வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

2018 ஆண்டு இறுதி அறிக்கை – வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

Posted On: 26 DEC 2018 11:30AM by PIB Chennai

பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் விரிவாக்க திட்டம் – எச்.ஆர்.ஐ.டி.ஏ.ஒய்.

உலகிலேயே மிகவும் பெரிய விரிவான திட்டம் ஒன்றினை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் தொடங்கி உள்ளது. இந்திய நகரங்களை மாற்றியமைத்து நகர்ப்புற மறுமலர்ச்சி மற்றும் புத்துயிரூட்டலுக்கான இந்தத் திட்டத்தில் மக்களுக்கு உகந்த நகர்ப்புற பகுதிகளை உருவாக்குவதற்கு ரூ.6,85,758 கோடி தொகையை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அமைச்சகம் தொடங்கியுள்ளது. மிக முக்கிய நகர்ப்புற சீர்திருத்தங்களை அமல்படுத்துவதன் மூலமும் 12 நகரங்களில் பாரம்பரிய நகர மேம்பாடு மற்றும் விரிவாக்கத் திட்டம் – எச்.ஆர்.ஐ.டி.ஏ.ஒய். அமலாக்கத்திற்கு ஒப்புதல் அளித்தது உள்ளிட்ட பல்வேறு மறுமலர்ச்சித் திட்டங்கள் மூலமும் இதனை சாதிக்க அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

எச்.ஆர்.ஐ.டி.ஏ.ஒய். திட்டம் 2015 ஜனவரி 21-ந் தேதி தொடங்கப்பட்டு வேளாங்கண்ணி, காஞ்சிபுரம், வாரங்கல், ஆஜ்மீர், அமராவதி, அமிர்தசரஸ், பாடாமி, துவாரகா, கயா, மதுரா, பூரி, வாரணாசி ஆகிய 12 நகரங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

2018-ல் ரூ.140.14 கோடி மதிப்பிலான 20 திட்டங்கள் ஆஜ்மீர், அமராவதி, அமிர்தசரஸ். பாடாமி, துவாரகா, பூரி, வாரணாசி ஆகிய நகரங்களில் நிறைவடைந்துள்ளது. இவற்றில் சில முக்கியமான திட்டங்கள் வருமாறு:

  • வாரணாசி, ஆஜ்மீர், அமிர்தசரஸ், அமராவதி ஆகிய நகரங்களில் பல்வேறு பாரம்பரிய இடங்களை இணைக்கும் 59 சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்.
  • அமிர்தசரஸ் (கோல்பாங்க்) ஆஜ்மீர் (சுபாஷ் உதியான்), பூரி (பங்கி முகானா) ஆகிய இடங்களில் பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் புதுப்பிப்புக்கான 3 திட்டங்கள்.
  • புஷ்கர், ஆஜ்மீர். வாரணாசி ஆகிய இடங்களில் பாரம்பரிய நடைப்பயண பகுதி மேம்பாட்டுத் திட்டங்கள் மூன்று.
  • அமிர்தசரஸ் நகரில் ரம்பாக் கேட், வாரணாசியில் டவுன் ஹால் ஆகிய இடங்களில் மறுசீரமைத்து மறு பயன்பாட்டுக்கான 2 திட்டங்கள்.
  • அண்ணாசாகர் ஏரிப்பகுதி மேம்பாட்டுத் திட்டம்.

இந்த திட்டங்கள் அமலாக்கத்தை அடுத்து கீழ்கண்ட பணிகள் நிறைவடைந்து இதன் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.

  • அமிர்தசரசில் ரம்பாக் பள்ளி மறுசீரமைப்பு
  • வாரணாசி டவுன் ஹாலை பாரம்பரிய மையமாக பாதுகாத்து மேம்படுத்துதல்.
  • ஆஜ்மீரில் சுபாஷ் உதியான் மேம்பாட்டுத் திட்டம்
  • பூரி கடற்கரையில் அழகு பூங்காவை பங்கிமுகான் என்ற இடத்தில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கொண்டு மேம்படுத்தும் திட்டம்.
  • பல்வேறு பாரம்பரிய இடங்களில் பொருள் சார்ந்த வகையில் சாலை மேம்பாட்டுப் பணிகள்.

