வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
2018 சாதனைகள்: வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை
Posted On:
31 DEC 2018 2:25PM by PIB Chennai
- சென்னை விரிவாக்கம், நாக்பூர், அகமதாபாத், குருகிராம், லக்னோ, புனே, தில்லி மெட்ரோ விரிவாக்கங்கள், நொய்டா- கிரேட்டர் நொய்டா, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் மொத்தம் 248 கி.மீ. தூரத்துக்கு 13 புதிய மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு 2014 மே முதல் ரூ. 68,021 கோடி ஒப்புதல்.
- மேலும் 650 கி.மீ. தூரத்திற்கான மெட்ரோ ரயில் திட்டங்கள் அமலாக்கம், பல்வேறு கட்ட நிலையில் உள்ளது. 750 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைப்புகள், 373 கி.மீ. தூரத்துக்கு மண்டல விரைவு போக்குவரத்து அமைப்புகள் ஆகியவை திட்டமிடப்படுகின்றன.
- புதிய சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்ளவும், அறிவுத்திறன், அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் I-மெட்ரோ-A எனப்படும் கருத்துத் தளம் 2018ம் ஆண்டு மார்ச்சில் தொடக்கம்.
- “உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது” என்ற அரசின் கோட்பாடு மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்து முறையை உள்ளூரிலேயே வடிவமைப்பது ஆகியவற்றை மேம்படுத்த சில தரக் குறிப்புகள் வெளியிடப்பட்டது.
- குடிமக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கச் செய்யும் வகையில் தில்லி பெருந்திட்டத்தில் (2021) திருத்தம் கொண்டுவருதல், சட்டவிரோதக் கட்டடங்கள், ஆக்கிரமிப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தில்லி மேம்பாட்டு ஆணையக (DDA) துணைத் தலைவர் தலைமையில் சிறப்புப் படையை உருவாக்குதல்
- வீட்டுவசதித் திட்டத்துக்காக இடங்களைக் கண்டறியும் கொள்கை மற்றும் ஒழுங்குமுறைகள் குறித்த அறிவிக்கையை வெளியிடுதல்
- தில்லி, கத்புட்லி காலனியில் குடியிருப்பு இருந்த அதே இடத்தில் அரசு தனியார் முதலீட்டில் மேம்பாட்டுத் திட்டம் 2019ம் ஆண்டு நிறைவு
- நகர்ப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கான தேசிய திட்டமான தீனதயாள் உபாத்யாயா அந்த்யோத்யா யோஜனா திட்டத்தின் பயனாளிகள் மானிய உதவி பெறுவதற்காக மையப்படுத்தப்பட்ட இணையவாசல் தொடக்கம்
- 2014ம் ஆண்டு மே முதல் மொத்தம் 13 லட்சம் நகர்ப்புற ஏழைகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பு, அவர்களில் 4.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, 2018ம் ஆண்டு மட்டும் மொத்தம் 1.9 லட்சம் பயனாளிகள்
- நாடு முழுதும் 34 லட்சம் மகளிரைக் கொண்ட மொத்தம் 3,45,450 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி உதவி
- அடல் புத்துயிர் மற்றும் நகர்ப்புற மாற்றம் (Atal Mission for Rejuvenation and Urban Transformation) திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ. 54,816 கோடி மதிப்பீட்டில் 4,097 திட்டங்கள் தொடங்கப்பட்டு, அவற்றில் ரூ. 2,388 கோடி மதிப்பீட்டில் 1,035 திட்டங்கள் நிறைவேற்றம்
- இணைய வழியாக கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கும் முறை 10 மாநிலங்களில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் வரும் 1,453 நகரங்களில் அமலாக்கப்பட்டுள்ளது
- நகர்ப்புற கட்டமைப்புகளின் மேம்பாட்டுக்காக நகராட்சி கடன் பத்திரங்கள் மூலம் 2018ம் ஆண்டு ரூ. 2,700 கோடிக்கு மேல் திரட்டப்பட்டது.
- இந்திய நகரங்களைப் புதுப்பித்து, புத்துயிர் ஊட்டும் மறுமலர்ச்சித் திட்டம் மொத்தம் ரூ. 6,85,758 கோடியில் நிறைவேற்றப்படுகிறது
“நாட்டில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் “தூய்மை ஆய்வு, 2019” (Swachh Survekshan 2019) என்ற திட்டம் 2019, ஜனவரி 4ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது” என்று மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு. ஹர்தீப் எஸ். பூரி தெரிவித்தார்.
இது தொடர்பாக தூய்மை ஆய்வு கணக்கெடுப்பு (Swachh Survekshan survey) 2016ம் ஆண்டு 73 நகரங்களில் நடத்தப்பட்டது. 2017ம் ஆண்டு 434 நகரங்களில் நடத்தப்பட்டது. அதில், மத்தியப் பிரதேசம் இந்தூர் நகரம் முதலிடம் பெற்றது. மூன்றாம் கட்ட ஆய்வு 2018ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரையில் 4203 நகரங்களில் நடத்தப்பட்டது. அதில் இந்தூர், போபால், சண்டீகர் ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றன” என்றார் அவர்.
அத்துடன், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (Pradhan Mantri Awas Yojana) கீழ் 68.7 வீடுகள் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அவற்றில், 13.50 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. 37 லட்சம் வீடுகள் பணிகள் பூர்த்தியாகி வருகின்றன. 2020ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகள் கட்டித் தருவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் “2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடுகள்” என்ற நிலை எட்டப்படும்.
தூய்மை இந்தியா இயக்கம் - நகர்ப்புறம்
2018ம் ஆண்டு ஏப்ரல் முதல், மேலும் 1612 நகரங்களில் திறந்தவெளி கழிப்பிட முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 4124 நகரங்களில் திறந்த வெளிக் கழிப்பிடங்களே இல்லை. அதில், 62 லட்சம் வீடுகளிலும் 5 லட்சம் பொது இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்படுகின்றன.
வீடுகளை விரைவாகவும், அதிக அளவிலும் கட்டித் தருவதற்காக வீட்டுவசதி அமைச்சகம் 24 வகையான தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டுள்ளது.
இவற்றுடன் பிரதம மந்திரி வீட்டுவசதி (நகர்ப்புறம்) திட்டத்தை (PMAY -U) விரைவாக முடிக்க உதவும் வகையில் கூடுதல் நிதி ஆதாரத்துக்காக ரூ. 60 ஆயிரம் கோடியில் தேசிய நகர்ப்புற வீட்டுவசதி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மக்கள் எளிதாக வீடு பெறுவதற்காக, கட்டுப்படியாகும் வீட்டுவசதி நிதியம் (Affordable Housing Fund - AHF) தேசிய வீட்டுவசதி வங்கியில் உருவாக்கப்பட்டுள்ளது.
பொலிவுறு நகரம் இயக்கம்
பொலிவுறு நகர இயக்கத்தின் (Smart City Mission) கீழ், அகில இந்திய போட்டி அளவில் நான்கு சுற்றுகளில் 100 பொலிவுறு நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதையடுத்து, அந்நகரங்களில் மொத்தம் ரூ. 2 லட்சம் கோடி மதிப்பில் 5,151 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மொத்தம் ரூ. 10,116 கோடி மதிப்பில் 534 திட்டங்கள் நிறைவடைந்துவிட்டன. மேலும், ரூ. 43, 493 கோடி மதிப்பில் 1,177 திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. ரூ. 38,207 கோடியில் 677 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளன.
ரியல் எஸ்டேட் (ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016
ரியல் எஸ்டேட் (ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016 (Real Estate (Regulation and Development) Act, 2016 - RERA) நாடாளுமன்றத்தில் 2016 மார்ச் மாதம் நிறைவேறியது. வீடு, நிலம் வாங்குவோரின் நலன் கருதி ரியல் எஸ்டேட் தொழில் பயனுள்ள வகையில் அமைவதற்கும் மேம்பாடு அடையும் விதத்திலும் இச்சட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நகர்ப்புறப் போக்குவரத்து
தற்போது 10 நகரங்களில் மொத்தம் 536 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து இயங்கி வருகிறது. தில்லி & தேசிய தலைநகர் வலையம் (NCR), பெங்களூரு, ஹைதராபாத், கோல்கத்தா, சென்னை, ஜெய்ப்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, குருகிராம் ஆகிய நகரங்களில் உள்ளது.
இது தவிர, தில்லி, தேசிய தலைநகர் வலையம் (NCR), பெங்களூரு, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை, ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, புனே, நொய்டா, போபால், இந்தூர் ஆகிய நகரங்களில் சுமார் 650 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் போக்குவரத்து திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தீனதயாள் அந்த்யோத்யா யோஜனா – தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (DAY-NULM)
2018ம் ஆண்டு 1,90,000 பயனாளிகளுக்கு மேற்பட்டோர் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்றுள்ளனர். அவர்களில் 94,753 பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். சிறு தொழில்முனைவோராவதற்கு 58,879 பேருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. வங்கியுடன் இணைந்த திட்டத்தின் மூலம் 63,720 சுய உதவிக் குழுக்களுக்குக் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இணையதளம் : http://pib.nic.in/
----
(Release ID: 1558616)
Visitor Counter : 305