பிரதமர் அலுவலகம்

புதுதில்லியில் 2018 மார்ச் 06-ந்தேதி சிஐசி வளாக கட்டிட திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 MAR 2018 7:51PM by PIB Chennai

மத்திய தகவல் ஆணையத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் காரணமாக, குறிப்பிட்ட காலத்துக்கு முன்பாகவே இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தை நிர்மாணிப்பதில் பங்கெடுத்த பல்வேறு துறைகளின் ஊழியர்களை  நான் வாழ்த்துகிறேன். இந்தக் கட்டிடம் கிரிஹா-4 என்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடம் என்ற தரச்சான்றிதழை பெற்றுள்ளது பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்தக் கட்டிடம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதுடன், மின்சாரத்தையும் சேமிக்கக் கூடியதாகும். தகவல் ஆணையம் சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமைப்பாட்டுடன் மேலும் திறமையாக செயல்படுவதற்கு இந்தக் கட்டிடம் உதவும் என்று நான் நம்புகிறேன்.ஆணையம் பெறுகின்ற வழக்குகளை விரைந்து விசாரிக்கவும் இது உதுவும். வழக்குகளுக்கு வேகமாக தீர்வு காண்பதன் மூலம், பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு கிடைக்கும்.

நண்பர்களே,

இன்று மத்திய தகவல் ஆணையத்தின் தொலைபேசி செயலியை தொடங்கி வைக்கும் வாய்ப்பையும் நான் பெற்றேன். மக்கள் இதில் தங்கள் புகார்களையும், குறைகளையும் சுலபமாக தாக்கல் செய்ய முடியும். மேலும், தகவல் ஆணையம் அளிக்கும் தகவல்கள் விரைவாக மக்களை சென்றடையும்.

மக்கள் சேவைக்காக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய தகவல் ஆணையம் எடுத்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டது. மத்திய தகவல் ஆணையம்,.மக்களுக்கு வழங்கும் வசதிகளை அதிகரிக்கவும் புகார்களுக்கு விரைந்து தீர்வு காணவும், நவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடித்து வருகிறது.

ஆணையம் செயல்படத் தொடங்கியதில் இருந்து , கடந்த ஆண்டில் மிக அதிகமான புகார்களுக்கு தீர்வு கண்டிருப்பது உண்மையிலேயே மிகுந்த திருப்திகரமான நடவடிக்கையாகும். இதைக் கருத்தில் கொண்டு, மக்களுக்கு கூடுதல் சேவை வழங்கவும், புகார்களுக்கு விரைந்து தீர்வு காணவும், ஆணையம் தொடர்ந்து செயல்படும் என நான் நம்புகிறேன்.

நண்பர்களே,

ஜனநாயகம் மற்றும் நிர்வாகப் பங்கேற்புக்கு வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையும் மிகவும் அவசியமாகும். நம்பகத்தன்மை வாய்ந்த நிர்வாகத்துக்கு இத்தகைய நிறுவனங்கள் கிரியா ஊக்கிகளாக செயல்படும். அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இந்த நிறுவனங்கள் மிகமுக்கிய பங்கு வகிக்கின்றன.நாட்டு மக்களின் அபிலாஷைகளையும், எதிர்பார்ப்புகளையும் மனதில் கொண்டு, நாட்டின் மனித ஆற்றலை முழுவதும் பயன்படுத்தும் வகையில் இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன.

நண்பர்களே,

அதிகாரமளிக்கப்பட்ட குடிமக்கள் நாட்டின் மிக வலிமையான தூண்கள் என்று நான் நம்புகிறேன். கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு இந்திய மக்களை அதிகாரமுள்ளவர்களாகவும், பல்வேறு வகையில் தகவல்களை அறிந்தவர்களாகவும் மாற்ற எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன என்பதை நீங்கள் கண்டீர்கள். தகவல் அறிவது ஒரு வழிப்பாதையாக இருந்தது என்பதை வரலாற்றில் பல சம்பவங்கள் மூலம் நாம் அறியலாம். அவற்றுக்கு மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டன. எனவே,எங்கள் அரசு ஒருவழி அணுகுமுறையை கடைப்பிடிப்பதற்கு பதிலாக, நவீன தகவல் நெடுவழியை ஏற்படுத்தும் கொள்கையை வகுத்து வருகிறது.