 

புத்துயிரூட்டல் மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அதில் இயக்கம் - அம்ருத்:

நகர்ப்புற சீர்திருத்தம் புத்துயிரூட்டல் நடவடிக்கைகளுக்கான மற்றொரு திட்டம் அமருத் திட்டமாகும். இதற்கென ரூ.77,640 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாநில ஆண்டு மொத்த திட்ட மதிப்பீட்டில் ரூ.54,816 கோடி மதிப்பிலான 4,097 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் நிறைவடைந்துள்ள ரூ.2,388 கோடி மதிப்பிலான 1,035 திட்டங்களும் அடங்கும். ரூ.14,770 கோடி மதிப்பிலான 755 திட்டங்களுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.9,183 கோடி மதிப்பிலான 458 திட்டங்களுக்கு டி.பி.ஆர். ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த அம்ருத் இயக்கத்தின் அமலாக்க முன்னேற்றம் பிரிவுவாரியாக கீழே தரப்பட்டுள்ளது:

  1. குடிநீர் வழங்கும் துறையில் ரூ.29,205 கோடி மதிப்பிலான 965 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  2. கழிவுநீர் மற்றும் மக்கிய கழிவு மேலாண்மை துறையில் ரூ.21,508 கோடி மதிப்பிலான 491 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  3. வடிகால் துறையில் ரூ.2,101 கோடி மதிப்பிலான 516 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  4. நகர்ப்புற போக்குவரத்துத் துறையில் ரூ.709 கோடி மதிப்பிலான 244 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  5. பசுமை வெளி மற்றும் பூங்கா துறையில் ரூ.1,293 கோடி மதிப்பிலான 1,881 திட்டங்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அம்ருத் இயக்கத் திட்டத்தின் கீழ் 54 இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு 4 ஆண்டுகளில் இவற்றை அடையும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஊக்குவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2018-19-ல் ரூ.600 கோடி மதிப்பிலான ஊக்குவிப்புகள் அறிவிக்கப்பட்டன. இதில் நகராட்சி பத்திரங்களை வழங்கும் அம்ருத் நகரங்களுக்கு ஊக்குவிப்பதாக ரூ.260 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சீர்திருத்தங்களுக்கென 2018-19-ல் 21 மாநிலங்களுக்கு ரூ.340 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது. நகராட்சிப் பத்திரங்கள் வெளியிட்ட பூனே, ஐதராபாத், இந்தூர். போபால், அமராவதி நகரங்களுக்கு ரூ.119 கோடி ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

 

தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) –எஸ்.பி.எம். (யு) 2018:

முக்கியமான நகர்ப்புற சீர்திருத்தங்களை அமல்படுத்தி நகர்ப்புற மாற்றத்தை கொண்டு வருவதில் தூய்மை இந்தியா இயக்கம் – எஸ்.பி.எம். முக்கிய இடம் பெறுகிறது.

2018 ஏப்ரலுக்கு பிறகு கூடுதலாக 1,612 நகரங்கள் திறந்தவெளி  கழிப்பிடம் இல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, இத்தகைய நிலையை அடையும் நகரங்களின் மொத்த எண்ணிக்கை 4,124 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 62 லட்சம் தனிநபர் வீட்டுக் கழிவறைகள் மற்றும் 5 லட்சம் சமுதாய மற்றும் பொதுக் கழிவறைகள் அமைக்கும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. மேலும் தமிழ்நாடு. புதுச்சேரி, தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் நகர்ப்புற பகுதிகள் திறந்தவெளி கழிப்பிட நடைமுறை அற்றவைகளாக (ஓ.டி.எப்.) அறிவிக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா இயக்கம் (நகர்ப்புறம்) 2014 அக்டோபர் 2-ந் தேதி தொடங்கப்பட்டது. 5 ஆண்டு காலத்திற்கான இத்திட்டம் 100 சதவீத திறந்தவெளி கழிப்பிடமற்ற நிலை – ஓ.டி.எப்.-யை அடைவதையும், நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 100 சதவீத திடக்கழிவு மேலாண்மை அமைப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டது.

