குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

இளம் மருத்துவர்கள் தொழில் நெறிமுறைகளை நிலைநிறுத்தி ஒவ்வொரு நோயாளியையும் அன்பு, இரக்கத்துடன் நடத்த வேண்டும் : குடியரசுத் துணைத் தலைவர்

அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் 46வது பட்டமளிப்பு விழாவில் உரை

प्रविष्टि तिथि: 07 DEC 2018 2:28PM by PIB Chennai

இளம் மருத்துவர்கள் தொழில் நெறிமுறைகளை நிலைநிறுத்தி ஒவ்வொரு நோயாளியையும் அவரது நிதி நிலைமைக்கு அப்பாற்பட்டு அன்பு, இரக்கத்துடன் நடத்த வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு கேட்டுக்கொண்டுள்ளார். புதுதில்லியில் இன்று (07.12.2018) அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் 46வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய அவர், இந்த மருத்துவ நிறுவனம் நாட்டுக்கு பெருமை சேர்த்திருப்பதுடன் நோயாளிகள் பராமரிப்பு, கற்பித்தல், ஆராய்ச்சி துறைகளில் மிகுந்த சிறப்பு நிலையை அடைந்துள்ளது என்று கூறினார்.

அதிநவீன மேம்பாடுகளின் அடிப்படையில் மருத்துவக் கல்வியின் பாடத்திட்டம் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை திரு.நாயுடு வலியுறுத்தினார். தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பாடத்திட்டத்தை இதர எய்ம்ஸ் போன்ற நிறுவனங்களிலும், இதர மருத்துவக் கல்லூரிகளிலும் பின்பற்றலாம் என்று அவர் கூறினார்.

பல துறைகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் கொண்ட குழுக்கள்தான் இன்றைய நிலையில் அவசியம் என்று குறிப்பிட்ட குடியரசுத் துணைத் தலைவர், எய்ம்ஸின் பல்வேறு துறைகளிடையே ஆராய்ச்சி ஒத்துழைப்புகளை உருவாக்குதல், இதர சிறந்த மையங்களுடன் தொடர்பு ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று கூறினார்.

தரமான மருத்துவ சேவைகளை அனைவருக்கும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இந்த வகையில் நகர்ப்புறங்கள் மட்டுமன்றி, கிராமப்புறங்களிலும் அதி நவீன மருத்துவ சேவைகள் வழங்கி நகர்ப்புற – ஊரக இடைவெளியை குறைக்க வேண்டும் என்றார்.

மனித குலத்துக்கு நோய்களிலிருந்து விடுதலையை மருத்துவர்கள்தான் வழங்க முடியும் என்றும் அவர்களுடைய சேவை வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் உள்ள வேறுபாடுகளை நிர்ணயிக்கிறது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் கூறினார். மருத்துவர்கள்தான் மக்களின் உயிர் வாழ்க்கையை நீட்டிக்க முடியும் என்றும் மக்கள் மருத்துவர்களை பெரிதும் மதிப்பதால் அவர்கள் தங்களது தொழிலை மக்கள் சேவையாக கருத வேண்டும் என்று கூறினார்.

நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சிறப்பாக தேர்ச்சியடைந்த 31 மருத்துவ மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை, அமைச்சரும் எய்ம்ஸ் மருத்துவமனை தலைவருமான திரு ஜெ.பி.நட்டா, எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் பேராசிரியர் ரந்தீப் குலேரியா மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

குடியரசுத் துணைத் தலைவரின் முழுமையான உரைக்கு www.pib.nic.in என்ற வலை தளத்தைப் பார்க்கவும்

                                *****

சிஜெ/கோ


(रिलीज़ आईडी: 1555294) आगंतुक पटल : 114
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi