வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
2018 சாதனைகள் : யூனியன் பிரதேசங்கள், ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம், டிடி மற்றும் மத்திய பொதுப்பணித் துறை
Posted On:
28 DEC 2018 11:39AM by PIB Chennai
இந்திய நகரங்களை புத்துயிரூட்டுதல் மற்றும் மாற்றியமைக்கும் வகையில், உலக அளவில் நகர்ப்புற புத்துயிரூட்டலுக்காக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைக் கொண்டுவந்த அமைச்சகங்களில் ஒன்றாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் திகழ்ந்தது. குடிமக்களுக்கு ஏற்ற நகர்ப்புற பகுதிகளை உறுதிப்படுத்துவதற்காக ரூ.6,85,758 கோடிக்கும் அதிகமான தொகையை ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. புதிய மெட்ரோ ரயில் பாதைகள் மூலம் நகர்ப்புற போக்குவரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட நகர்ப்புற புத்துயிரூட்டலுக்கான திட்டங்களையும், முக்கியத்துவம் வாய்ந்த நகர்ப்புற சீர்திருத்தங்களையும் செயல்படுத்தி, மாற்றங்களைக் கொண்டுவந்தது. வீடு வாங்குவோர் பயனடையும் வகையில், நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டத்தை (RERA) அமல்படுத்தி, ரியல் எஸ்டேட் துறையிலும் சீர்திருத்த நடவடிக்கைகளை அமைச்சகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
RERA (ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016,
மார்ச் 2016-ல் RERA (ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016, நிறைவேற்றப்பட்டது. ரியல் எஸ்டேட் துறையை சிறப்பான முறையில் ஒழுங்குபடுத்துவது மற்றும் ஊக்குவிப்பதை உறுதிப்படுத்துவதற்காகவும், வீடு வாங்குவோரின் நலனை பாதுகாக்கவும் மாற்றமிகு சட்டம் கொண்டுவரப்பட்டது.
RERA சட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட விதிகளை 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் அறிவிக்கையாக வெளியிட்டன.
ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தை 28 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (நிலையானது – 15, இடைக்காலமானது – 13) அமைத்தன. ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை 21 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் (நிலையானது – 9, இடைக்காலமானது – 12) அமைத்தன.
ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம் 2016 குறித்து நாட்டின் மேற்கு (புனே), தெற்கு (சென்னை), வடக்கு (தில்லி), கிழக்கு (ராஞ்சி) பிராந்தியங்களில் பிராந்திய கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. இதில், வீடு வாங்குவோர், கட்டுமானதாரர்கள், நிதி நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் மற்றும் ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
நகர்ப்புற போக்குவரத்து
மெட்ரோ ரயில் பாதைகள் அமைத்தல்/செயல்படுத்துதல்
தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதி, பெங்களூரு, சென்னை, கொச்சி, லக்னோ, மும்பை, ஜெய்ப்பூர், ஹைதராபாத், குருகிராம் ஆகிய பகுதிகளில், கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் முதல், இதுவரை 287 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2018-ம் ஆண்டில் (ஜனவரி 2018 முதல் இதுநாள் வரை), தில்லி மற்றும் தேசிய தலைநகரப்பகுதி, ஹைதராபாத், சென்னை ஆகிய பகுதிகளில் 110 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்
மே 2014 முதல், நாக்பூர், அகமதாபாத், குருகிராம், லக்னோ, சென்னை விரிவாக்கம், புனே, தில்லி மெட்ரோ விரிவாக்கம், நொய்டா – நொய்டா பெருநகரம், போபால், இந்தூர் ஆகிய பகுதிகளில் ரூ.68,021 கோடி செலவில் 248 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிதாக 13 புதிய மெட்ரோ திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மெட்ரோ ரயில் தொடக்கம்
தில்லி, ஹைதராபாத், கொச்சி ஆகிய பகுதிகளில் மே 2014 முதல், பல்வேறு புதிய மெட்ரோ ரயில் பாதைகள் தொடங்கிவைக்கப்பட்டன. தில்லி மற்றும் தேசிய தலைநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, கொச்சி, ஜெய்ப்பூர், மும்பை (மாநில அரசின் மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ளும் திட்டங்கள் உள்பட), ஹைதராபாத், நாக்பூர், அகமதாபாத், லக்னோ, புனே, நொய்டா, போபால், இந்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 650 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் திட்டங்கள், செயல்படுத்துவதற்கான பல்வேறு கட்டங்களில் உள்ளன. பல்வேறு நகரங்களிலும் சுமார் 750 கிலோமீட்டர் தொலைவுக்கான மெட்ரோ ரயில் அமைப்பு மற்றும் 373 கிலோமீட்டர் தொலைவுக்கான விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பு (RRTS) ஏற்படுத்துவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது நிதி மேலாண்மை அமைப்பின் (PFMS) பணி முன்னேற்றங்களை டிஜிட்டல்முறையில் (e-MB) கண்காணித்தல்
கடந்த ஆண்டில் மாபெரும் டிஜிட்டல் மாற்றத்தை, அரசின் மிகப்பெரும் கட்டுமானத் துறையான, மத்திய பொதுப்பணித் துறை மேற்கொண்டது. இதன்மூலம், ஆண்டுதோறும் சுமார் ரூ.20,000 கோடி தொகையை மின்னணு முறையில் செலுத்த முடியும். குடிமக்களுக்கான அமைச்சகத்தில், அடிமட்ட அளவில் டிஜிட்டல்மயமாக்கிய முதல் அமைப்பு என்ற பெருமையை மத்திய பொதுப்பணித் துறை பெற்றது. PFMS-ன் பணி மேம்பாடுகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்கும் வகையில், 2018-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் நடவடிக்கை மூலம், நாட்டில் உள்ள மத்திய பொதுப் பணித் துறையின் எந்தப் பிரிவும் மேற்கொண்டுவரும் பணிகள்/திட்டங்களின் மேம்பாடுகளை துல்லியமாக ஆன்லைன் மூலம் கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டது.
அமைச்சகத்தில் டிஜிட்டல் மற்றும் ரொக்கமற்ற பரிமாற்றத்தை அதிகப்படுத்தவும், பணம் செலுத்துவதை 100% டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளவும், ஏப்ரல் 13, 2018 முதலே முன்பணம் செலுத்துவதற்காக ஸ்மார்ட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய பொதுப்பணித் துறையின் விடுமுறைகால விடுதிகள், சுற்றுலா அதிகாரிகள் விடுதிகள் மற்றும் விருந்தினர் இல்லங்கள், நில மற்றும் மேம்பாட்டு அதிகாரிகளின் அலுவலகங்கள் மற்றும் பதிப்பக அலுவலகங்கள் போன்றவற்றில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான 69 POS இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு http://www.pib.nic.in
*******
(Release ID: 1558341)
Visitor Counter : 301