கலாசாரத்துறை அமைச்சகம்
பிரயாக்ராஜில், கும்பமேளா-2019-க்கான ஏற்பாடுகள் தயார்
இடுகை இடப்பட்ட நாள்:
13 JAN 2019 1:44PM by PIB Chennai
உலகிலேயே மனித குலம் அதிகளவில் ஒரே இடத்தில் சங்கமிக்கும் கும்பமேளா-2019, பிரயாக்ராஜில் 2019 ஜனவரி 15 செவ்வாயன்று அதிகாலை தொடங்கவுள்ளது. அப்போது, முதலாவதாக சாதுக்கள் புனித நீராடுவர். இதுவே கும்பமேளாவின் தொடக்கமாகும். இதையொட்டி, அமைதியாக நீராடுவதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளை கும்பமேளா நிர்வாகம் மேற்கொண்டிருப்பதுடன், சாதுக்கள் தங்களது முகாம்களிலிருந்து புனித நீராடுவதற்காக பேரணியாகச் செல்லும் பாதையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கும்பமேளா நடைபெறும் பகுதியில் நாளை (14.01.2019) முதல் வாகனங்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரயாக்ராஜ் கும்பமேளா – 2019 நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பிரசார் பாரதியின் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி ஆகியவை சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன. அகில இந்திய வானொலி, கும்பவாணி என்ற பெயரில் ஒரு கிலோவாட் சக்தி கொண்ட பண்பலை ஒலிபரப்பு கருவியையும் அங்கு நிறுவியுள்ளது. அலகாபாத் அகில இந்திய வானொலி நிலையம் இந்த மையத்திலிருந்து நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும். இந்த பண்பலை அலைவரிசை நாளை காலை மணி 5.55 முதல் ஒலிபரப்பு சேவையை துவங்கி, இரவு மணி 10.05 வரை தொடரும். இந்த ஒலிபரப்பு 2019 மார்ச் 4 வரை நடைபெறும். இந்த சிறப்பு ஒலிபரப்பு 35 கிலோமீட்டர் சுற்றளவுக்கு கேட்கும். கும்பவாணி பண்பலை அலைவரிசை மூலம் கும்பமேளா பற்றிய நிகழ்ச்சிகளை யூ-டியூப் - பிலும் நேரடியாக ஒளிபரப்ப அகில இந்திய வானொலி ஏற்பாடு செய்துள்ளது.
மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15, மவுனி அமாவாசை தினமான பிப்ரவரி 4 மற்றும் வசந்த பஞ்சமி தினமான பிப்ரவரி 10 அன்றும் சாதுக்களின் புனித நீராடல் நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி நேரடியாக ஒலிபரப்ப உள்ளன. பவுஷ் பூர்ணிமா, மாகி பூர்ணிமா மற்றும் மகா சிவராத்திரி தினங்களில் நடைபெறவுள்ள புனித நீராடல் நிகழ்ச்சிகளும் டி.டி.உ.பி. மற்றும் டி.டி. இந்தியா அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. ஜனவரி 15 முதல் கும்பமேளா பற்றிய சிறப்பு நிகழ்ச்சிகளை தினந்தோறும் 3 மணிநேரம் ஒளிபரப்பவும் தூர்தர்ஷன் ஏற்பாடு செய்துள்ளது.
கும்பமேளா: வரலாற்று முக்கியத்துவம்
பிரயாக்ராஜில், கங்கை-யமுனை-சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில், மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15 அன்று நடைபெறவுள்ள கும்பமேளாவின் முதலாவது புனித நீராடல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, ஏராளமான சாதுக்கள், சாமியார்கள், சாதாரண பக்தர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். சாதுக்களின் முதலாவது புனித நீராடல் நிகழ்ச்சி, யாத்ரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்ப்பதாக அமையும்.
இந்துக்களின் நாட்காட்டிப்படி, மாக் மாதத்தில் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெறும். சாதாரண கும்பமேளா ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறையும், மகா கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறும். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற மகா கும்பமேளாவிற்காக 700 ஹெக்டேர் பரப்பளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்காக 3,200 ஹெக்டேர் பரப்பளவில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கும்பமேளாவை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு சாலை போக்குவரத்துக் கழகம், 6000 சிறப்பு பேருந்துகளை இயக்குவதுடன், உத்தரப்பிரதேசம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. இவைதவிர, நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு விமானங்களும் இயக்கப்படுகிறது. புதிதாக இயக்கப்படும் விமானங்களை கையாள ஏதுவாக, இங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையமும் விரைவில் திறக்கப்பட உள்ளது. இதுதவிர, கும்பமேளாவிற்கு வரும் யாத்ரிகர்கள் குறைந்த செலவில் தங்குவதற்காக குடில்களும் அமைக்கப்பட்டுள்ளன.
******
(வெளியீட்டு அடையாள எண்: 1559782)
வருகையாளர் எண்ணிக்கை : 275