அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
2018-ன் அறிவியல் தொழில்நுட்பத் துறை சாதனைகள்
Posted On:
20 DEC 2018 4:25PM by PIB Chennai
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் விரிவான இடத்தைக் கொண்டுள்ள அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) உலகில் உள்ள மிகப்பெரிய அரசு நிதியுதவி கொண்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. இதில் செயலூக்கமிக்க 38 தேசிய சோதனைக் கூடங்களும், 39 மக்கள் தொடர்பு மையங்களும், 5 உட்பிரிவுகளும் உள்ளன. இந்தக் கவுன்சிலில் சுமார் 7 ஆயிரம் அறிவியல் தொழில்நுட்ப ஆளுமைகளின் ஆதரவைப் பெற்று 4 ஆயிரத்துக்கும் அதிகமான நிபுணத்துவமும், அனுபவமும் கொண்டவர்கள் செயல்படுகின்றனர். இந்தக் கவுன்சில் இந்தியப் பிரதமரை தலைவராகக் கொண்டுள்ளது.
குறிப்பிட்ட துறைகளில் உலகத்தரம் வாய்ந்த தொழில் முயற்சிகளை உருவாக்குவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்ளும் பல வகையான வசதி கொண்ட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முதலாவது உயிரி எரிபொருளால் இயக்கப்படும் விமானம்
டேராடூனில் உள்ள சிஎஸ்ஐஆரின் இந்திய பெட்ரோலிய ஆய்வுக் கழகத்தில் காப்புரிமை பெறப்பட்ட தொழில்நுட்ப அடிப்படையில் விமானத்திற்கு பயன்படுத்தப்படும் உயிரி எரிபொருள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணி நிறைவு பெற்று ஆகஸ்ட் 27, 2018 அன்று டேராடூனிலிருந்து தில்லிக்கு இயக்கப்பட்டது. உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதன் மூலம் 15 சதவீத கரியமில வாயு வெளியேற்றம் குறைவதோடு, 91 சதவீதம் கந்தக வாயு வெளியேற்றமும் குறைகிறது. இதனால், விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு என்ஜின்களின் செயல்திறன் அதிகரிப்பதோடு, பராமரிப்பு செலவும் குறைகிறது.
சரஸ் – பிடி-1-என் விமானம் வெற்றிகரமான தொடக்கம்
சிஎஸ்ஐஆரின் முன்னணி விண்வெளி ஆய்வுக் கூடமான தேசிய விண்வெளி சோதனைக் கூடத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்ட 14 இருக்கைகளைக் கொண்ட சரஸ் – பிடி-1-என் என்ற சிறு விமானம் 21.02.2018 அன்று வெற்றிகரமாக இயக்கப்பட்டது. இதன் முதன்மையான நோக்கம் சுமார் 20 விமானங்களை தயாரிப்பதும், இதன்மூலம் திரட்டப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, 19 இருக்கைகள் கொண்ட சரஸ்-எம்கே-II விமானங்களை உருவாக்குவதுமாகும்.
பார்வை குறைந்தோருக்கு சிஎஸ்ஐஆரின் திவ்ய நயன்
இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கின்ற அச்சிடப்பட்ட மற்றும் டிஜிட்டல் புத்தகங்களைப் பார்வைக் குறைபாடு உடையவர்களும், படிப்பதற்கு வசதியாக திவ்ய நயன் எனும் வாசிக்கும் கருவியை சிஎஸ்ஐஆர் உருவாக்கியுள்ளது. இந்தக் கருவி, பார்வை குறைபாடுடைய பல்வேறு வயதினரைக் கொண்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இதற்கு பரவலான வரவேற்பு உள்ளது.
பொலிவுறு இந்தியா: ஹேக்கத்தான் 2018
பொலிவுறு இந்தியா ஹேக்கத்தான் 2018-மென்பொருள் பிரிவில் சிஎஸ்ஐஆர் தீவிரமாக பங்கேற்றது. புனேயில் உள்ள தேசிய விண்வெளி சோதனைக்கூடத்தில் 36 மணிநேர இறுதிச்சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடத்தியது. இதில் முதன்மைப் பங்குதாரராக சிஎஸ்ஐஆர் இருந்தது. பல வகையான சுற்றுக்களின் நிறைவில் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளிலிருந்து 318 மாணவர்களும் 75 ஆசிரியர்களும் பங்கேற்றனர். இவர்கள் தங்களின் திறன்களை வெளிப்படுத்தினர். பல்வேறு குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தியபின், மூன்று குழுக்கள் பரிசுகளைப் பெற்றன. முதல் பரிசு ரூ.1,00,000, இரண்டாம் பரிசு முதல்நிலை ரூ. 75,000, 2-ம் பிரிவு இரண்டாம் நிலை ரூ.50,000 என வழங்கப்பட்டது. மேலும் மூன்று குழுக்கள் தெரிவு செய்யப்பட்டு, விருதுகள் வழங்கப்பட்டன.