தகவல்கள் இருவழியாக விரைவாக செல்லும் வழியில் ஏற்படுத்தப்பட்ட இது நெடுவழியாகும்.

நண்பர்களே,

நாம் பயன்படுத்தி வரும் இன்றைய நவீன தகவல் நெடுவழியில் 5 தூண்கள் உள்ளன. அவை, கேட்பது, கவனிப்பது, கலந்துரையாடுவதுகலந்துரையாடல் , செயல்படுவது, தகவல் தெரிவிப்பது ஆகும்.

முதல் தூணான கேள் என்பது, சிறந்த நிர்வாகத்துக்கான அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் பற்றி விரிவான விவாதம் நடத்துவதாகும். எல்லாவிதமான மக்களின் வினாக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. உலகின்  மிகப்பெரிய மக்கள் பங்கேற்பு தளமான My Gov மூலம்  மக்கள் அரசை தொடர்பு கொள்ளலாம்.

கூட்டு நடவடிக்கை மூலமான நிலைய புத்தாக்க முன்முயற்சி  என்னும் சமீபத்திய ஶ்ரீஜன் உதாரணத்தை நான் உங்களுக்கு தெரிவிக்க முடியும். ரயில்வேயின் இந்த சுவாரஸ்யமான முன்முயற்சி மூலம், மக்கள் பல வினாக்கள் வழியாக அரசுக்கு வழிகாட்ட வகை செய்யப்பட்டுள்ளது.

சகோதர, சகோதரிகளே,

தகவல் நெடுவழியின் இரண்டாவது தூண் கவனிப்பது ஆகும்.

இன்று ஆட்சியில் இருக்கும் அரசு மக்கள் கூறுவதை கவனிக்கிறது. சமூக ஊடகங்கள் மற்றும் CPGRAMS மூலம் தெரிவிக்கப்படும் ஆலோசனைகளை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.. மக்களிடம் இருந்து கிடைக்கும் ஆலோசனைகள் மற்றும் யோசனைகளின் படி, அரசு அவ்வப்போது மாற்றங்களைச் செய்து கொள்கைகளை வகுத்து வருகிறது.

நண்பர்களே,

கலந்துரையாடல் தகவல் நெடுவழியின் மூன்றாவது தூணாகும். இதில் வினாக்களும், யோசனைகளும் தெரிவிக்கப்படுவதால் இது முக்கியமானதாகும். கலந்துரையாடல் அரசுக்கும், குடிமக்களுக்கும் இடையே ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்துவதாக நான் நம்புகிறேன்.

மக்களுடன் கலந்துரையாடலை அதிகரிப்பதற்காக அவ்வப்போது கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் எனது அரசை மதிப்பிடு என்ற கணிப்பு ஆய்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதேபோல ,தகவல் நெடுவழியின் நான்காவது மற்றும் மிக முக்கியமான தூண் நடவடிக்கை எடுப்பதாகும்.

வினாக்கள், ஆலோசனைகள், கலந்துரையாடலுக்குப் பின்னரும் நடவடிக்கை இல்லாமல் இருந்தால், அத்தனை கடின உழைப்பும் வீணாகி விடும்.

ஆகவே, மக்கள் அளிக்கும் ஆலோசனைகள், எழுப்பும் வினாக்களின் அடிப்படையில்,  நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். ஜி.எஸ்.டி வரி விதிப்பில் கூட, மக்களின் புகார்களுக்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. பேச்சு வார்த்தையின் பலனாக, நுகர்வோரின் நலனைப் பாதுகாக்கும் வகையில் தேசிய லாபமீட்டாத ஆணையம் உருவாக்கப்பட்டது. மேலும், டுவிட்டர்களைக் கவனிப்பதன் வாயிலாக, அமைச்சர்களும், அமைச்சகங்களும் எவ்வாறு பல்வேறு புகார்களுக்கு தீர்வு காண்கின்றனர் என்பதை நீங்கள் கண்டிருக்கலாம். டுவிட்டர் பதிவுகள் மூலம் இன்று மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

தகவல் நெடுவழியின் ஐந்தாவது தூண் தெரிவி என்பதாகும்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்  குறித்து மக்களுக்கு சரியான தகவல்களைத் தரவேண்டியது அரசின் கடமையாகும். அதனால்தான், எங்கள் அரசு ஆன்லைன் தகவல் அளிக்கும் புதிய முறையை உருவாக்கியுள்ளது. முதன்முறையாக, அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து உடனுக்குடன் தெரிவித்து வருகிறது. உதாரணமாக, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் எத்தனை கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன, சவுபாக்யா திட்டத்தின் முன்னேற்றம், உஜாலா திட்டத்தின் கீழ் எத்தனை எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டுள்ளன, முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கடன்கள் பல்வேறு முக்கிய விவரங்கள் ஆன்லைனில் கிடைக்கின்றன.

சகோதர, சகோதரிகளே,

பல்வேறு தரப்பட்ட மக்கள் ஒரேமாதிரியான கேள்விகளை கேட்பதே நாம் கவனித்திருக்கலாம். இவ்வாறு, பலதரப்பு மக்களின் கேள்விகளை எதிர்நோக்க நேரத்தை விரயமாக்காமல், சிக்கனத்துடன் ஆதாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, பல்வேறு அமைச்சகங்களின் இணையதளங்களில் மக்களுக்கு தேவையான விவரங்கள் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இந்த நடவடிக்கையின் பயனாக, மக்கள் அரசின் திட்டங்கள் பற்றிய புள்ளி விவரங்களையும், தகவல்களையும் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு அமைச்சகமும் மக்களுக்கு தேவையான தகவலை குறுந்தகவல் மூலம் அனுப்பி வருகின்றன.

நண்பர்களே,

இன்று, டிஜிடல் முறையில் அதிகாரமளிக்கப்பட்ட சமுதாயத்தை நோக்கி, இந்தியா துரிதமாக வளர்ந்து வருகிறது. நடைமுறைகளை எளிதாக்க மட்டும் தகவல் தொழில்நுட்பம்  பயன்படுத்தப்படவில்லை. வெளிப்படையான ,தரமான சேவையை வழங்கவும் அது பயன்படுத்தப்படுகிறது. குடிமக்கள் சேவையை மேலும் வசதிமிக்கதாக ஆக்க டிஜிடல் தொழில்நுட்பம் விரிவு படுத்தப்பட்டு வருகிறது.

ஜன்தன் வங்கி கணக்குகள், ஆதார், செல்பேசி ஆகியவற்றின் உதவியுடன் , அரசின் திட்டங்களின் பயன்கள் சரியானவர்களின் கைகளில் சென்றடைவது உறுதிசெய்யப்பட்டது. மக்களின் வங்கி கணக்குகளில் பணத்தை நேரடியாக செலுத்துவதன் மூலம், தவறானவர்கள் கைகளுக்கு சென்று கொண்டிருந்த ரூ. 57,000 கோடி தடுக்கப்பட்டு சேமிக்கப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், பிரதமரின் வீட்டு வசதி திட்டம் ஆகியவை ஒன்றுபடுத்தப்பட்டு , செயற்கைக்கோள் படங்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளாக தடைப்பட்டு இருந்த ,பாசனத்திட்டங்கள் ஆளற்ற விமானங்களின் மூலம், தற்போது கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற பிரகதி கூட்டம் பற்றி நான் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த வாரம், கேதார் கட்டியில் நடைபெறும் மறுகட்டுமான பணிகளை  பிரதமர் அலுவலகத்தில் இருந்து நாங்கள் கண்காணித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பம் பிரதமர் அலுவலகத்தில் இருந்து முதன்முறையாக பயன்படுத்தப்படுகிறது. கேதார் கட்டியில் சுவர்களும், புதிய பாதைகளும் எழுப்பப்படுவதை ஆளற்ற விமானங்களில் உள்ள கேமராக்கள் , எங்களுக்கு நேரடியாக காட்டுகின்றன. அதேபோல, பாபா போலே ஆலயம் பழுது பார்க்கப்படுவதையும் எங்களால் காண முடிகிறது.

நண்பர்களே,

பிரகதி கூட்டம் ,நாட்டு மக்களுக்கு உரிமைகளை வழங்கும் வழியாக மாறியுள்ளது. இந்த உரிமைகள் சட்டத்தில் இடம்பெறவில்லை. ஆனால், மக்களிடம் இந்த உரிமைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்.

அரசின் திட்டங்கள் அனைத்தும் குறித்த காலத்தில் நிறைவடைகின்றனவா என்பதை அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது.

பல்வேறு திட்டங்கள் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தன. ஆனால், எங்கள் அரசு பொறுப்பேற்றுக் கொண்டு அவற்றை முடித்துள்ளன. பிரகதி கூட்டத்தில் இதுவரை , ரூ.9.5 லட்சம் கோடிக்கான திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகள் மூலம், வெளிப்படைத்தன்மை அதிகரித்து நமது பணிக்கலாச்சாரத்தில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

கள நிலவரத்தில் நடைமுறைகள் மேம்படுத்தப்பட்டதாலும், வெளிப்படைத்தன்மை பராமரிக்கப்பட்டதாலும் ,குறித்த காலத்தில் திட்டங்களை முடிப்பது, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பை துரிதப்படுத்துவது போன்ற அனைத்து விஷயங்களும் சாத்தியமானது.

இந்தக் கட்டிடத்தை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம். 12 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது. அன்று முதல், வாடகைக் கட்டிடங்களிலேயே ஆணையம் செயல்பட்டு வந்தது.

2014-ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அமைந்த பின்னர், அனைத்து நடைமுறைகளும் துரிதப்படுத்தப்பட்டன. இந்தக் கட்டிடத்துக்கு ரூ.60 கோடி ஒதுக்கப்பட்டு ,உடனடியாக பணிகள் தொடங்கப்பட்டன.

மிகவும் முக்கியமாக இந்த மாதக்கடைசியில் முடிவடைய வேண்டிய கட்டுமானப் பணி , கடந்த ஆண்டு நவம்பர் மாதமே சம்பந்தப்பட்ட துறைகளால் கட்டி முடிக்கப்பட்டது.

தில்லியில் கடந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைக்கும் வாய்ப்பை நான் பெற்றது எனக்கு நினைவுக்கு வருகிறது. இந்த மையத்தை அமைக்க 1992-ம் ஆண்டில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் 23  ஆண்டுகளாக ஒன்றும் நடக்கவில்லை.  இந்த அரசு  பதவி ஏற்ற பின்னர்தான், அடிக்கல் நாட்டப்பட்டது. திறந்தும் வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றம் , நாடாளுமன்றம் முதல் சாலைகள் வரை, பிரதமர் அலுவலகம் முதல் பஞ்சாயத்து வரை பிரதிபலிக்கிறது.

வர்த்தக அமைச்சகத்தில் ஒரு துறை அண்மையில் மூடப்பட்டதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அது சப்ளை மற்றும் டிஸ்போசல் தலைமை இயக்ககம் ஆகும். அந்த துறையில் பணியாற்றிய 1100 ஊழியர்கள் இன்று வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இந்தத் துறை மூடப்பட்டதற்கான காரணத்தையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

பழைய முறைகளுக்குப் பதிலாக புதிய முறைகள் பழக்கத்துக்கு வந்துள்ளன. சரக்கு மற்றும் சேவைகள் பொது கொள்முதலுக்கான மின்னணு சந்தை அரசால் உருவாக்கப்பட்டது.இது அதனால் விளைந்த பயனாகும். அரசின் இந்த மின்னணு தளம் அரசின் கொள்முதலில் ஊழலை ஒழித்ததிலும், வெளிப்படையான முறையை ஏற்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளது.

இந்த மின்னணு தளம்மூலம், நாட்டின் சிறு தொழில் முனைவோரும், நாட்டின் தொலைதூர மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களும் தங்கள் உற்பத்தி பொருட்களை அரசுக்கு நேரடியாக விற்பனை செய்ய முடிந்துள்ளது.

மேலும், பல்வேறு மட்டங்களில், முறையை எளிமைப்படுத்துவதன் மூலம், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

குழு சி மற்றும் டி பிரிவு வேலைகளுக்கான நேர்காணல்கள் ரத்து செய்யப்பட்டு விட்டன. தொழிலாளர் சட்டங்கள் மூலம் பராமரிக்கப்பட்டு வந்த பதிவேடுகளின் எண்ணிக்கை 56-லிருந்து 5ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஷ்ரம் சுவிதா ,இணையதளம் மூலம் அனைத்து விண்ணப்பங்களையும் இப்போது ஆன்லைனிலேயே பூர்த்தி செய்யப்படுகின்றன.

அரசு- பொதுமக்கள் கலந்துரையாடலுக்கு வசதியாக ,டிஜிடல் முறையின் வழியாக மனித இடைமுகத்தை குறைக்க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

செயற்கை நுண்ணறிவு , தரவு வெளிப்பாடு வாயிலாக , நம்பகத்தன்மையுடன் கூடிய அர்த்தமுள்ள தகவல்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன.

நண்பர்களே,

பல தசாப்த ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஆயிரத்து நானூற்றுக்கும் மேற்பட்ட தேவையற்ற சட்டங்களை எங்கள் அரசு ரத்து செய்துள்ளது. பத்ம விருதுகளை வழங்குவதில் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளாக வெளிப்படையான முறையைக் கையாண்டு வருவதை நீங்கள் கண்டிருக்கலாம். இந்த வெளிப்படையான முறையின் பயனாக, நாட்டின் தொலைதூரங்களில் தங்கள் வாழ்க்கையை கழித்து வரும் மக்கள் மற்றும் சமுதாய நலனுக்கு பல்வேறு பங்களிப்பை வழங்கியவர்கள் தங்களது சாதனைகளை தெரிவிக்க முன்வருவதற்கு  இது வாய்ப்பை வழங்கியுள்ளது.

நண்பர்களே,

அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி சுருங்கும்போது, புதிய, பயனுள்ள வகையில் தகவல் தொடர்பை வெளிப்படுத்தும் வசதிகள் கிடைக்கும் போது, மக்கள் தாங்களாகவே முடிவெடுக்கும் நடைமுறையில் பிரிக்க முடியாத அம்சம் என்று கருதி , தேச நிர்மாணத்தில் பங்கேற்க முன்வருவார்கள்.

எல்.பி.ஜி சிலிண்டர் மானியத்தை விட்டுக்கொடுக்குமாறு விடப்பட்ட ஒரு சிறிய வேண்டுகோளுக்கு எத்தகைய பலன் ஏற்பட்டது என்பதை நீங்கள் கண்கூடாக கண்டீர்கள்.’’ விட்டுக் கொடுங்கள்’’ பிரச்சாரம் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான உணர்வு பூர்வமான தகவல் தொடர்புக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாகும்.

