பிரதமர் அலுவலகம்

புதிய மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கான கட்டுமான வேலைகளைத் தொடங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 18 FEB 2018 8:12PM by PIB Chennai

மகாராஷ்ட்ர மாநில ஆளுநர் திருமிகு. வித்யாசாகர் ராவ் அவர்களே, மாநில மக்களின் ஆதரவு பெற்ற முதல்வர் திருமிகு. தேவேந்திர ஃபட்நாவிஸ் ஜி அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திருமிகு. நிதின் கட்காரி ஜி அவர்களே, திருமிகு. அசோக் கஜபதி ராஜு ஜி அவர்களே, மாநில அமைச்சர் திருமிகு. ரவீந்திர சவான் ஜி அவர்களே, மாநில சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. ப்ரசாந்த் தாக்கூர் ஜி அவர்களே, இங்கு திரளாக வந்து பங்கேற்றுள்ள எனதருமை சகோதர, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை சத்ரபதி சிவாஜி ஜி மகராஜ் அவர்களின் பிறந்த தினம். அதற்கு ஒரு நாள் முன்பாக ராய்கட் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்று இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முதலில் நமது நிதின் கட்காரி ஜியின் தலைமையின் கீழ் புதியதொரு செயலூக்கத்தைப் பெற்றுள்ள நமது கப்பல் போக்குவரத்துத் துறை, துறைமுகப் பிரிவு மற்றும் நீர்வழிப் போக்குவரத்து ஆகியவற்றின் கீழ் அமைந்த மும்பையின் ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையின் நான்காவது முனையம் இன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டது.

கடந்த பல வருடங்களாகவே உலகமயமாக்கல், உலகளாவிய வர்த்தகம் ஆகிய சொற்களை நாம் கேட்டுக் கொண்டு வருகிறோம். எனினும் வீட்டில் இருந்து கொண்டு உலக வர்த்தகத்தின் திறனைப் பற்றி விவாதிப்பதனாலேயே நாட்டிற்கு எந்தவொரு பயனையும் நம்மால் பெற்றுத் தரவியலாது. உலகளாவிய வர்த்தகத்தில் இணையும் வகையில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு நம்மிடம் இருந்தால் மட்டுமே உலகளாவிய வர்த்தகம் நமக்குப் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த வகையில் கடல் வழி வர்த்தகத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. கடலின் சக்தியை உணர்ந்த முதல் தேசிய தலைவராக, முதல் அரசராக விளங்குபவர் சத்ரபதி சிவாஜி மகராஜ் தான். அந்த வகையில் இந்தியா மிகவும் நற்பெயர் பெற்றதொரு நாடாகும். எனவேதான் கடலோடு இணைக்கப்பட்ட பல கோட்டைகளும் கட்டப்பட்டுள்ளதை நாம் இன்று காண்கிறோம். கடலின் வலிமை குறித்த உணர்வையும் நாம் அதில் காண்கிறோம். பல ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இன்று நாம் சத்ரபதி சிவாஜி மகராஜ்-ஐ நாம் நினைவுகூர்கிறோம். ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையின் நான்காவது முனையத்தை பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கும்போது நமது முன்னோர்கள் எத்தகைய தீர்க்க தரிசனம் மிக்கவர்களாக இருந்தனர் எனப்தையும் அவர்கள் எவ்வளவு தொலைதூரப் பார்வையுடன் இருந்தார்கள் என்பதையும் நம்மால் கற்பனை செய்ய முடியும்.

கடல் வர்த்தகத்தில் இந்தியா தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொள்ள விரும்பினால், தன் கடல் வலிமையை இந்தியா பல மடங்கு பெருக்கிக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு அதிகமாக நமது துறைமுகங்களை நாம் மேம்படுத்துகிறோமோ, அந்த அளவிற்கு அதிகமாக அவை நவீனமானவையாக ஆகின்றன. இவை நிலைபெறும் காலம் குறைக்கப்பட வேண்டும். அதிவேகத்தில் செல்லும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். மில்லியன் டன்கள் கணக்கில் நமது பொருட்கள் உலகச் சந்தையை சென்றடைய வேண்டும். சரியான நேரத்தில் பொருட்களை வழங்குவதிலும் கூட சில நேரங்களில் போட்டி நிலவக் கூடும். பொருட்களை சப்ளை செய்வதற்கான ஒரு ஒப்பந்தம் இறுதிப்படுத்தப் பட்டு, அது குறித்த பொருளாதார ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்ட உடன் குறைவான காலத்திற்குள் பொருட்கள் சப்ளை செய்யப்படுமானால் அதை வாங்குபவர் லாபம் சம்பாதிக்க முடியும். அவ்வாறின்றி சப்ளை செய்வது தாமதமானால் அவருக்கு நஷ்டம் ஏற்படும். நமது துறைமுகத் துறை அத்தகைய வசதியைக் கொண்டிருந்தால் மட்டுமே இவ்வாறு உரிய நேரத்தில் பொருட்களை சப்ளை செய்ய முடியும்.