சூரியசக்தி மரம் / கலைப் பொருட்கள் உருவாக்கம்
சூரிய மின்சக்தி உற்பத்திக்கு மிகப் பொருத்தமான தீர்வாக சூரியசக்தி மரம் என்பதை சிஎஸ்ஐஆர் உருவாக்கியுள்ளது. வழக்கமான பயன்பாட்டைவிட, மிகக்குறைந்த நிலப்பகுதியில் இதனை உருவாக்க முடியும். ஓரிடத்தின் அழகை அதிகப்படுத்தவும், சூரியசக்தி தொழில்நுட்பத்தை நேரடியாக காணும் வகையிலும், கலைப் பொருட்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
ரோபோவும், மின்சக்தியும் கொண்ட சக்கர நாற்காலி
நடக்க இயலாத மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் ஆகியோருக்கு சமூகத்தில் மதிப்பை அளிக்கும் விதமாக ரோபோவும், மின்சக்தியும் கொண்ட சக்கர நாற்காலிகளை சிஎஸ்ஐஆர் வடிவமைத்து தயாரித்துள்ளது. இது மிகக் குறுகலான பாதையைக்கூட 360 டிகிரி அளவுக்கு முழுவதுமாக திரும்பிச் செல்லும் திறன்கொண்டது. இந்தத் தொழில்நுட்பம் 5 ஆண்டுகாலத்திற்கு வணிக ரீதியாகப் பயன்படுத்த இந்தியத் தொழில்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம்
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 15,000 டன் பிளாஸ்டிக், கழிவுகள் உருவாகின்றன. இவற்றைப் பாதுகாப்பாக அழிப்பது மிகப்பெரும் சவாலாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கும் பெரும் கேடு விளைவிக்கிறது. சிஎஸ்ஐஆர் உருவாக்கியுள்ள தொழில்நுட்பம் குறைந்த செலவில் சமூகப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்கிறது. கழிவுப் பொருள்களிலிருந்து செல்வத்தையும் உருவாக்குகிறது.
சிஎஸ்ஐஆர்-ன் திறன் மேம்பாட்டு முயற்சிகள்
- அறிவியல் தொழில்நுட்பத்தின் பல்வேறு பிரிவுகளில் உள்ள சிஎஸ்ஐஆர் சோதனைக் கூடங்களில் இந்த ஆண்டு ஒருங்கிணைந்த திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் சுமார் 19,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
- தேசிய ஷெட்யூல்டு வகுப்பு, நிதி மேம்பாட்டு கழகம் போன்ற நிதி நிறுவனங்களின் ஆதரவுடன் நாடு முழுவதும் பல்வேறு தோல் தொழில்களில் சுமார் 3,000 கைவினைஞர்களுக்கு சிஎஸ்ஐஆர் – சிஎல்ஆர்ஐ திறன்பயிற்சி அளித்துள்ளது.
- ஆந்திரப்பிரதேசத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 12,500 மீனவர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆந்திரப்பிரதேச திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் சிஎஸ்ஐஆர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- தோல் பொருட்கள் உற்பத்திப் பிரிவில் தொழில் முனைவோர் மற்றும் திறன் பயிற்சி வழங்க ஆந்திரப் பிரதேச ஷெட்யூல்டு வகுப்பு கூட்டுறவு நிதிக்கழகத்துடன் சிஎஸ்ஐஆர் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 10,000 ஷெட்யூல்டு வகுப்பினர் பயனடைவார்கள். இதற்கு ஆந்திரப்பிரதேச ஷெட்யூல்டு வகுப்பு கூட்டுறவு நிதிக்கழகம் அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு ரூ. 30 கோடி முதலீடு செய்ய உள்ளது.
சிஎஸ்ஐஆர் விஞ்ஞானிகள் பள்ளி மாணவர்களுடன் இணைப்பு
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கூட்டு இணைவுடன் ஜிக்யாசா (JIGYASA) எனும் திட்டத்தை சிஎஸ்ஐஆர் தொடங்கியுள்ளது. சிஎஸ்ஐஆர்-ன் 38 தேசிய சோதனைக் கூடங்களுடன் 1151 கேந்திரிய வித்யாலயாக்களை இந்தத் திட்டம் இணைக்கிறது. 2018-ல் கேந்திரிய வித்யாலயாவிலிருந்து சுமார் 27,000 மாணவர்கள் 2,500 ஆசிரியர்களை இலக்காகக் கொண்டு 200-க்கும் அதிகமான திட்டங்கள் ஏற்கனவே அமலாக்கப்பட்டுள்ளன.
