 5:44PM by PIB Chennai
முக்கிய அம்சங்கள்
2018 ஆம் ஆண்டு உள்நாட்டு பாதுகாப்பு நிலவரம் பொதுவாக அமைதியாக இருந்தது. பங்களாதேஷ், மியான்மர், சீனா நாடுகளுடனான எல்லை நிலவரத்தில் மேம்பாடு காணப்பட்டது. மேற்கத்திய எல்லைகளில் பாதுகாப்புப் படையினர், சண்டை நிறுத்த மீறல்களை பதிலடியாக நடவடிக்கை எடுத்தும் ஊடுருவல் நடவடிக்கைகளை முறியடித்தும் சமாளித்தனர். ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்த தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அதே சமயம் இந்த மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் அமைதியாக நடைபெற்றன. வடகிழக்கைப் பொறுத்தவரை பாதுகாப்பு நிலைமை கடந்த 4 ஆண்டுகளில் மிகவும் மேம்பாடு அடைந்தது. இதனையடுத்து மேகாலயா முற்றிலும் மற்றும் அருணாச்சலபிரதேசத்தின் சில பகுதிகளிலும் இந்த ஆண்டு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அசாம் மாநிலத்தின் வரைவு தேசிய குடிமக்கள் பதிவேடு எவ்வித வன்முறை அசம்பாவிதங்களும் இன்றி வெளியிடப்பட்டது. இறுதி தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட உள்ளது. நாட்டின் உள்பகுதிகளைப் பொறுத்தவரை இடதுசாரி தீவிரவாதம் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 2013-ல் 76 ஆக இருந்தது தற்போது 58 ஆக குறைந்துள்ளது.
காவல் படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ஜம்முவில் உள்ள இந்தியா- பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் அதிநவீன வேலி அமைக்கும் இரண்டு முன்னோடித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இமாச்சலப் பிரதேசம், நாகாலாந்து மாநிலங்களில் அவசர கால நடவடிக்கை ஆதரவு அமைப்பின் கீழ் அகில இந்தியாவுக்குமான அவசர தொலைபேசி எண்.112 திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மகளிர் பாதுகாப்புப் பிரச்சனைகளை சமாளிப்பதற்கு புதிய பிரிவு ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகம் உருவாக்கியது. மேலும் மகளிர் பாதுகாப்புப் பிரச்சனைகளின் முக்கியத்துவம் கருதி மகளிர் குழந்தைகளுக்கு எதிரான கணினி குற்றத் தடுப்பு, பாலியல் குற்றவாளிகள் குறித்த தேசிய தரவு தளம் என்ற இரண்டு வலைதளங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
மாநில பேரிடர் உதவி நிதியங்களுக்கு மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர மின்னணு விசா திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தியது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த முதலாவது இந்தியா-சீனா உயர்நிலைக் கூட்டம், மண்டல சபைகளின் கூட்டத்தை முறையாக நடத்துவது, தேசிய காவல் நினைவிடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தது, புதிய காவல் பதக்கங்கள் அறிமுகப்படுத்தியது ஆகியன இந்த ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் இதர சிறப்பு அம்சங்களாகும்.
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்
பாதுகாப்புப் படையினர் தொடர்ச்சியான பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதில் 238 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 86 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். பொது மக்கள் 37 பேரும் உயிரிழந்தனர். ஜம்மு-காஷ்மீர் காவல் துறைக்கு 2 மகளிர் பட்டாலியன்கள் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீர்: உள்ளாட்சித் தேர்தல்
இம் மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் அமைதியாக நடந்து முடிந்துள்ளன. இதனையடுத்து, இம் மாநிலத்தில் நீண்ட காலமாக இல்லாமல் இருந்த உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமைதியான வடகிழக்கு
வடகிழக்குப் பகுதியில் பொதுவாக அமைதி நிலவுவதையடுத்து மேகாலயா மாநிலத்தில் முற்றிலுமாகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் சில பகுதிகளிலும் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டு வரைவு அமைதியான சூழலில் வெளியிடப்பட்டது. இங்கு மேலும் பல கிளர்ச்சியாளர்கள் குழுக்களுடன் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இடதுசாரி தீவிரவாதம்
கடந்த 4 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகள் சுருங்கி வந்துள்ளன. 2013-ல் 76 மாவட்டங்களில் காணப்பட்ட இந்த தீவிரவாதம் தற்போது 58 மாவட்டங்களில் மட்டுமே காணப்படுகிறது.
உள்நாட்டுப் பாதுகாப்பு
நாட்டின் சில பகுதிகளில் சிலைகள் அவமரியாதை செய்யப்படுவதையும், சிதைக்கப்படுவதையும் தவிர்ப்பதற்கு உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு இரண்டு ஆலோசனை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. வலைதளத்தில் வதந்திகள் பரப்பப்படுவதையும், பாலியல் ரீதியாக அது தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுக்க சமூக ஊடகப் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை செயலாளர் ஆய்வு நடத்தினார்.
எல்லை நிர்வாகம்
ஜம்முவில் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் இரண்டு அதிநவீன எல்லைக்கான முன்னோடித் திட்டங்களை உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். விரிவான ஒருங்கிணைந்த எல்லை மேலாண்மை அமைப்பின் கீழ் உருவாக்கப்படும் இந்த வேலிகள் நாட்டிலேயே முதலாவதாகும்.