சாகர்மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்களை மட்டுமே நாம் மேம்படுத்த விரும்புகிறோம் என்று இதற்குப் பொருளல்ல. துறைமுகத்தை முன்னோடியாகக் கொண்ட வளர்ச்சிக்கு நாம் அழுத்தம் தருகிறோம். அதன் மூலம் நமது துறைமுக வசதிகளை வளர்ச்சியின் உச்சத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். இது நமக்கு ஒரு சவால்தான். ஏழாயிரத்து ஐந்நூறு கிலோமீட்டர் நீளமுள்ள இந்தியாவின் மாபெரும் கடற்கரைப் பகுதி நம்மிடம் உள்ளது. இந்த வாய்ப்பை நாம் எப்படிப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம். இதுதான் நம் முன்னேயுள்ள சவால். பெருங்கடல் துறையில் ஓர் உலக சக்தியாக உருவாவதற்கான திறன் கொண்ட பூகோள நிலை நம்மிடம் இருக்கிறது.

இந்தக் கடமையைத்தான் இந்திய அரசு மேற்கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழலைப் பற்றி உலகம் பேசிக் கொண்டிருக்கிறது. சுற்றுச் சூழல் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கான முக்கிய துறைகளில் ஒன்று போக்குவரத்து ஆகும். இந்த போக்குவரத்துத் துறையில்தான் நீர்வழிப் போக்குவரத்தும் அடங்கியிருக்கிறது. நூறுக்கும் மேற்பட்ட நீர்வழிப் போக்குவரத்து பாதைகளை நாம் அடையாளம் கண்டிருக்கிறோம். நாடு முழுவதிலும் சரக்குப் போக்குவரத்திற்கு இந்த நீர்வழிகளையும், நமது ஆறுகளையும் கடற்கரைகளையும் பயன்படுத்திக் கொண்டோமானால் ஒரு சிறு பகுதி செலவிலேயே சரக்குகளை நம்மால் சப்ளை செய்துவிட முடியும். இதன்மூலம் சுற்றுச் சூழலுக்கு குறைந்தபட்ச சேதத்தை ஏற்படுத்துவதன் மூலம் தற்போது உலகம் முழுவதிலும் நடைபெற்று வரும் உலகளாவிய வெப்பமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் சாதகமான பங்களிப்பையும் நம்மால் செய்ய முடியும்.

இன்று புதிய மும்பையில் பசுமைவழி விமான நிலையத்திற்கான பணிகள் தொடங்குகின்றன. நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு விமானத் துறையில் மேற்கொள்ளப்படும் இந்த அளவிற்கு மிகப்பெரிய பசுமைவழி விமான நிலையத் திட்டம் இதுவே முதலாவதாகும். இதைப் பற்றி கடந்த 20 ஆண்டுகளாக கேள்விப்பட்டு வருகிறீர்கள் என்பதையும் சற்றே கற்பனை செய்து பாருங்கள்.  பல்வேறு தேர்தல்களிலும் இது குறித்து உறுதிமொழிகள் வழங்கப்பட்டு வந்தன. பல சட்டமன்ற உறுப்பினர்களும் கூட தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பார்கள். பலரும் இந்த உறுதிமொழியின் அடிப்படையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் கூட ஆகியிருப்பார்கள். பல்வேறு மாநில அரசுகளும் கூட உருவாக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் இந்த விமான நிலையம் கட்டப்படவே இல்லை. இதற்குப் பின்னே இருந்த காரணம் என்ன? இதற்கு பின்னே மிகப் பெரும் தடையாக இருந்தது இதற்கு முன்பிருந்த அரசின் பணிக் கலாச்சாரம்தான்.