********************
ஐந்தாண்டு காலத்தில் ரூ.3660 கோடி ஒதுக்கீட்டில், பல துறை இணைந்த கணினி வழியான கட்டுப்பாட்டு முறைக்கு தேசிய இயக்கத்தைத் தொடங்க மத்திய அமைச்சரவை டிசம்பர் மாதத்தில் ஒப்புதல் வழங்கியது. அறிவியல் தொழில்நுட்பத் துறையின் இந்த ஆண்டுக்கான மிகப்பெரிய முன்னேற்றமாகும். இந்த இயக்கம் சமூகத்தின் அதிகரித்து வரும் தொழில்நுட்பத் தேவைகளை நிறைவு செய்வதோடு, அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களுக்காக முன்னணி நாடுகளுக்கு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.
2050 ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா டன் அளவுக்குக் கரியமிலவாயு வெளியேற்றத்தைத் தடுக்கும் தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டிருப்பது நவம்பர் மாதத்தின் முக்கிய செயலாகும். இரண்டு ஆண்டு போட்டிக்குப்பின், 3 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.
கிழக்கு நாடுகள் நோக்கிய செயல் கொள்கையின் ஒரு பகுதியாக முதலாவது ஆசியான்-இந்தியா புதிய கண்டுபிடிப்பு தொழில்நுட்ப உச்சிமாநாடு புதுதில்லியில் நவம்பர் 29, 30 தேதிகளில் நடைபெற்றது. இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புதிய கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தனியார் நிறுவனங்கள், புதுமை தொழில் நிறுவனங்கள் ஆகியவை தகவல் பரிமாற்றங்களை செய்து கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதும், செயல்விளக்கம் அளிப்பதும் இந்த உச்சிமாநாட்டின் முதன்மை நோக்கமாக இருந்தது.
அறிவியல் தொழில்நுட்பத்துறையில் மத்திய அரசுக்கும், உஸ்பெகிஸ்தான் குடியரசுக்கும் இடையே அக்டோபர் மாதத்தில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்தாலியைப் பங்குதாரர் நாடாகக் கொண்டு அறிவியல் தொழில்நுட்பத் துறை – இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு இணைந்து புதுதில்லியில் அக்டோபர் 29, 30 தேதிகளில் தொழில்நுட்ப உச்சிமாநாட்டை நடத்தின.
வாகனங்களால் ஏற்படும் மாசினைத் தடுப்பதற்கு ‘வாயு’ எனும் கருவி செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தக் கருவியின் விலை ரூ.60,000 ஆகும். மாதாந்திர பராமரிப்புச் செலவு ரூ.1,500 ஆக இருக்கும்.
ஜூன் 24-29, 2018-ல் ஜெர்மனியின் மின்டாவ் நகரில் 68-வது நோபல் விருதாளர்கள் சந்திப்பு நிகழ்வில் உடற்கூறுஇயல் மற்றும் மருந்துகள் துறையைச் சேர்ந்த 30 இளம் அறிஞர்கள் பங்கேற்றனர்.
ஜூலை 2-6, 2018-ல் ஜெர்மனியில் உள்ள பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களுக்கு இந்திய மாணவர் குழுவினர் பயணம் செய்தனர்.
ஜூன் 25-29, 2018-ல் டர்பன் நகரில் நடைபெற்ற 3-வது பிரிக்ஸ் விஞ்ஞானிக்ள் மாநாட்டிற்கு இந்தியாவைச் சேர்ந்த 27 இளம் விஞ்ஞானிகளை அறிவியல் தொழில்நுட்பத்துறை அனுப்பிவைதத்து.
இந்த மாநாட்டின் போது புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டியும் நத்தப்பட்டது. இந்தியாவைச் சேர்ந்த 23 வயது நிறைந்த ஒரு கண்டுபிடிப்பாளர் விருது பெற்றார்.
மார்ச் மாதத்தில் கண்டுபிடிப்பு மற்றும் தொழில் முனைவோர் விழாவை குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கான காந்திய விருதுகளை இளம் விஞ்ஞானிகளுக்கு வழங்கினார்.
ஜனவரி மாதத்தில் இந்தியா-இஸ்ரேல் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு நிதியம் ஐந்தாண்டு காலத்திற்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய அறிவியல் தொழில்நுட்பத் துறையும் இஸ்ரேல் நாட்டின் தேசிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு ஆணையமும் இணைந்து உருவாக்கியுள்ள 40 மில்லியன் அமெரிக்க டாலர் கொண்ட இந்த நிதியம், இந்தியா-இஸ்ரேல் இடையே தொழில்நுட்ப பொருளாதார ஒத்துழைப்புக்கு வாய்ப்பை வழங்கும்.
********************
(Release ID: 1557511)
Visitor Counter : 1074