காவல் படைகளை நவீனமயமாக்கல்
காவல் படைகளை நவீனமாக்குவது மத்திய அரசின் உயர்ந்த முன்னுரிமையாக தொடர்ந்து இருந்து வருகிறது. குடிமக்களுக்கென தேசிய குற்ற ஆவண அமைப்பு மொபைல் தொலைபேசி செயலி ஒன்றை தொடங்கி உள்ளது. இதில் காவல் துறை சம்பந்தப்பட்ட 9 சேவைகள் வழங்கப்படுகின்றன.
மகளிர் பாதுகாப்பு
மகளிர் பாதுகாப்பு தொடர்பான அரசின் முயற்சிகளை நெறிப்படுத்தும் வகையில் உள்துறை அமைச்சகம் புதிய பிரிவு ஒன்றை 2018 மே மாதம் ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைப்புடன் மகளிர் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இந்தப் பிரிவு கவனித்து வருகிறது. பணியிடங்களில் பாலியல் தொந்தரவு தடுப்பதற்கான சட்ட, நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து உள்துறை அமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
மின்னணு விசா
இந்தியாவில் விசா வழங்கும் நடைமுறையை தாராளமாக்க உள்துறை அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 166 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் நாட்டின் 26 விமான நிலையங்கள், 5 கப்பல் துறைமுகங்கள் ஆகியவற்றில் மின்னணு விசா வசதியை பயன்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலீடு பாதுகாப்பு அனுமதி
இந்தியாவில் நடத்தப்படும் மாநாடுகள், பயிலரங்குகள் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அனுமதி வழங்குவதை விரைவுபடுத்தும் ஆன்-லைன் திட்டம் 2018 மே 2-ந் தேதி உள்துறை செயலாளர் திரு. ராஜீவ் கவ்பா-வால் திறந்து வைக்கப்பட்டது.
சர்வதேச ஒத்துழைப்பு
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான முதலாவது இந்தியா-சீனா உயர்நிலைக் கூட்டம் புதுதில்லியில் 2018 அக்டோபர் 22-ந் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பங்களாதேசுடன் உள்துறை அமைச்சர்கள் நிலைக் கூட்டம், இந்தியா-மியான்மர் இடையே 22-வது தேசிய நிலைக் கூட்டம் ஆகியவை நடைபெற்றன.
மத்திய-மாநில உறவுகள்
மத்திய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் மண்டல சபை கூட்டங்கள் முறையாக நடத்தப்படுகின்றன. இதன் பயனாக கடந்த 4 ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டு 400-க்கும் மேற்பட்டவற்றுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மை
மாநில பேரிடர் மேலாண்மை நிதியங்களுக்கு மத்திய அரசின் பங்களிப்பு 75-லிருந்து 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் நிவாரணப் படையின் 4 புதிய பட்டாலியன்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசம் கிருஷ்ணா மாவட்டத்தில் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தெற்கத்திய வளாகத்திற்கு குடியரசுத் துணைத் தலைவர் அடிக்கல் நாட்டினார்.
பத்ம விருதுகள்
2019 பத்ம விருதுகளுக்கு சாதனை எண்ணிக்கையிலான 49,992 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது 2010-ஜ காட்டிலும் 32 மடங்கு கூடுதலாகும். பத்ம விருதுகளை மத்திய அரசு மக்கள் விருதுகளாக மாற்றியுள்ளது.
புதிய காவல் விருதுகள்
மத்திய ஆயுதக் காவல் படையினரின் தீர செயல்களை அங்கீகரிக்கும் வகையில் 28.06.18 அன்று அமைச்சகம் புதிதாக 5 காவல் பதக்கங்களை அறிவித்தது.
தேசிய காவல் நினைவிடம் அர்ப்பணிப்பு
புதுதில்லி சாணக்கியபுரியில் உள்ள சாந்திபாத் சாலையில் 6.12 ஏக்கர் பரப்பில் தேசிய காவல் நினைவிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
மாணவர் காவல் படைத் திட்டம்
மாணவர் காவல் படைத் திட்டம் என்ற புதிய திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், ஹரியானா மாநிலம் குருகிராமில் 2018 ஜூலை 21-ந் தேதி தொடங்கி வைத்தார்.
மத்திய ஆயுத காவல் படை நலத்திட்டங்கள்
மத்திய தொழிலியல் பாதுகாப்புப் படையில் உதவி தளபதி பதவி தொடங்கி கூடுதல் தலைமை இயக்குனர் பதவி வரையான 25 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதர திட்டங்கள்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நினைவாக சிறைக் கைதிகளுக்கு சிறப்பு தண்டனை கால குறைப்பு அனுமதிக்கப்பட்டுள்ளது. சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் சீக்கியப் பெண்கள் ஹெல்மெட் அணிவதிலிருந்து விலக்களிக்கும் அறிவிப்பை வெளியிடுமாறு சண்டிகர் நிர்வாகத்திற்கு உள்துறை அமைச்சரகம் உத்தரவிட்டது.
மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.
•••••
(Release ID: 1561960)
Visitor Counter : 366