1997-ம் ஆண்டில் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் அரசு ஆட்சியில் இருந்தபோது இதுபற்றி கனவு காணப்பட்டது. திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான வேலைகளும் சற்றே முன்னேறியது. நான் பிரதமராக ஆன பிறகு, எனது அன்றாட வேலைகளுக்கு இடையே நாள் முழுவதும் இது போன்ற விஷயங்கள்தான் என் நினைவிற்கு வந்து போய்க் கொண்டிருந்தது. புதிய மும்பை விமான நிலையம் மட்டுமல்ல; இந்தியாவில் வேறு பல முக்கியமான திட்டங்கள் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தன. அதுவும் கூட சம்பந்தப்பட்ட கோப்புகளில் தான். சில நேரங்களில் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் சில திட்டங்கள் பற்றி அறிவிப்பு செய்யப்பட்டன. சில நேரங்களில் யாராவது ஒரு அரசியல்வாதி ஒரு திட்டத்திற்கான அடிக்கல்லும் நாட்டி, அதைப் பற்றி உரையாற்றி, அவரது புகைப்படமும் பத்திரிக்கைகளில் வந்திருக்கும். இருந்தாலும் கூட அந்த திட்டமும் கூட சம்பந்தப்பட்ட கோப்பைத் தாண்டி வெளியே வந்திருக்காது. இத்தகைய ஒரு நிலை எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கவலையையும் ஏற்படுத்தியது.

எனவே பிரகதி என்ற பெயரில் ஒரு திட்டத்தை தொடங்கினேன். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் இந்திய அரசின் செயலாளர்களுடனும் இத்தகைய திட்டங்கள் குறித்து நான் விவாதித்தேன். அவற்றின் செயல்பாடுகள் குறித்து நானே கண்காணிக்கத் தொடங்கினேன். இத்தகையதொரு தருணத்தில் தான் சில நாட்களுக்கு முன்பு தேவேந்திர ஜி இதுபோன்ற ஒரு திட்டம் பற்றி என்னிடம் பேசினார்; இது விஷயமாக எதுவுமே நடக்கவில்லை என்றும் கூறினார். இது காகிதத்தில்  இருக்கிறது. வேறு யாராவது நாளைக்கு வருவார்கள்; யாராவது ஒருவர் தங்கள் காலத்தில்தான் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கூட  கூறுவார்கள். இத்தகைய நபர்களுக்குப் பஞ்சமே இல்லை. எனவேதான் பிரகதியின்  மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஈடுபடுத்தி இந்தப் பிரச்சனையை தீர்க்க உதவுங்கள் என்று அவர் என்னைக் கேட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டிருந்தது என்றால் நீங்கள் ஏன் தவறு செய்தீர்கள்? நீங்கள் தவறிழைக்கவில்லை என்றால் அந்தத் திட்டம் இன்று வரை ஏன் அமலாக்கப்படவில்லை? இந்தக் கேள்விகளை எல்லாம் முன்வைத்து விஷயத்தை செல்லத் தொடங்கினோம். கடந்த 20-30 ஆண்டுகளாக தேங்கிப் போயிருந்த திட்டங்கள் பிரகதியின் கண்காணிப்பின் மூலம் உயிர் பெறத் தொடங்கின என்பதை அறியும் போது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். எந்தவொரு விஷயத்தையும் தொடர்ந்து செயல்படுத்தாமல் ஒத்திப் போட்டுக்கொண்டே போவது; வேலையில் தடை ஏற்படுத்துவது; குழப்பம் ஏற்படுத்துவது என்பதுதான் இதற்கு முந்தைய அரசுகளின் பணிக் கலாச்சாரமாக இருந்தது. இதுதான் நடந்து வந்தது. ரூ. 10 லட்சம் கோடி மதிப்புடைய திட்டங்கள் நடுவில் நிறுத்தப்பட்டு, காணாமலே போயின என்பதை அறிந்தால் நீங்கள் வியப்படைவீர்கள். ஆனால் நாங்கள் அவற்றை அமலாக்கினோம். அவற்றுக்கான நிதியை ஏற்பாடு செய்தோம். இன்று அந்த திட்டங்கள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. அவற்றில் ஒன்றுதான் இந்த புதிய மும்பை விமான நிலைய திட்டம் ஆகும்.