பொது கழிவறைகள் இருக்கும் இடங்களை மக்கள் எளிதாக அறிந்து கொள்வதற்கும் அவை பற்றிய கருத்துக்களை தெரிவிப்பதற்கும் கூகுல் மேப்ஸ் மூலம் நாட்டில் உள்ள அனைத்து பொதுக் கழிவறைகளையும் வரைபடத்தில் கொண்டு வரும் பெரிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் கீழ் இதுவரை 835 நகரங்கள் தங்களது 33,000-க்கும் மேற்பட்ட பொதுக் கழிவறைகளை கூகுல் மேப்ஸ் வரைபடத்தில் கொண்டு வந்துள்ளன.

மேலும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கீழ்கண்ட திட்டங்களை தொடங்கி உள்ளது.

  • ஓ.டி.எப்.+ மற்றும் ஓ.டி.எப்.++ திட்டங்களின் கீழ் முழுமையான சுகாதார நிலை அடைதல். ஓ.டி.எப்.+ல் பொதுக் கழிவறைகள் கட்டி பராமரித்தலும், ஓ.டி.எப்.++ல் கழிவறைகளிலிருந்து அகற்றப்படும் திடக்கழிவுகள் மேலாண்மையும் அடங்கும்.
  • நட்சத்திர அந்தஸ்து திட்டம் அல்லது குப்பையில்லா நகரத் திட்டம்: இந்த திட்டம் திடக்கழிவு மேலாண்மை சார்பாக நகராட்சி அமைப்புகள் அமல்படுத்தும் திட்டங்களின் குப்பைகளை இனம் பிரித்தல், வீடுகளில் சென்று குப்பைகளை சேகரித்தல் உள்ளிட்ட 12 அம்சங்கள் சார்பாக மதிப்பீடு செய்து குப்பையில்லா நிலையை அடைவதற்கு ஊக்கமளிக்கிறது.
  • ஸ்வச் மன்ச் வலைத்தளம்: இது ஆன்லைன் மூலமான அறிவு மேலாண்மை மற்றும் பயன்படுத்துவோர் ஈடுபாட்டை ஊக்குவிக்கும் வலைத்தளமாகும். இது தூய்மை இந்தியா இயக்கம் மக்கள் இயக்கமாக மாற்றப்படுவதை நோக்கமாக கொண்டது.

தூய்மை கணக்கெடுப்பு

நகரப் பகுதிகளின் தூய்மை தரங்கள் மேம்படுவதை ஊக்குவிக்க ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துவது இந்தக் கணக்கெடுப்பின் நோக்கமாகும். 2016-ல் 73 நகரங்களில் இந்த தூய்மை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து 2017-ல் நடைபெற்ற தூய்மை கணக்கெடுப்பில் 434 நகரங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டன. இதன்படி இந்தூர் முதல் நிலையில் வந்தது. தூய்மை கணக்கெடுப்பின் 3-வது சுற்று 2018 ஜனவரி 4-ந் தேதி முதல் மார்ச் 10-ந் தேதி வரை இந்தியாவின் 4,203 நகரங்களில் நடத்தப்பட்டது. இந்தக் கணக்கெடுப்பில் இந்தூர் மீண்டும் முதலிடம் பிடித்தது. இந்தூருடன் போபால், சண்டிகர் நகரங்களும் முதலாவது இடத்தை பிடித்தன.

2018 ஆகஸ்ட் 13-ந் தேதி 2019-ம் ஆண்டுக்கான தூய்மை கணக்கெடுப்பு அறிவிக்கப்பட்டது. 2019 ஜனவரி 4-ந் தேதி தொடங்கும் இந்த கணக்கெடுப்பு நாட்டின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் நடத்தப்படும்.

 

மேலும் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

 



ARV/CJ/REV



(Release ID: 1558101) Visitor Counter : 278


Read this release in: English , Hindi , Bengali