இதுபோல ,கழிவறைகளின் பயன்பாடு முன்பு எப்போதும் இல்லாத நிலையில்,  தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ், கழிவறைகளைக் கட்டுவது தொடர்பாக, நாடு முழுவதும் மிகப்பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. மக்கள் தங்கள் வயது, வகுப்பு, சாதி என்ற தடைகளைத் தகர்த்து ,தங்கள் மனப்பூர்வமாக தூய்மை இந்தியா இயக்கத்தில் பங்கெடுத்ததை காண முடிந்தது. இதை கட்டாயப்படுத்தி சாதிக்கவில்லை, மக்களுக்கு விழிப்புணர்ச்சியை உருவாக்கியதால் சாதிக்க முடிந்தது. பெண் குழந்தை பிறப்பு குற்றம் எனக்கருதப்பட்ட பகுதிகளில் நாம் மேற்கொண்ட விழிப்புணர்ச்சி பிரச்சாரத்துக்கு இன்று நல்ல ஆக்கபூர்வமான பலன்கள் கிட்டியுள்ளன.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டம் இரண்டு நாட்களில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனையொட்டி பெண் குழந்தைகளுடன் நேரடி உரையாடலுக்கு அரசு ஏற்பாடுகள் செய்துள்ளது.

நண்பர்களே,

வெளிப்படைத் தன்மையான நடைமுறைகள் மேம்பாடு அடையும் போது, அரசுக்கு சுமுகமான முறையில் தகவல்கள் குவிவதுடன் ,அரசு மீதான மக்களின் நம்பிக்கையும் அதிகரிக்கும். கடந்த மூன்று, மூன்றரை ஆண்டுகளில் , நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தி, மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க எங்கள் அரசு பணியாற்றி வந்துள்ளது.

இவ்வாறு தகவல்கள் குவிவதற்கு மத்திய தகவல் ஆணையம் நிச்சயமாக மிக முக்கிய பங்காற்றி உள்ளது.

நண்பர்களே,

இன்று ,இந்த மேடையில் மற்றொரு விஷயம் குறித்து விவாதிக்க விரும்புகிறேன். நம் நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் போல, ‘’ ஆக்ட் ரைட்லி ‘’ என்னும் கொள்கை பற்றி பரிசீலிக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. நமது உரிமைகளை அனுபவிக்கும் போது, நமது கடமைகளை மறந்துவிடக் கூடாது என்பதே இதன் பொருளாகும்.  நாட்டு மக்களுக்கு தங்கள் உரிமைகளைப்  பற்றி மட்டும் தெரிந்தால் போதாது, கடமைகளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மக்கள் கலந்துரையாடல் மிக அதிகமாக இருக்கும் மத்திய தகவல் ஆணையம் போன்ற நிறுவனங்கள் ‘’ ஆக்ட் ரைட்லி’’  குறித்து மக்களுக்கு மிகச் சிறந்த முறையில் தெரிவிக்க பெரிதும் உதவ முடியும் என நான் நம்புகிறேன்.

பொது மக்களின் நலனுக்காக அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை சிலர் தங்கள் சொந்த நலனுக்காக தவறாக பயன்படுத்த தொடங்குவதை நாம் அடிக்கடி பார்த்திருக்கலாம். இந்தத் தவறான செய்கைகளின் சுமைகளை இந்த நிர்வாக நடைமுறைகள் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

உரிமைகளை அனுபவிக்கும் போது, கடமைகளை மறப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. தொழில்நுட்பம் மற்றும் புதிய வசதிகள் மனித நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். சில நபர்களின் சுயநல விருப்பங்களுக்காக இந்த நலன்கள் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

எதிர்கால சவால்களை மனதில் கொண்டு, நிகழ்கால சூழலை மதிப்பிடும் போது , பொறுப்புள்ள ஒவ்வொரு நிறுவனமும் உரிமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு இடையே   சமன்பாடான நிலையை ஏற்படுத்த பாடுபட வேண்டும்.

மத்திய தகவல் ஆணையம் மக்களுக்கு தகவல்களை அளிப்பதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பணியைத் தொடரும் என்ற நம்பிக்கையுடன் எனது உரையை நான் நிறைவு செய்கிறேன்.

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.



(Release ID: 1557552) Visitor Counter : 243


Read this release in: English , Urdu