நமது விமான போக்குவரத்து துறை மிகவேகமாக வளர்ந்து வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு நமது கஜபதி ராஜு ஜி விரிவாக விளக்கியைதப் போல 20-25 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களில் மொத்தம் எவ்வளவு பயணிகள் பயணம் செய்தார்களோ அதை விட அதிகமான பயணிகள் மும்பை விமான நிலையத்தை இப்போது பயன்படுத்தி வருகின்றனர் என்றும் அவர் தன் உரையில் குறிப்பிட்டார். இந்த நிலையை சற்றே கற்பனை செய்து பாருங்கள். நாடு முழுவதற்குமான விமான பயணிகளின் எண்ணிக்கை இன்று மும்பையில் மட்டுமே இருக்கிறது. இன்று காலம் வெகுவாகவே மாறி விட்டது.  விமான நிலையத்திற்கு சென்றால் நீண்ட வரிசையில் மக்கள் பேருந்தில் ஏறுவதற்குக் காத்திருப்பதைப் போல விமானத்தில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம். இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களிலும் இத்தகைய விஷயத்தை நாள் முழுவதிலும் உங்களால் பார்க்க முடியும்.

மிக வேகமாக வளர்ந்து வரும் விமான போக்குவரத்து துறையின் தேவைகளுக்கு ஏற்ப இந்தத் துறையில் கட்டமைப்பு விஷயத்தில் நாம் மிகவும் பின் தங்கியிருக்கிறோம். நமது முயற்சி என்பது வேகத்தை அதிகரிப்பதாக உள்ளது; இந்த தேவைகளை சமாளிப்பதாகவே நமது முயற்சிகள் உள்ளன. 21- நூற்றாண்டு நெருங்கி வருகிறது என்று சொல்வதை பல ஆண்டுகளுக்கு முன்பே நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடும். 1980களிலேயே நாளிதழ்களில் நாள்தோறும் இதைப் பற்றி எழுதி வந்ததை பார்த்திருப்பீர்கள். அன்றைய பிரதமரும் கூட தினமும் 21-ம் நூற்றாண்டைப் பற்றி பேசி வந்தார். என்றாலும் 21-ம் நூற்றாண்டு என்ற வார்த்தையைத் தாண்டி எதுவுமே நகரவில்லை.

21-ம் நூற்றாண்டில் விமானப் போக்குவரத்து துறையில் எத்தகைய தேவைகள் இருக்கும் என்று 20-25 ஆண்டுகளுக்கு முன்னால் யாராவது நினைத்துப் பார்த்திருந்தால் இன்று நாம் செய்யும் இந்த வேலையை செய்ய வேண்டிய தேவையே இருந்திருக்காது. இது அவ்வளவு முக்கியமான ஒரு துறை. இந்த முக்கியத்துவம் மேலும் மேலும் அதிகரிக்கத்தான் போகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமே இல்லை. இருந்தாலும் கூட நாட்டின் விடுதலைக்குப் பிறகு எந்தவொரு அரசும் விமான போக்குவரத்து குறித்த கொள்கை எதையும் உருவாக்கவே இல்லை. ஆட்சிக்கு வந்தபிறகு நாங்கள்தான் விமான போக்குவரத்துக்கான கொள்கை ஒன்றை உருவாக்கினோம். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் நாம் மீண்டும் அதே தவறை செய்தவர்களாக இருப்போம். ஒருகாலத்தில் விமான போக்குவரத்தில் மகாராஜா வின் பிம்பம் இருந்து வந்தது. ஆனால் இன்று விமான போக்குவரத்து சாதாரண மக்களுக்கு சொந்தமானதாக உள்ளது. அடல் ஜியின் ஆட்சிக் காலத்தில் நம்மிடம் விமான போக்குவரத்துக்கு ஒரு அமைச்சரும் இருந்தார். அந்த நேரத்தில் அமைப்பில் ஒரு மூலையில் இருந்து வேலை செய்து வந்தேன். விமானத்தில் மகாராஜாவின் உருவத்தை ஏன் பொறித்திருக்கிறார்கள் என்று நான் அவரிடம் கேட்டேன். அந்த நேரத்தில் மகாராஜா அளவிற்கு வசதி படைத்தவர்கள்தான் விமானத்தில் பயணம் செய்வார்கள். புகழ்பெற்ற ஓவியரான லக்‌ஷ்மண் வழக்கமாக வரையும் சாதாரண பொது மனிதனின் சித்திரத்தை தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன். பின்பு அடல் ஜியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டது.

நம் நாட்டில் சாதாரண செருப்பு போட்டிருக்கும் ஒரு நபர் ஏன் விமானத்தில் பயணம் செய்யக் கூடாது என்று நாம் கேட்டோம். உதான் திட்டத்தையும் நாம் கொண்டு வந்தோம். புதிய விமான நிலையத்தை கட்டியோ அல்லது இப்போதுள்ள விமான நிலையங்களை மேம்படுத்தியோ 100 விமான நிலையங்களை செயலுக்கு கொண்டுவருவது என்ற திசைவழியில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

சிறிய ஊர்களுக்கும் சென்று சேரும் வகையில் விமானங்கள் பறந்து செல்ல வேண்டும். 20-30 பேரை மட்டுமே ஏற்றிச் செல்லும் சிறிய விமானங்களாகவும் அவை இருக்கலாம்.  இன்றைய மக்களுக்கு வேகம் தேவைப்படுகிறது. எனவே ஒரு திட்டத்தை, குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களுக்கு என, உருவாக்கினோம். இதன்படி பயணத்திற்கான கட்டணம் ரூ. 2500 ஆக மட்டுமே இருக்கும். நாட்டின் வடகிழக்குப் பகுதிக்கு நாங்கள் முன்னுரிமை தருகிறோம். ஏனெனில் அந்தப் பகுதிகள் ஏராளமான பிரச்சனைகள் நிரம்பிய பகுதியாக உள்ளன. அங்கு தொடர்பு என்பது மிகவும் முக்கியமானதாக உள்ளது.

சகோதர, சகோதரிகளே,

ஒரு விஷயம் உங்களுக்கு வியப்பாக இருக்கும். நாடு விடுதலை பெற்ற பிறகு இதுவரையில் விலைக்கு வாங்கிய, செயல்பாட்டில் உள்ள விமானங்களின்  மொத்த எண்ணிக்கை சுமார் 450 மட்டுமே. தனியார்- அரசு ஆகிய இரண்டு துறையிலும் சேர்த்து இன்று செயல்பாட்டில் உள்ள விமானங்களின் எண்ணிக்கை வெறும் 450 மட்டுமே. விடுதலைக்கு பிறகு நாம் எட்டியுள்ள எண்ணிக்கை இதுதான். இந்த ஆண்டில் மட்டுமே 900க்கும் மேற்பட்ட விமானங்கள் வாங்குவதற்கான முன்பதிவை விமான போக்குவரத்துத் துறையில் உள்ள நிறுவனங்கள் செய்துள்ளன. அதாவது நாடு விடுதலை பெற்ற பிறகு இன்று வரை செயல்பாட்டில் இருந்த் 450 விமானங்களுக்கு  மத்தியில் ஒரே ஒரு ஆண்டில் மட்டுமே 900 புதிய விமானங்களுக்கான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. விமான போக்குவரத்து துறை எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இதிலிருந்தே நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பிற்கான புதிய தகுதியையும் விமான போக்குவரத்து துறை கொண்டு வருகிறது. சற்று நேரத்திற்கு முன்பு தேவேந்திர ஃபட்நாவிஸ் உங்களிடம் சொன்னது போல அதனோடு கூடவே கட்டமைப்பும் கூட வளர்த்தெடுக்கப்படுகிறது. தண்ணீரினால், நிலத்தினால், ஆகாயத்தினால் நமது பொருளாதாரம் எவ்வளவு உயிர்த்துடிப்பை பெறுகிறது? உலகத்தில் இது குறித்து ஓர் ஆய்வும் உண்டு. விமான போக்குவரத்து துறையில் ரூ. 100-ஐ முதலீடு செய்தால் சிறிது காலத்தில் அதன் மூலமாக சுமார் ரூ.325 உருவாக்கப்படுகிறது. அத்தகையதொரு வலிமை இந்தத் துறைக்கு உண்டு. வேலைவாய்ப்புக்கான ஏராளமான வாய்ப்புகளும் உள்ளன. அது இந்தியாவின் சுற்றுலா துறையையும் கூட வளர்த்தெடுக்கிறது.

இந்தியா, முற்றிலும் பன்முகத் தன்மை கொண்டதொரு நாடு. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஒரு மாவட்டத்தில் ஒரு மாதம் முழுவதும் தங்கினாலும் கூட அதை முறையாக பார்த்துவிட முடியாது. இந்த விமான போக்குவரத்து துறையும் அதன் வலிமையும் நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புதிய வலிமையைக் கொடுக்க முடியும். குறைந்தபட்ச முதலீட்டில் மிக அதிகமான பேருக்கு வாழ்க்கை வசதிகளை உருவாக்கித் தரக் கூடிய துறையாக சுற்றுலாத் துறை அமைந்துள்ளது. சுற்றுலா துறையில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவருமே, அது டாக்சி டிரைவராக இருந்தாலும் சரி, ஆட்டோ டிரைவராக இருந்தாலும் சரி, தங்கும் விடுதியின் உரிமையாளராக இருந்தாலும் சரி, சாலைஓரத்தில் பூ விற்கும் பெண்ணாக இருந்தாலும் சரி, கோயிலுக்கு வெளியே இருந்து கொண்டு வருவோருக்கு சேவை செய்பவராக இருந்தாலும் சரி, சுற்றுலாப் பயணியோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவருமே வருமானம் ஈட்டுகிறார்கள்.

எனவே விமான போக்குவரத்து துறையை சுற்றுலா துறையோடு சேர்த்து ஊக்கப்படுத்துவதாகவே நமது முயற்சி அமைகிறது. புதிய மும்பையில் இன்று நடைபெறும் பசுமைவழி விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா அந்த முயற்சியின் ஒரு பகுதியே ஆகும். நான் பங்கெடுக்கும் இத்தகைய தொடக்கவிழாக்களில் எல்லாம் தொடர்ந்து ஒரு கேள்வியை கேட்பது வழக்கம். எப்போது இந்த திட்டம் நிறைவு பெறும்? என்பதுதான் அந்தக் கேள்வி. ஏனென்றால் கடந்த காலத்தின் அனுபவம் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். அத்தகைய பணிக் கலாச்சாரத்திலிருந்து நம் நாட்டை வெளியே கொண்டுவருவதற்கு நாம் கடுமையாக வேலை செய்ய வேண்டியுள்ளது. இருந்தாலும் அதை நாங்கள் செய்தே தீருவோம். நீங்கள் ஒரு வேலையை எங்களுக்கு தந்தால் அதை நாங்கள் எப்படியாயினும் நிறைவேற்றியே தீருவோம்.

மும்பையும் மகாராஷ்ட்ராவும் இப்போது காண்கின்ற வகைப்பட்ட திட்டங்களை நினைக்கும் போது 2022-ம் ஆண்டையும் அதைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளையும் நான் நினைத்துப் பார்க்கிறேன். அவை எப்படி இருக்கும் என்று சற்றே கற்பனை செய்து பாருங்கள். கடந்த 20-25 ஆண்டுகளில் அதைப் பற்றி நீங்கள் சிந்தித்தே பார்த்திருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். 2022, 2023, 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளை நீங்கள் நினைத்துப் பார்த்தீர்கள் என்றால் புதிய மும்பை பசுமைவழி விமான நிலையத்திலிருந்து விமானங்கள் பறக்கத் தொடங்குவதை உங்களால் காண முடியும்.

இதே காலப்பகுதியில் உங்களது வாகனங்கள் 22 கிலோமீட்டர் நீளமான ட்ரான்ஸ் ஹார்பர் இணைப்புச் சாலையில் முழுவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கும். இதே காலப்பகுதியில் மும்பை நகரில் புறநகர் இரட்டைவழிப் பாதைக்கான வேலையும் கூட வேகவேகமாக நிறைவடைந்திருக்கும். அதைப் போலவே அதே நேரத்தில் உங்கள் பகுதியில் கடல் தொடர்பான அனைத்து திட்டங்கள் மட்டுமல்ல; நீர், நிலம், ரயில்வே ஆகிய அனைத்து திட்டங்களும் உங்கள் கண்களுக்கு முன்பாக உருவாகியிருக்கும். மறுபுறத்திலோ சத்ரபதி சிவாஜி மகராஜின் பிரம்மாண்டமான சிலையும் கூட தயாராக இருக்கும். ஒட்டுமொத்த சூழலும் எப்படி மாறவிருக்கின்றன என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க இயலும்.

எனவே உங்கள் அனைவருக்கும் எனது சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெகு விரைவிலேயே வரவிருக்கும் இந்த விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ஏறிப் பறப்பதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கவிருக்கிறது. இதே தருணத்தில் திருமிகு. தேவேந்திர ஜி, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சரான கஜபதி ராஜு ஜி, நிதின் கட்காரி ஜி மற்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி.



(Release ID: 1557415) Visitor Counter : 277


Read this release in: English , Urdu